Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஹாசிப் கான்


Courtesy: Vikatan

          எல்லோரைப் போலவும் பல்வேறு கார்ட்டூன் சித்திரங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு கார்ட்டூனின் அங்கமாகவே உணர்ந்தது ஹாசிப் கானின் சித்திரங்களில்தான். First person camera போல் இதோ ஒரு first person cartoon. டரியல் ஆகி ஆப்பரேஷன் தியேட்டரில் நிராதரவாகப் படுத்திருக்கிறோம். அரை போதையில் மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தால்... மூஞ்சிக்கருகே ஐந்து சர்ஜன்கள் ‘ஹேப்பி நியூ இயர்’ என்று வரவேற்க, “என்னது இன்னும...் முடியலியா?” என்று மிச்ச சொச்ச உயிரும் போகிறது. இந்த சித்திரத்தில் நாமும் ஒரு பாத்திரம். ஹாசிப் கானின் நகைச்சுவை சித்திரங்களில் எனக்கு மிகவும் பிடித்தது இதுதான். நான்கு வருடங்களுக்கு முன் இதைப் பார்த்தவுடன் நிலைகொள்ளாமல் சிரித்தபடி நிலைமையை நொந்துகொண்டது இன்னும் நினைவில் இருக்கிறது. வயதாகவே ஆகாது இந்த கலாட்டூனுக்கு. வருடா வருடம் சர்ஜன்கள் மட்டும் மாற, காட்சி என்னவோ அப்படியேதான் இருக்கப்போகிறது. மன்மோகன் இடத்தில் மோடியை கற்பனை செய்து பார்த்தேன். இன்னும் அதிக சிரிப்பு, இன்னும் அதிக கடுப்பு.

          வட்டியும் முதலும் படிப்பதற்காக ஆனந்த விகடன் வாங்க ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் வட்டியும் முதலும் ஓவியங்களைப் பார்ப்பதற்காகவும் வாரங்களை எதிர்நோக்கிக் காத்திருப்பது நடந்தது. எழுத்திலும் காட்சியிலும் இருவரும் கலந்துகட்டி மனிதத்தைக் கடத்திய அந்த ஆண்டுகள் பலரை நல்மனிதராக செதுக்கியிருக்கும். ராஜா வேடம் தரித்த ஒருவர் டீக்கடை பெஞ்சில் அமர்ந்து டீயை ஊதிக்கொண்டிருப்பார். மனதைப் பிசையும் சித்திரம் அது. அவருடைய டிஜிட்டல் தூரிகை ஒரு ஆயுதம். குடிசைகள் எரிந்துகொண்டிருக்க அதில் குளிர்காய்ந்துகொண்டிருக்கும் ராமதாஸ் படம் அந்த ஆயுதத்தின் உச்சக்கட்ட அடி. ஏதேதோ கனவுகளை நம்பி ஆதரிக்க ஆரம்பித்து ஒருகட்டத்தில் சாதியரசியலுக்கு வலுசேர்க்கும் ஜனநாயக சக்தியாக மாறிப்போன பல்வேறு அப்பாவிகளை அந்த ஒரு சித்திரம் வண்டி வண்டியாக மீட்டு வந்திருக்கும், அதில் சந்தேகமே இல்லை.

          சில வடிவங்களை வரைபடங்களாக்கி அவர் உணர்த்தும் அவலங்கள் நம் நெஞ்சை உறுத்தும். நிர்பயா ஒரு ஹேண்ட்பேகைத் தூக்கிக் கொண்டு கிழிந்த உடையுடன் ஓடுவார். பாரத மாதாவாக அவரை சித்தரித்திருப்பார் ஹாசிப் கான். இன்று வரை பல்வேறு வட இந்திய ஃபேஸ்புக் பக்கங்களில் அந்த கார்ட்டூன் வலம் வந்துகொண்டிருக்கிறது. அனைத்திலும் யார் இதை வரைந்தது என்ற பின்னூட்டம் அதிகமாக இருக்கும். அந்தப் பின்னூட்டங்கள் கண்ணில் படும்போதெல்லாம் நானும் என் நண்பனும் “Hasif Khan from Tamil Nadu" என்று எழுதி கூகுள் பக்கத்தை இணைத்துக் கொடுப்போம். கலைஞரின் துண்டை ஈழத்தின் வரைபடமாக்கி ‘ஈழத்துண்டு’ என்ற சித்திரம் வரைந்திருப்பார். சமீபத்தில் தமிழக வரைபடத்தைப் பூமாலையாக்கி நடுவே சில குரங்குகளை ‘ஆடுறா ராமா’ என்று ஆடவிட்டார். அந்த நய்யாண்டிக்குப் பின்னால் ஒரு பெரும் அறச்சீற்றம் இருக்கிறது; மாறாத சமூக அக்கறை இருக்கிறது. “நான் ராஜா” என்ற சித்திரத்தில் தேர்தல் மையின் கறையுடன் ஒரு ஆள்காட்டி விரல் இருக்கும்; அதற்கு மேல் ஒரு கிரீடம். அதன் அடியில் கலைஞரும் அம்மாவும் பணிவுடன் நின்றுகொண்டிருப்பார்கள். தேர்தல் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழக்கும்போதெல்லாம் அந்த ஒரு சித்திரத்தைப் பார்த்தால் போதும், “அடுத்த எலக்சனுக்கு வாங்கடா டேய்”, என்ற தெனாவட்டு வந்துவிடும். அனிதா இறந்தபோது பெரியார், காமராஜர் மற்றும் அம்பேத்கரின் சிலைகள் அனிதாவின் சடலத்தைத் தூக்கிக்கொண்டிருக்க, மேலே ‘சமூக அநீதி’ என்னும் வாசகம். கையறு நிலையில் தேம்பித் தேம்பி அழுத தருணங்கள் அவை.

          ஹாசிப் கானின் ஓவியங்கள் ஊடக அறத்தின் உச்சம். அவை எந்நேரமும் மனிதம் போதிக்கும் நேசக்கரங்களாக இருக்காது. சமயங்களில் சாட்டையை சுழற்றி நமக்கு சமூக நீதியை நினைவுபடுத்தும். இறந்தவர்களுக்கு சாகாவரம் கொடுத்து அவர்களை போராட்ட முகங்களாக்கும். அரசு வன்முறையை எதிர்த்து கேள்வி கேட்கும். எந்நேரமும் அநீதியை வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டே இருக்கும். ஹாசிப் கானை நாம் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். அவர் நம் சமூகத்தின் பெரும் சொத்து. தனிப்பட்ட முறையில் அவரை எனக்குத் தெரியாது என்றாலும், அவருடைய இரசிகனாக, மாணவனாக, அவருடைய பிறந்த தினத்தில் இந்த நன்றி கலந்த பதிவு. சமகால அவலங்களை வண்ணத்தில் தீட்டி நம்முடைய மனசாட்சியைத் தொடர்ந்து குத்திக்கொண்டே இருக்கும் தூரிகை நாயகனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

நவீன இந்தியாவின் சிற்பி

இந்தியாவும் இந்தியும்