Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

எழுந்து நிற்காமை

தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காதவர்களை தேச விரோதிகள் என்று சொல்வது எவ்வாறு தவறோ, அதே போல் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காதவர்களைத் தமிழின விரோதிகள் என்று சொல்வதும் தவறு - என்ற பொருளில் நண்பர்கள் சிலர் ஒப்பீடு செய்ததைக் கண்டேன். இரண்டும் ஒன்றுதான், வித்தியாசமே இல்லை என்பது இறுக்கமான பார்வை. இரண்டிற்கும் இடையே ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. இரு தரப்பினரின் காரணமும் நியாயமும் வெவ்வேறானவை.

தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காவிடில் தேச விரோதி என்று சொல்பவர்கள் தேசிய கீதத்தை இந்திய ஒற்றுமையின் குறியீடாகப் பார்ப்பவர்கள். அதற்கு எழுந்து நிற்காதவர்களை அந்த ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாகக் கருதுபவர்கள். பெரும்பான்மை எழுந்து நிற்க விருப்பப்படுவதைத் தவிர வேறென்ன நியாயம் வேண்டும் அதைக் கட்டாயமாக்குவதற்கு என்று நினைப்பவர்கள். பெரும்பான்மைதான் அவர்கள் வைக்கும் அங்கீகாரம், அதற்கு எதிரானவர்கள் அவர்கள் பார்வையில் தேச விரோதிகள். தற்காலத்தில் இதற்குள் இந்து மத விரோதி என்ற கிளையும் அதீதமாக உண்டு. தேசிய கீதத்தை வைத்து வேண்டுமென்றே பிரிவினை அரசியல் செய்பவர்கள் அல்லாது, மெய்யாகவே நாட்டின் ஒற்றுமையின்பால் கவலை கொண்டவர்களும் இந்தத் தரப்பில் இயல்பாகவே இருப்பார்கள். அவர்களின் நியாயம் எதிர்க்கப்படுவதற்குக் காரணம் கருத்தியல் ரீதியானது. இந்திய அடையாளம் குறித்த பார்வைகள் வெவ்வேறானவை என்னும் நிலையில், ஒற்றுமையைத் தக்கவைப்பது இதுபோன்ற சடங்குகளால் அல்ல என்று மாற்றுத்தரப்பினரால் பன்மைத்துவம் பேசப்படுகிறது.

மாறாக, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கவில்லையே என்று எதிர்ப்பதற்குக் காரணம் விஜயேந்திரர் தமிழ் ஒற்றுமையைக் குலைக்கப்பார்க்கிறார் என்றெல்லாம் இல்லை. காலங்காலமாக சம்ஸ்கிருத அதிகார மையங்கள் தமிழை உதாசீனப்படுத்துகிறது என்றும், காலங்காலமாக மத்திய தேசிய அடையாளம் தமிழ் அடையாளத்தை ஒடுக்குகிறது என்றும் ஒரு மையநீரோட்ட அரசியல் எதிர்வியக்கம் தமிழகத்தில் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. அதன் நீட்சியே இந்த எதிர்ப்பு. விஜயேந்திரர் தேசிய கீதத்திற்கு மட்டும் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழவில்லையென்றால் அவர் மறைமுகமாக இந்த பாரபட்சத்தை/ஒடுக்குமுறையை வெளிப்படுத்துகிறார் என்பதே இந்தத் தரப்பு நியாயம். தமிழின அடையாளத்தை சம்ஸ்கிருத மொழி மற்றும் பண்பாட்டு ஆதிக்கத்திற்கு எதிரான ஒன்றாக தனித்தமிழ் இயக்கமும் திராவிட அரசியலும் இங்கு வலுவாகக் கட்டமைத்திருக்கிறது. அந்த சூழலின் பின்னணியிலேயே விஜயேந்திரர் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறார் என்பதைப் பார்க்கவேண்டும்.

முன்னது ஒருமைத்துவத்தை வலியுறுத்தும் ஆதிக்கக்குரல். பின்னது சமத்துவம் கோரும் உரிமைக்குரல். இரண்டு தரப்பினரின் வாதங்களையும் தனிநபர் விருப்பம் என்ற கோணத்தில் மறுக்கலாம், அல்லது கருத்தியல் வேற்றுமைகளால் நிராகரிக்கலாம். ஆனால் இரண்டையும் ஒரே தராசில் வைக்க முடியாது என்பதில் மட்டும் தெளிவு வேண்டும். ஏனெனில், இரண்டின் அடிப்படைகளும் வெவ்வேறானவை; பண்பாட்டு அங்கீகாரத்திலும் அரசியல் அதிகாரத்திலும் அவை வெவ்வேறு தளத்தில் இருப்பவை. Consider what they mean, not what they say.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி