Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

அனிதாவும், பல அநீதிகளும்!

          அனிதாவின் தற்கொலை உலுக்கியெடுத்துவிட்டது. “தற்கொலை தீர்வே இல்லை”, என்ற வாதத்தை முன்னிலைப்படுத்தி நேற்று முன்தினம் பலர் திடீர் மனோதத்துவ நிபுணர்களாக மாறியதைப் பார்த்தபோது ஆத்திரமாக வந்தது. ஆனால் பாத்ரூம் கண்ணாடியின் முன் ஒரு சக மனிதிக்காக கையறு நிலையில் இரண்டு முறை அழுது, சோர்வில் தூங்கி மறுநாள் கண்விழித்து சற்றே திடமான மனநிலையில் அமர்ந்து யோசிக்கையில், அனிதாவின் தற்கொலை துர்நிகழ்வில் ஏதோ ஒரு பக்கம் நிற்பதற்கு ஒவ்வொருவருக்கும் இருக்கும் காரணங்களில் பல்வேறு சிக்கலான காரணிகள் சம்பந்தப்பட்டிருப்பதை உணர முடிந்தது. இத்துர்நிகழ்வை அரசியலாக்குபவர்கள் நீட்டுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்களாக, சமூக நீதி பேசுபவர்களாக, இடஒதுக்கீட்டிற்கு ஆதரவானவர்களாக, ஆளும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிரானவர்களாக, மோடி எதிர்ப்பாளர்களாக, தாழ்த்தப்பட்டோர் உரிமைகள் செயல்பாட்டாளர்களாக, இந்திய இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்குபவர்களாக, இவற்றுள் ஒன்றையோ பலவற்றையோ காரணிகளாகக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொன்றும் மற்றொன்றோடு ஏதோ ஒரு வகையில் தொடர்புள்ளவை, ஒவ்வொன்றும் தனித்தனியாக ஆழமானவை. இதை அரசியலாக்காதீர்கள் என்று சொல்பவர்கள் நீட்டுக்கு ஆதரவானவர்களாக, பார்ப்பனீய ஆதிக்க மனோபாவம் கொண்டவர்களாக, மத்திய மாநில அரசுகளுக்கு ஆதரவானவர்களாக, மோடியை ஆராதிப்பவர்களாக, இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களாக, சமூக நீதி பற்றிய அறிவே அற்றவர்களாக, மெரிட் சிஸ்டத்தைத் தூக்கிப் பிடிப்பவர்களாக, இவற்றுள் ஒன்றையோ பலவற்றையோ காரணிகளாகக் கொண்டிருக்கிறார்கள் (தற்கொலையை எதிர்ப்பவர்கள் என்ற பிரிவு இதற்குள் பிரத்யேகமாக அடங்காது; விளக்கம் பின்னால்). ஆதிக்க உணர்வு கொண்டவர்களின் வன்மக் கருத்துகளும் மனிதத்தன்மையற்ற எள்ளலும் இன்னும் எனக்குள் வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியபடி இருக்கிறது. அதுபோக ‘தற்கொலை தீர்வல்ல’ என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி பிரச்னையை ஆற்றுப்படுத்த முயல்பவர்களின் கருத்தில் ஒரு ஆபத்தான, அபத்தமான விஷயம் உள்ளது; அவை ஏதோ மாற்றுத்தரப்பு ‘தற்கொலைதான் தீர்வு’ என்ற கருத்தைக் கொண்டிருப்பதுபோன்ற பொருளைத் தருகின்றன. அது முற்றிலும் தவறான பார்வை. ‘தற்கொலை தீர்வல்ல’ என்பதில் இங்கு யாருக்குமே மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் இத்தற்கொலையை ஒரு சிறுமியின் மனதிடத்தோடும் உளவியலோடும் மட்டுமே சுருக்கிவிட்டு பிரச்னை பூதத்தைக் கண்டும் காணாமல் நகர்வதென்பது பச்சை அயோக்கியத்தனம். அந்த பூதத்தைப் பார் என்று மறுசாரார் கூக்குரலிடுவதுதான் அவர்களுக்கு அசிங்க அரசியலாகப் படுகிறது என்றால், அப்படிப்பட்ட அரசியல் இன்னும் அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது என்றே கொள்ளவேண்டும். மத்திய அரசை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட நமக்கில்லாத தைரியம் அனிதாவுக்கு இருந்திருக்கிறது. ஒவ்வொருவராக நம்பிக்கையை அளித்து அளித்து விலக்கியதும் ஒருகட்டத்தில் விரக்தியில் ‘போங்கடா வெண்ணைகளா’ என்று இறந்துபோயிருக்கிறார். அவரின் மன உளைச்சலை, அவருக்கு நேர்ந்த அநீதியை அங்கீகரிக்கும் தைரியம் நமக்கு முதலில் வேண்டும். அதை விட்டுவிட்டு ‘அவர் தைரியமாக வாழ்க்கையை எதிர்கொண்டிருக்க வேண்டும்’ என்று பாடம் நடத்துவது அருவெறுப்பாக இருக்கிறது. ‘அனிதா அவசரப்பட்டுவிட்டார்’ என்ற துக்கத் தொனிக்கும் ‘இதற்கெல்லாம் தற்கொலை செய்துகொண்டது முட்டாள்தனம்’ என்ற நிராகரிப்புத் தொனிக்கும் பல்வேறு தளங்களில் வேறுபாடு இருக்கிறது.

          உயர் அடுக்குகளில் இருப்பவர்கள் சாதாரணமாக ஒன்றை சொல்வார்கள்: “இதுபோனால் வாழ்க்கையே போய்விடுமா? இது இல்லையென்றால் இன்னொன்று”. வயிறு நிரம்பிய பின் எழும் இந்த தத்துவார்த்தம் சமூக நடைமுறையில் சாத்தியமாவதில் யாருக்குத்தான் ஆசையில்லை? ஆனால் இது போனால் இன்னொன்று என்ற மனநிலையை அனைவரும் அடைய இந்த சமூகம் சமமான வாய்ப்புகளை வழங்கிவிடவில்லையே? பல நூற்றாண்டு கால சாதிய ஒடுக்குமுறைகளால் அடுத்த வேளை சோற்றுக்கே நிச்சயமில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் குடும்பத்திலிருந்து வரும் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்துப் பெண், பொது சமூகத்திற்கு எதிராக ஆயுதத்தைத் தூக்கக்கூட வரலாற்றுக் காரணங்களைக் கைக்கொள்ளும் தேர்வு இருக்கும் ஒருவர், தன் சமூகத்திற்கான விடிவாகக் கல்வியை கெட்டியாகப் பிடித்துக்கொள்ள முடிவு செய்கிறார். ‘தோல்வியைத் தாங்கும் குறைந்தபட்ச மனப்பக்குவ’த்தைக் கற்றுத்தராத, சமமாகக் கற்றுத்தர முடியவே முடியாத ஒரு கல்விமுறையில், ‘தான் படித்து டாக்டரானால் தன் சமூகத்தையே ஒரு படி முன்னேற்றலாம்’, என்ற பெருங்கனவோடு படிக்கிறார். முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு இருக்கும் இந்த உணர்வை ஒத்துணர்வு இல்லாத மேல்தட்டு மக்களால் புரிந்துகொள்ளவே முடியாது. தன் சமூகத்தின் ஒட்டுமொத்த கனவுகளை பாரம் என்றும் பாராமல் விரும்பி சுமக்கும் தவம் அது. அப்படிப்பட்ட ஒருவருக்கு தோல்வி என்பது பெரும்பாலும் வெளியிலிருந்து வாய்ப்பின்மையால், சமூக அநீதிகளால் ஏற்படுகிறது. அவரிடம் போய் ‘தோல்வி என்பது மனம் சார்ந்தது’, என்று வியாக்கியானம் பேசுவது குரூரமான செயல். ஏமாற்றம் அடைந்திருக்கும் ஒருவரைத் தேற்றும் நல்ல நோக்கத்தில் அவர் உயிருடன் இருந்தபோது ‘அதான் எஞ்சினியரிங் இருக்கே, அது படிச்சு உன் சமூகத்தை முன்னேற்றலாம்’ என்று தட்டிக்கொடுப்பது வேறு. ஆனால் அவர் இறந்தபிறகு ‘அதான் எஞ்சினியரிங் இருக்கே, அது படிச்சு தன் சமூகத்தை முன்னேற்றியிருக்கலாமே’ என்று விட்டேத்தியாகப் பேசுவதை எதில் சேர்ப்பது? தோல்விகளைத் தாங்கும் பக்குவத்தை நம் கல்விமுறை கற்றுத்தரவில்லை, கற்றுத்தரவேண்டும் என்று விரும்புவது மிகவும் நியாயமானது, சரியானது. அதே கல்விமுறை ‘சமூக நீதி’ என்ற கருத்தையும் நம் மரமண்டைக்குள் ஏற்றவில்லையே? அதையும் சேர்த்து விரும்பினால்தானே அது ஒரு முழுமையான எதிர்பார்ப்பாக இருக்கும்? மாணவர்களுக்கு மனப்பக்குவத்தை வளர்ப்பதில் நம் கல்விமுறை தோற்றுவிட்டது என்றால், மனப்பக்குவத்தில் சாதியத்தின் பங்கை உணர்த்தி சமூக நீதியை சொல்லிக்கொடுப்பதிலும் இந்தக் கல்விமுறை தோற்றுவிட்டது என்று நாம் சேர்த்தே பதிவு செய்யவேண்டும். அந்த சமூக நீதி தெரிந்திருந்தால் “தற்கொலையில் என்ன சாதி வித்தியாசம்? அனைத்து தற்கொலைகளையும் சமமாக பாவித்து எதிர்க்கவேண்டும்” என்றெல்லாம் தட்டையாகப் பேசி கடந்திருக்க முடியாதே? உயிருடன் இருப்பவர்களை சாதி கடந்து சமமாக பாவிக்க துப்பில்லை, இறப்பை மட்டும் என்ன பாவித்து.

          துவக்கத்திலிருந்தே நீட் வேண்டாம் என்பதே என் நிலைப்பாடாக இருந்துவந்தது. ஆனால் ஒருகட்டத்தில் மத்திய அரசு மூர்க்கத்தனமாக இதை நடைமுறைப்படுத்த முனைந்தபோது, அதை எதிர்க்கும் காத்திரமான சக்திகள் மாநிலத்தில் இல்லை என்று உணர்ந்தபோது ‘சரி, நீட்தான் எதிர்காலம் ஆகப்போகிறது, அதை எதிர்கொள்ளவாவது குறைந்தபட்சம் நாம் தயாராக இருக்கவேண்டும்’ என்ற கவலை வந்தது. இப்பொழுது மொத்தமாக நீட்டின் மீது மரியாதை போய்விட்டது. மிகவும் மனதுடைந்து போயிருக்கிறேன். ‘மத்திய அரசு கொன்றுவிட்டது என்று உணர்ச்சி வேகத்தில் பேசுகிறார்கள் சிந்திக்காத அறிவுகெட்ட மக்கள்’ என்று சிலர் அறிவுஜீவியாக நினைத்துக்கொண்டு வறட்டுத்தனமாக அவதானிப்பதைப் பார்க்கிறேன். “அனிதாவின் அப்பா அம்மா அவருக்கு புத்திமதி சொல்லியிருக்க வேண்டும்” என்று மந்திர் பவன் வித்யாலயா பள்ளிகளின் பி.டி.ஏ. மீட்டிங் ரேஞ்சுக்கெல்லாம் பதிவுகளைப் பார்க்க முடிகிறது. ‘உணர்ச்சிவசப்படும் கூட்டம்’ என்று அவர்கள் லேபிள் ஒட்டி நகர்ந்தால் பதிலுக்கு ‘சரிங்க சிட்டி, ஆக்டிவேட் எம்பதி மோடு’ என்று பதில் லேபிள்தான் ஒட்ட முடியும், வேறென்ன. வெறுமையாக உணர்கிறேன். தர்க்கப்பூர்வமாக பேசுகிறேன் பேர்வழி என்று “அப்படிப்பார்த்தால் தோல்வியடைந்த அனைத்து தலித்துகளும் தற்கொலை செய்துகொண்டிருக்க வேண்டுமே?” என்று ஈரமே இல்லாமல் கேட்பதைப் பார்க்கும்போது எந்தளவிற்கு அநீதி உறைக்காமல் மனசாட்சி காய்ச்சி அடிக்கப்பட்டு வளர்ந்திருக்கிறார்கள் என்று மிகவும் ஆயாசமாக இருக்கிறது. இந்தக் கேள்வியை ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்துக் குடும்பத்தின் கண்களைப் பார்த்து நேரில் கேட்க முடியுமா? முடியும் என்பவர்களுக்கு இதோ டாஸ்க் தருகிறேன். அவர்கள் முன் சென்று “ஆனா உங்க வீட்டுப் பொண்ணு சாகலியே?”, என்று இடுப்பில் கைவைத்தபடி கேள்விக்கணையை வீசிய பெருமிதத்தோடு நிற்கவும். வரிசையில் வந்து காறித் துப்புவார்கள். அதே பொசிஷனில் நின்றபடி வாங்கிக்கொள்ளவும். நன்றி.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி