Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

100% Discount on Vishnu's new book

Vishnu's new book is on sale! 100% discount for four days [Free until 22nd oct, 2018 morning]. புதியவன் வாசிக்கப்படக் காத்திருக்கிறான். இந்த வார விடுமுறையை ஒட்டி [வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் காலை] நான்கு நாட்கள் என் புத்தகத்தின் மின்பதிப்பு அமேசானில் இலவசமாகக் கிடைக்கும்.

ஆணாதிக்க சிந்தனைகளிலிருந்து வெளியேற முயற்சிக்கும் ஆண்களுக்கு - Ejike

முன்குறிப்பு: கீழே ‘ஆண்’ என்ற சொல் பலமுறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சில சமயம் அது ஆண் என்னும் பாலியல் அடையாளத்தைக்(ஆண்) குறிக்கிறது, பல முறை அது ஆண் என்னும் ஆதிக்க அடையாளத்தைக்(ஆவ்ம்பள) குறிக்கிறது. ஒரே வாக்கியத்திலேயே இரண்டும் வரலாம். எனவே இதைப் படித்துவிட்டு ‘எல்லா ஆணும் அப்படியா?’ என்று நீங்கள்  ஆண் சமூகத்திற்காகப் பொங்கினால், ஒன்று நீங்கள் அடையாளங்களை மாற்றிப் போட்டுக் குழப்பிக்கொண்டீர்கள் என்று அர்த்தம். அல்லது ஆதிக்க ஆணாகவே நீங்கள் இருக்கிறீர்கள் என்று அர்த்தம், அல்லது இந்தப் பதிவு எளிமையாக எழுதப்படவில்லை என்று அர்த்தம்.

ட்விட்டரில் Ejike என்னும் பதிவர் எழுதியவற்றின் மொழிபெயர்ப்பு இது.

-------------------------------------------------------------

ஆணாதிக்க சிந்தனையிலிருந்து வெளியே வரும் ஆண்கள், பிற ஆண்களின் வன்முறைக்குப் பெண் சமூகம் உள்ளாக்கப்பட்டு வருகிறது என்பதை அங்கீகரிக்க வேண்டும்.

‘அடடா, சக ஆணை விட இவன் மேலானவனாக இருப்பான் போலவே’ என்று பிற ஆண்களையும் உங்களையும் வித்தியாசப்படுத்திப் பார்க்கும் பெரும்பணியைப் பெண்கள் செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது.

ஆணாதிக்கத்தை ஆராய்ந்து, அதை வெவ்வேறு தளங்களாகப் பிரித்து, இவை இவை எல்லாம் இல்லையென்றால் இவன் ஒரு ‘நல்ல ஆண்’ என்று ஒரு போலியான பிரிவை நீங்கள் வேண்டுமானால் ஏற்படுத்தலாம். அதையெல்லாம் பெண்கள் மதித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது எல்லாம் தட்டையான, ஒத்துணர்வற்ற எண்ணப்போக்கு.

ஆணாதிக்க சிந்தனைகளிலிருந்து வெளியே வருவதன் குறிக்கோள், தனிப்பட்ட அளவில் பெண்களின் சேவகங்களைப் பெறுவதை நிறுத்திக்கொள்வது மட்டுமல்ல; பெண்களை ஒடுக்கும் இந்த ஒழுங்கமைப்பு அடுத்த தலைமுறைக்கும் பரவிவிடக்கூடாது என்று உளப்பூர்வமாக விரும்புவதும்தான்.

ஆணாதிக்க சிந்தனையிலிருந்து வெளியே வர முயற்சிக்கும் ஆண்கள், பெண் சமூகம் அதற்காக முதுகில் தட்டிக்கொடுக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது. அப்படி எதிர்பார்ப்பவர்கள், தான் அனுபவிக்கும் பல சலுகைகளை இந்த சமூகம் தந்தது தான் ஒரு ஆண் என்பதால்தான் என்பதை உணராதவர்கள். மேலும் அந்த அறியாமையின் மூலம் ஆணாதிக்கத்தை மேலும் தாம் செலுத்தியபடியே இருக்கிறோம் என்பதையும் உணராதவர்கள்.

‘நல்ல நடத்தையுள்ள’ ஒரு ஆணின் ஆதிக்கம், வெளிப்படையான ஆணின் ஆதிக்கத்தை விட எந்த விதத்திலும் வன்முறையில் குறைந்ததில்லை. இரண்டையும் ஒரே தளத்தில் வைத்துதான் நாம் பார்க்கவேண்டும்.

பல சமயங்களில் ‘பெண்ணிய ஆண்’ என்று சொல்லிக்கொள்பவர்கள்தான் இருப்பதிலேயே மிகவும் தந்திரமானவர்களாக, சூழல்களைத் தவறாகப் பயன்படுத்திக்கொள்பவர்களாக அறிந்தோ அறியாமலோ வெளிப்படுகிறார்கள். ஆண்களின் பெண்ணியப் பங்களிப்பை சந்தேகப்பார்வையோடு அணுகுவதை இது வலுப்படுத்தவே செய்கிறது.

இப்படியெல்லாம் நான் ஏன் சொல்கிறேன்? ஒரு ஆணாக நான் பெண்ணிய வெளிகளில் பத்து ஆண்டுகளாக இருக்கிறேன் என்றாலும் கூட, “மற்ற ஆணைப்போல் நான் அல்ல என்பது உனக்குத் தெரியாதா?”, என்ற மனப்பான்மை துருத்திக்கொண்டுவிடுகிறதா என்று நான் அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த மனப்பான்மையில் ஆணுரிமை துர்நாற்றம் வீசியபடி வழிகிறது.

இந்தப் பதிவே கூட ஒரு நிலையில் அடங்காமல் இங்கும் அங்கும் அலைகிறதுதான். என் எண்ண ஓட்டத்தை சீர்படுத்திக்கொள்ளவும், சக ஆண்களுக்கு உதவவுமே இவற்றையெல்லாம் எழுதுகிறேன்.

- Ejike
(தமிழில்: வ.விஷ்ணு)

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி