Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

            ஒரு நாட்டில் ஜனநாயகம் என்பது எதன் அடிப்படையில் முழுமையடைகிறது? வளர்ச்சி, முன்னேற்றத்தின் மூலம் என்றால் அதை மன்னராட்சியால் கூட சாத்தியப்படுத்த முடியும். அடிப்படை உரிமைகள் என்றால் அது கூட பல ஜனநாயகமற்ற நாடுகளில் படிப்படியாகப் போராடிப் பெறப்படுகிறது. அப்படியானால் மற்ற அரசு முறைகளிலிருந்து மக்களாட்சி எந்த தளத்தில் வேறுபட்டு நிற்கிறது? அதுதான் வெளிப்படைத்தன்மையான அரசாங்கம். மக்களால் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட மக்களாட்சியின் நிர்வாகம், எப்பொழுது அந்த மக்களிடம் உண்மையாக ஒளிவு மறைவின்றி நடந்து கொள்கிறதோ, அப்பொழுதுதான் அங்கு ஜனநாயகம் முழுமையடைகிறது. அப்படி இந்தியாவில் ஜனநாயகத்தை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்லும் முயற்சியில் அமல்படுத்தப்பட்டதுதான் தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

          இதை சாமானியரின் பார்வையிலும் அணுகலாம். ரேஷன் அட்டையைப் புதுப்பிக்கவேண்டி விண்ணப்பித்தவர், அது என்ன ஆனது என்று அரசு அலுவலகத்தில் காத்திருக்கும் காட்சியை நம்மால் பலமுறை காண முடியும். பிறப்புச் சான்றிதழ் என்ன ஆனது, புது வீட்டிற்கு மின் இணைப்பு எப்பொழுது கிடைக்கும்; நடவடிக்கை எடுக்கிறோம் என்கிறார்களே, குறைந்த பட்சம் அது எந்த நிலையில் இருக்கிறது; ஒரு ஜனநாயக நாட்டில் இந்த கேள்விகளுக்கெல்லாம் எளிதில் பதில் கிடைப்பதில்லை என்றால் அங்கு வெளிப்படையான நிர்வாகம் இல்லையென்று பொருள். என்னதான் நடக்கிறது என்று மக்களுக்குத் தகவல்கள் சென்றால் நிர்வாகம் விரைந்து பணி புரியும். மேலும் அப்படி தகவல்கள் பெறுவது மக்களாட்சி என்ற கோட்பாட்டில் மிக முக்கியமான உரிமையும் கூட. இந்த தர்க்கத்தின் அடிப்படையில் உருவானதுதான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். சரி, இது உருவானதன் பின்னணி என்ன?

          தகவல் அறியும் உரிமை பற்றி உச்ச நீதிமன்றம் 1976-ம் ஆண்டிலேயே சொல்லியிருக்கிறது. “ஒவ்வொரு குடிமக்களுக்கும் பேச்சுரிமை எழுத்துரிமை உண்டு என்கிறது அரசமைப்புச் சட்டத்தின் 19(1) பிரிவு. அதே பிரிவின்படி தகவல்களைப் பெறவும் உரிமையுண்டு. ஏனெனில், நம் நாடு மக்களாட்சி அடிப்படையில் இயங்குவதே”, என்றது உச்சநீதிமன்றம். அப்பிரிவு வெளிப்படையாகத் தகவல் அறியும் உரிமை பற்றிச் சொல்லவில்லை என்றாலும், தகவல்களை அறிந்துகொள்வது கருத்து சுதந்திரத்தின் ஒரு அங்கமே என்பதுதான் அதன் தர்க்கம்.

          இந்திரா காந்தி ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசர நிலை, திரும்பப் பெற்ற பிறகு 1977-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் “வெளிப்படையான நிர்வாகத்தைக் கொடுப்போம்” என்ற வாக்குறுதியுடன் ஜனதா கூட்டணி நின்று வெற்றி பெற்றது.  வெற்றி பெற்றதும் மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசு ‘ரகசிய பாதுகாப்புச் சட்டம் 1923’ சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவதன் தொடர்பாகவும், அரசின் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது என்பது தொடர்பாகவும் ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமித்தது. ஆனால் குழு அமைத்ததோடு அந்த வேலை நின்று போனது. ஆட்சியும் மூன்று ஆண்டுகளுக்குள் கவிழ்ந்தது. அதன்பிறகு பத்தாண்டுகள் தகவல் அறியும் உரிமை தொடர்பாக அவ்வப்போது பேச்சுதான் நடந்தே ஒழிய செயலில் ஒன்றும் நடக்கவில்லை. பிறகு 1989 தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக தேசிய முன்னணி களத்தில் நின்றது. மீண்டும் ‘வெளிப்படையான நிர்வாகத்தைக் கொடுப்போம்’ என்ற வாக்குறுதியுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பிரதமர் வி.பி.சிங், “ரகசிய பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவோம், மக்களின் தகவல் பெறும் உரிமையை நிலை நாட்டுவோம்”, என்று அறிவித்தார். ஆனால் அவர் தலைமையிலான ஆட்சியிலும் அது குறித்து எதுவும் நடக்கவில்லை. பிறகு மீண்டும் பத்தாண்டுகளுக்கு முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை. ஆனால் பல ஆண்டுகளாக அரசியல் தலைவர்கள் இது குறித்துப் பேசி வந்ததால் தகவல் அறியும் உரிமைகள் பற்றி மக்களுக்குச் சிறிது விழிப்புணர்வு வர ஆரம்பித்திருந்தது.

          இப்படி இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பேச்சு அளவிலேயே முடங்கிப் போயிருந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் செயல்பாட்டுக்கு வர முதல் படி எடுத்து வைத்தது தமிழகம்தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? 1997-ல் அப்போதைய திமுக ஆட்சி, விழிப்புணர்வு அளவிலேயே இருந்த இக்கருத்தாக்கத்தை சட்டமாக்கி, தமிழகம் நோக்கி இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்தது. ஆனால் ஜனாதிபதி ஒப்புதல் பெற்ற பின்பும் இது அமல்படுத்தப்படாமல் போனது. மேலும் இதில் போதாமைகளும் நிறைய இருந்தன. ஆனால் தமிழகம் துவக்கி வைத்தது இந்தியாவின் மற்ற பகுதிகளில் நிறைவேறத் துவங்கின. கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, கோவா, ஜம்மு-காஷ்மீர், மத்திய பிரதேசம், அசாம், ராஜஸ்தான் மாநிலங்களில் சிறு சிறு மாறுதல்களுடன் இச்சட்டம் நிறைவேறின. தகவல் தர மறுக்கும் அதிகாரிக்கு அபராதம் என்ற விதியை சட்டமாக்கியது மகாராஷ்டிரம். மேலும் மனித உயிர் தொடர்பான தகவல்கள் 24 மணி நேரத்திற்குள் தரப்பட வேண்டும் என்ற விதியையும் அறிமுகப்படுத்தினார்கள். இது இன்றைய தேசிய சட்டத்திலும் உள்ளன.

          இச்சட்டத்தை பல மாநிலங்கள் தனித்தனியாக நிறைவேற்றினாலும், தேசிய அளவிலான சட்டம் நடைமுறைக்கு வர அதிகம் காரணமாக இருந்த மாநிலம் ராஜஸ்தான்தான். ஏனெனில் இச்சட்டம் வர அங்கு ஒரு மக்கள் இயக்கமே நடந்தது! அருணா ராயின் ‘மஸ்தூர் கிசான் சக்தி சங்காதன்’ என்ற தொழிலாளர்/விவசாய அமைப்பு, அரசு நிர்வாக வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று கடுமையாகப் போராடியது. அதன் விளைவாகத்தான் 2000-ல் ராஜஸ்தான் அரசு தகவல் பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்றியது. பிறகு தேசிய சட்டம் ஒன்றைக் கொண்டு வர மத்திய அரசு பாராளுமன்ற நிலைக்குழு ஒன்றை அமைத்தபோது அதில் அருணா ராய் பங்கேற்று முக்கியப் பங்காற்றினார். அருணா ராயின் இயக்கத்திற்குக் கிடைத்த வெற்றியைப் பார்த்து மகாராஷ்டிராவில் அன்னா ஹசாரே போராட்டம் நடத்தினார். அதன் விளைவாக 2002-ல் மகாராஷ்டிரா இச்சட்டத்தை நிறைவேற்றியது. 2001-ல் தில்லி மாநில அரசு இச்சட்டத்தை நிறைவேற்ற, அரவிந்த் கேஜ்ரிவால் தன்னுடைய ‘பரிவர்த்தன்’ என்ற இயக்கத்தின் மூலமாக இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு செய்ய ஆரம்பித்தார். மேலும் இச்சட்டத்தைப் பயன்படுத்தி அரசு ஊழல்களை வெளியே கொண்டுவரத் துவங்கினார். இந்த இயக்கங்களோடு ‘தகவல் பெறும் உரிமைக்கான தேசிய மக்கள் பிரச்சார இயக்கம்’ என்ற இயக்கமும் சேர்ந்துக்கொள்ள, பிரச்சாரம் கடுமையானது. ஏற்கனவேயே 1997 மாநில முதல்வர்கள் மாநாடு இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தது. எனவே இச்சட்டம் குறித்த சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரிக்க எச்.டி.சௌத்ரி என்பவரை நியமித்து, மாநிலங்கள் இச்சட்டம் குறித்துக் கருத்து தெரிவிக்கும் படி சுற்றறிக்கையையும் அனுப்பி வைத்தது மத்திய அரசு. எச்.டி.சௌத்ரியின் அறிக்கையையும் மாநிலங்களின் கருத்துகளையும் சேர்த்து ஆராய்வதற்காக மத்திய அரசு ‘செயலாளர்கள் குழு’வை நியமித்தது. சிறிய மாற்றங்களுடன் அதன் அறிக்கை தயாராக, அதன் அடிப்படையில் இச்சட்டத்திற்கான வரைவு மசோதா தயாரிக்கப்பட்டது. வாஜ்பாய் தலைமையிலான அரசு இருந்தபோது ‘தகவல் அறியும் சுதந்திரச் சட்டம் 2002’ இரு அவையிலும் நிறைவேறி ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்றது. ஆனால் போதிய பயன்களை இச்சட்டம் தராததாலும், அதை அமல்படுத்துவதற்கான கட்டமைப்புகளை சரியாக உருவாக்காததாலும், இச்சட்டம் மக்களுக்குப் பெரிதும் பயனில்லாமல் போனது.

          2004-ல் வாஜ்பாய் அரசின் காலம் முடிவுக்கு வர, “மக்கள் கேட்கும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை நிறைவேற்றுவோம்” என்ற வாக்குறுதியுடன் தேர்தல் களத்தில் இறங்கி, வெற்றியும் பெற்றது காங்கிரஸ். ஆனால் இம்முறை ஆட்சி அமைத்ததும் இச்சட்டம் நிறைவேற்றத் தேவையான பணிகள் முழு வீச்சில் நடைபெறத் துவங்கின. பரிந்துரைகள் பெறும் பொறுப்பு தேசிய ஆலோசனைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அது பல்வேறு அரசு சாரா நிறுவனங்களிடம் கருத்து கேட்டு, முக்கிய திருத்தங்களையும் கோரிக்கைகளையும் கொண்ட அறிக்கையைத் தயாரித்தது. அதன் அடிப்படையில் ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2004’ என்ற மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்மசோதாவை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் பொறுப்பு ‘பொதுமக்கள் குறைதீர்ப்பு, சட்டம் மற்றும் நீதித்துறை நாடாளுமன்ற’ நிலைக்குழுவிடம் தரப்பட்டது. தமிழக மாநிலங்களவை உறுப்பினர் திரு.சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் உருவான இந்நிலைக்குழு இச்சட்டம் தொடர்பான அனைத்து தகவல்களையும் திரட்டி, தீவிரமாக ஆய்வு செய்து, பல பரிந்துரைகள் அடங்கிய ஒரு முழுமையான அறிக்கையை சமர்ப்பித்தது. இதனை பிரணாப் முகர்ஜி தலைமையிலான உயர்நிலைக்குழு ஆய்வு செய்தபின் மத்திய அரசவையும் இதற்கு ஒப்புதல் அளித்தது. இரு அவைகளும் இச்சட்டத்தை நிறைவேற்ற, 2005 ஜூன் 15-ம் நாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். அந்த ஆண்டு அக்டோபர் 15-ம் நாளிலிருந்து இச்சட்டம் ஜம்மு-காஷ்மீர் தவிர்த்து நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது. இதுதான் தகவல் பெறும் உரிமை இந்தியாவில் சட்டமான நெடும் வரலாறு.

சரி, இச்சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன என்பதை சுருக்கமாகப் பார்த்துவிடலாம்.

1. யாரிடமிருந்து தகவல்களைப் பெற முடியும்? மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பள்ளி, கல்லூரிகள், நீதிமன்றங்கள், அரசிடமிருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவி பெறும் நிறுவனங்கள், ஆகியவற்றிடமிருந்து தகவல்களைப் பெற முடியும். வெளிநாடு வாழ் இந்தியர்களாலும் கூட இச்சட்டத்தைப் பயன்படுத்த முடியும்.

2. மனுவை விண்ணப்பிக்கும் கட்டணம் பத்து ரூபாய். பணமாகவோ, கேட்பு வரைவோலையாகவோ(demand draft), காசோலையாகவோ(cheque), செலுத்தலாம். செலான் என்றால் ரசீதை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். தமிழக அரசின் துறைகளிடம் தகவல்கள் பெற வேண்டுமென்றால் இன்னும் எளிது. விண்ணப்பத்தில் பத்து ரூபாய் court fee stamp வாங்கி ஒட்டிவிட்டால் போதும். மனுவை ‘பொதுத் தகவல் அதிகாரி(Public Information Officer)’க்கு எழுத வேண்டும். துறை மாறிச் சென்றாலும் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விண்ணப்பம் சேர்ந்து விடும். கொரியர் மூலம் அனுப்ப வேண்டாம். பதிவுத் தபாலில் அனுப்பவும், அல்லது நேரடியாகச் சென்று சமர்ப்பிக்கவும். மறக்காமல் ரசீது வாங்கவும்.

3. 30 நாட்களுக்குள் தகவல் தர வேண்டும். மனித உயிர் தொடர்பான தகவல்கள் 48 மணிநேரத்திற்குள் தர வேண்டும். தவறான முகவரிக்குச் சென்றால்  ஐந்து நாட்கள் அதிகமாகும். உதவித் தகவல் அதிகாரியிடம் விண்ணப்பம் சென்றால் மேலும் ஐந்து நாட்கள் ஆகும். மூன்றாம் தரப்பினர் குறித்த தகவல்கள் என்றால் உரிய அனுமதியோடு 40 நாட்களுக்குள் தகவல் தர வேண்டும்.

4. கோப்புகள், ஆவணங்கள், வரைபடங்கள், உத்தரவுகள், புகார்கள், இப்படிப் பலவும் தகவல்கள்தான். அவை காகிதமாகவோ, மின்னஞ்சலாகவோ, சிடியாகவோ இருக்கலாம். அவற்றை பெற கட்டணம் உண்டு. ஒரு A4 காகிதம் 2 ரூபாய். சிடி 50 ரூபாய். பதிவேடுகளைப் பார்வையிட முதல் ஒரு மணி நேரத்திற்குக் கட்டணமில்லை. அதன்பின் ஒவ்வொரு கால் மணி நேரத்திற்கும் 5 ரூபாய் கட்டணம் (தமிழக அரசுத் துறைகள் என்றால் ஒரு மணி நேரத்திற்கு ஐந்து ரூபாய்). தாழ்த்தப்பட்டவர்கள், மலைசாதியினர் மற்றும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் இருப்பவர்களுக்குக் கட்டண விலக்கு உண்டு. உரிய காலத்திற்குள் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றால் தகவல்கள் விண்ணப்பதாரரிடம் இலவசமாக அனுப்பி வைக்கப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபராதம் உண்டு.

5. பெரும்பாலும் பெரிய பதில்களைக் கோரும் மேலோட்டமான ‘ஏன்’ கேள்விகளைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் கேள்வி தெளிவாக இல்லை என்று அவை நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. புகார் கொடுத்தும் உங்கள் தெரு விளக்கு இன்னும் எரியவில்லையா? அப்படியென்றால், இந்த நாளன்று புகார் அளித்தோமே ஏன் இன்னும் சரிபார்க்கவில்லை என்று கேட்கலாம். கூடவே எத்தனை பணியாளர்கள் உள்ளனர், புகார் கொடுத்த அன்று பணியாளர்கள் வராத காரணம் என்ன, அவர்கள் வேறு எங்கே பணியில் இருந்தார்கள், பணியிடங்கள் காலியாக உள்ளனவா, புகார் எந்த நிலையில் இருக்கிறது, என்று துணைக்கேள்விகள் மூலம் கிடுக்கிப்பிடி போடலாம். சாமானியரான நமக்கு கடைசியில் வேலை நடக்க வேண்டும் என்பதுதானே முக்கியம்? அது விரைவில் நடக்க என்ன மாதிரி கேள்விகள் கேட்கவேண்டுமோ அப்படி கேட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே வந்து வேலையை கவனிப்பார்கள். இந்தியாவில் பல இடங்களில் இது வெற்றிகரமாக வேலை செய்திருக்கிறது.

6. எதற்காக இந்தத் தகவல் உங்களுக்கு வேண்டும் என்று யாரும் கேட்க முடியாது. நாமும் சொல்லத் தேவையில்லை. தகவல்கள் தருவதில் அரசே சில விதிவிலக்குகளை வைத்திருக்கிறது. எனவே அதுவே தரமுடியாது என்று சொல்லிவிடும். ஆனால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தரமுடியாது என்ற முடிவுக்கு என்ன காரணங்கள் என்று கேட்க முடியும்.

7. நாள், இடம், பெயர், முகவரி, பெறுநர், கேள்விகள், கட்டணம் செலுத்தப்பட்டதற்கான ரசீது, இவை விண்ணப்பத்தில் இடம்பெற்றால் போதும். எங்கு வேலை பார்க்கிறோம் அதெல்லாம் தேவை இல்லை. அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி தர கட்டாயம் இல்லை. ஆனால் உங்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பொதுத் தகவல் அதிகாரி உங்களைத் தொடர்பு கொள்ள அவை உதவியாக இருக்கும் என்று நினைத்தால் தரலாம்.

          இந்தத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நிறைவேறிய பின் ‘அரசு ரகசியச் சட்டம் 1923’ பின்னே போய் விட்டது. மற்ற சட்டங்களை விட தகவல் அறியும் உரிமைச் சட்டமே மேலோங்கி நிற்குமாறு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. உலகில் இந்தியா மட்டும்தான் இச்சட்டத்தை இயற்றியிருக்கிறதா என்றால் இல்லை. 1766-ம் ஆண்டிலேயே சுவீடனில் இது நிறைவேற்றப்பட்டுவிட்டது! 1966-ல் அமெரிக்கா கொண்டு வந்தது. 2005-ல் நாம் நிறைவேற்றியபோது 55 நாடுகளில் இச்சட்டம் நடைமுறையில் இருந்தது. இன்று 85-க்கும் அதிகமான நாடுகளில் உள்ளது. ஏழை நாடுகளிலும் உள்ளது, தோல்வியுற்ற அரசு என்று சொல்லப்படும் பாகிஸ்தானிலும் உள்ளது. இந்தியாவில் எத்தனையோ சட்டங்களுக்கு முன்னோடியாய் இருக்கும் தமிழகம்தான் இதற்கும் முன்னோடி என்பதை நாம் மகிழ்வுடன் கூறிக்கொள்ளலாம்.

          இக்கட்டுரை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை வெறும் அறிமுகம்தான் செய்திருக்கிறது. இச்சட்டம் குறித்த மேலதிக தகவல்களுக்கு எஸ்.ஏ.எம்.பரக்கத் அலியின் ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ என்ற நூலை வாசிக்கவும். அந்நூலின் துணையுடன்தான் இக்கட்டுரையை என்னால் எழுத முடிந்தது. விகடன் பிரசுரம் பதிப்பித்திருக்கிறது. இரும்புத் திரைகள் நீங்கி வெளிப்படையான முழுமையான ஜனநாயகம் அமைவதன் முக்கியப் படியே இச்சட்டம். இச்சட்டத்தை நாம் நல்ல குடிமக்களாக நன்றாகப் புரிந்துகொண்டு, இதை நல்ல நோக்கங்களுக்குப் பயன்படுத்திக்கொள்வோம்.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி