Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

கலைஞர்

கல்லூரியின் முதல் இரு ஆண்டுகள் பேருந்தில் பயணித்துதான் கல்லூரி சென்றேன். அதனால் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்தாக வேண்டும். இறுதி இரண்டு ஆண்டுகளின்போது விடுதிக்கு மாறியபின் ரூம்மேட்ஸ் எங்களுக்கு சற்றே சோம்பேறித்தனம் குடிகொண்டுவிட, சில மாதங்கள் தாமதமாக எழ ஆரம்பித்தோம். பிறகு ஒரு உத்வேகத்தில் நாங்கள் ஒரு ஒப்பந்தம் போட்டு “காலையில எழுறோம், ஜாகிங் போறோம். ஒருத்தன் தூங்கிட்டா எழுப்பி கூட்டிட்டுப் போறோம்” என்று திட்டம் போட்டோம். அப்பொழுதெல்லாம் சிலமுறை அதிகாலை ஐந்தேகால் மணிக்கு ஒருவரையொருவர் இப்படித்தான் எழுப்பியிருக்கிறோம் - “அங்க ஒரு கிழம் முரசொலிக்குத் தலையங்கம் எழுதிட்டு இருக்கு. வாடா!”

அரசியல் நிகழ்வுகளில் அரைகுறை ஆர்வம் கொண்டவர்கள் என்பதால் பல நாட்களில் பேச்சின்போது ஏதாவது ஒரு கலைஞர் ரெபரன்ஸ் வந்துவிடும். அதிகாலை ஒருமணிநேரம் தலையங்கம் எழுதுவார், இரண்டு மணிநேரம் செய்தித்தாள்கள் வாசிப்பார் என்று கலைஞரின் டேபிளான் ஜூவியில் வெளியானபோது அதில் கவரப்பட்டுதான் நான் தினத்திட்டங்களே போட ஆரம்பித்தேன். மையக் கவர்ச்சியே அவருடைய வயதுதான். உடல்வலு உச்சத்தில் இருந்த வயது எனக்கு, அவரோ தினம் தினம் உழைத்து என்னைக் கூனிக் குறுகவைத்துக்கொண்டே இருந்தார். இப்பொழுது யோசிக்கையில் கிட்டத்தட்ட எல்லோருக்கும் ரிலேட்டபிளான ஒரு ஆளாகத்தான் அவர் வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார். இளம் வயதிலேயே கலையுலகில் தனக்கென்ற ஒரு இடத்தைப் பிடிப்பது, கட்சித் தலைவரிடம் ஆறு இலக்க நிதி திரட்டுகிறேன் என்று சவால் விடுவது, ஒரு பேரியக்கத்திற்கு அரை நூற்றாண்டு காலம் தலைமை தாங்குவது, எல்லா நேரங்களிலும் ஏதேனும் செய்துகொண்டே இருப்பது, எல்லாவற்றிலிருந்தும் மீண்டுக்கொண்டே இருப்பது, என்று அரசியல் கடந்து தனிமனித அளவில் அவரிடமிருந்து ஏதோவொரு இன்ஸ்பிரேஷனைக் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள முடியும். Political Career என்று வகுப்பெடுத்தால் பாலபாடம் கலைஞராகத்தான் இருக்கும். பழகாத அரசியல் இல்லை, பார்க்காத நிகழ்வுகள் இல்லை. இனி பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற நிலையில் இறப்பதென்பது அனைவருக்கும் வாய்க்காத ஒன்று. “நான் அப்படி என்னத்த பாத்துட்டேன், அதை முடிவு செய்ய வேண்டியது நான், நீ இல்ல. மூடிட்டு இரு, நான் வரேன்” என்றபடி அவர் எழுந்துவிடுவார் என்று உள்ளே ஒரு நப்பாசையும் இருந்தது. எப்படியாயினும், தன் இறுதி ஆண்டுகளை நிறைவுகள் நிறைந்தும் புகார்கள் குறைந்துமாகவே அவர் கழித்திருப்பார் என்று நம்ப விரும்புகிறேன்.

உலக தேசியத் தலைவர்களில் கலைஞருக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு. ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் echo chamber-களால் நிறைந்தவை. வெகுமக்களின் ஆழ்மன உணர்வுகளுக்கு முன் இந்த இணைய காழ்ப்புணர்ச்சிகளுக்கு மதிப்பில்லை. என்னுடைய பல நண்பர்களின் தாய்களும் தந்தைகளும் இந்தக் கணத்தில் வாய்விட்டு அழுதுகொண்டிருக்கிறார்கள் என்பதை நான் நன்றாக அறிவேன். சென்ற வாரம் காவேரி மருத்துவனை வெளியே பலர் விம்மிக்கொண்டிருந்ததையும், அவர் நம்பாத கடவுளை வேண்டிக்கொண்டிருந்ததையும் பார்த்தேன். அவருடைய சமூகநீதிக்கான பயணத்தில் மாண்பும் முன்னேற்றமும் வேண்டி அவரைப் பற்றிக்கொள்ள அவசியம் இல்லாத பின்புலத்திலிருந்து வந்தவன் நான். எவ்வளவு முற்போக்காக சிந்தித்தாலும் சரி, என் சமூகம் உருவாக்கிய இரத்தக்கறைகள் என் கைகளிலும் படிந்துதான் இருக்கும், அதை ஏற்றுக்கொண்டபடிதான் நான் இயங்கவேண்டும் என்ற புரிதலை இவர் கட்டிக்காத்த இயக்கம்தான் எனக்குத் தந்தது. அனைத்து சமூக சலுகைகளையும் கையில் வைத்துக்கொண்டு அனைவரும் பிறப்பால் சமம் என்று சமூகத்தை ஏமாற்றாமல் இருக்க அந்த வாசிப்புதான் சொல்லிக்கொடுத்தது. அந்த வாசிப்பு இன்னும் கொஞ்சம் சீக்கிரமாகவே எனக்கு வாய்த்திருக்கலாம் என்ற வருத்தம் இப்பொழுதும் எனக்கு உண்டு. என்னுடைய வளர்ச்சிக்கும் அந்தஸ்திற்கும் உதவும் ஆதிக்க சக்திகளுக்கு துரோகம் இழைப்பதுதான் சமூக நீதியில் என் தலையாக பங்களிப்பு. அந்த கடமைக்கான ஒத்துணர்வை திராவிட இயக்கம் போன்ற கலகக்குரல்களிடமிருந்துதான் நான் பெற்றேன். அதன் மைய அச்சாகப் பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் எப்பொழுதும் சுற்றிக்கொண்டே இருந்தார்கள். ஜனநாயகப்படுத்துதலின் மூலம் power equation-ஐ மாற்றும் ஆட்கள் உலகில் அரிதிலும் அரிதானவர்கள். அவர்கள் குறைகளைத் தாண்டி நினைவில் கொள்ளப்பட வேண்டியவர்கள். A MASSIVE TITAN DIED TODAY. ஒரு நீண்ட பெருமூச்சுடனே நாம் அவரின் மரணத்தை எதிர்கொள்ளவேண்டும்.

மேலும், எல்லோராலும் கொண்டாடப்படுகின்ற, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவர்கள் மீது எனக்கு நம்பிக்கையில்லை. பிம்பமும் போலிகளும் நிறைந்த வாழ்வு அது. ஐம்பது வருடங்களுக்கு முன் ஆளுக்கு கையில் செல்போன் இருந்திருந்தால் பல புண்ணிய மனிதர்களின் பிம்பம் எளிதாகக் கிழிக்கப்பட்டிருக்கும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். ஒரு அரசியல்வாதியின் பிம்பம் உடைவதும், அவரின் பொதுவாழ்க்கை கூர்ந்து கவனிக்கப்படுவதும், புகழ்பாடல்கள் கேள்விக்குள்ளாவதும் ஜனநாயகப்படுதலின் முக்கிய அங்கம். தமிழகத்தில் அது சாத்தியமானதில் கலைஞருக்குப் பெரும் பங்குண்டு என்பது புரிந்தாலே காழ்ப்புணர்ச்சிகள் பெருமளவில் குறைந்துவிடும். அரசியல் வேறுபாடுகள் எல்லாம் அதன் பிறகுதான். கடைக்கோடி திமுக தொண்டனுக்கே ஏமாற்றங்கள் இருக்கும். ஆனால் அவர் இழப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் வெறுமை நிஜம். ஒருவாரமாகக் கையில் ஃபோனையே பார்த்துக்கொண்டு உறங்காத பொழுதுகள் நிஜம். அவர் மரணம் ஒரு குறைந்தபட்ச அசைவைக் கூட உங்களுக்கு ஏற்படுத்தவில்லையென்றால் சீரியசாக நீங்கள் உங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். வெறுப்பரசியல் உங்களை மனித மாண்பற்றவர்களாக ஆக்கிவிட்டதா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளவேண்டும். அதன் பிறகும் வெறுப்பு இருக்கிறது என்றால் அதற்கான உரிமை உங்களுக்கு உண்டு என்று சொல்லிவிட்டு பாதிப்பின்றி அடுத்த வேலையைப் பார்க்கப்போகும் சலுகை எனக்கு உண்டு. ஆனால் அந்த சலுகை தரும் குற்றவுணர்ச்சியை சேர்ந்து சுமக்கக் கடவது நீங்களும்தான். என்றைக்காவது ஒருநாள் அதை சுமக்க நீங்கள் வருவீர்கள் என்ற அந்த நம்பிக்கையைத் தனிப்பட்ட அளவில் கலைஞர் பலருக்கு விட்டுச்சென்றிருக்கிறார்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் வரலாற்றை திராவிட இயக்க அரசியல் குறிப்பிடத்தக்க அளவு செதுக்கியிருக்கிறது. பிரிவினை காலத்தில் இந்திய ஒற்றுமை என்பது இந்து-முஸ்லிம் ஒற்றுமை என்று சுருக்கப்பட்டு அவசர அவசரமாக சுதந்திரம் பெற்றபிறகு தேவை கருதி மத்திய அரசு அதிகாரத்தைக் குவித்தது. ஆனால் வெறும் இருபதே ஆண்டுகளில் இந்திய ஒன்றியத்தின் அடையாளம் அதைக் கடந்தது என மாநில சுயாட்சிக் குரல்கள் வெளிவர ஆரம்பித்தன. யார்ரா அது என்று பார்த்தால் முன்வரிசையில் தமிழ்நாடு. அறிவைக் கடந்து அந்த அறிக்கைகள் தந்த வாசிப்பின்பம் அலாதியானது. இந்தியாவின் மொழிக்கொள்கை மெய்யாகவே அசுரர்-தேவர் ரேஞ்சுக்கான பனிப்போராக இருக்கிறது. சும்மா இல்லை, மொழித்திணிப்பைப் புரிந்துகொண்டு எதிர்கொள்ள மனிதர் ஒரு மாநிலத்தையே தயார்படுத்திவிட்டுப் போயிருக்கிறார். இந்தித்திணிப்புக்கு எதிராகக் கருத்து சொன்னால் நீ திமுக-காரனா என்று இனியும் கேட்க முடியாது. அது கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பொதுக்கருத்துகளுள் ஒன்றாக ஆகிவிட்டது. என்னடா இது தமிழ்நாடு மட்டும் மசிய மறுக்கிறது என்ற சிந்தனைக்கும், என்னடா இது கியூபா மட்டும் மசிய மறுக்கிறது என்ற சிந்தனைக்கும் வேற்றுமைகளைக் கடந்த ஒற்றுமை உண்டு. கலைஞரின் இருப்பு ஒரு பேரியக்கத்தின் துடிப்பாக இருந்திருக்கிறது. அதனால்தான் அவர் மறைவை ‘an end of an era' என்று சொல்கிறார்கள். அரைநூற்றாண்டு காலம் மைய அரசியலில் தேவையற்றுப் போகாமல் நீடிப்பதென்பது ஒரு ஜனநாயகத்தில் மிகப்பெரும் சாதனை. 20ம் நூற்றாண்டில் மிகமிகச் சிலரே அந்த legacy-யை விட்டுச் சென்றிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் நினைவில் வைத்தபடிதான் நான் கலைஞரின் உடலைத் துறக்க நினைக்கிறேன். அவரவர் அரசியல் நிலைப்பாடுகளுக்கும் அறநிலைப்பாடுகளுக்கும் ஏற்ப இருக்கும் குற்றச்சாட்டுகளையெல்லாம் சற்றே ஒதுக்கிவைத்துவிட்டு ஒரு மாநிலமாக ஒன்றுகூடி அவருக்கு மரியாதை செலுத்துவது மிகவும் முக்கியம். அது அவருடைய பெருவாழ்வுக்கான முக்கிய அங்கீகாரமாக இருக்கும்.

He was one of the longest serving public representatives in the whole world. உங்களுக்குக் கலைஞர் பிடிக்கவில்லை என்பதற்காக அவருக்கு வாக்களித்தவர்கள் எல்லோரும் அறிவுக்கெட்டவர்கள் இல்லை. மக்களின் பிரதிநிதியாக அரை நூற்றாண்டு காலம் இயங்குவதென்பது இமாலய சாதனை. அதை முறியடிப்பது உலகில் மிகவும் கடினம். எந்த பொதுச்சமூகத்திற்காக அவர் இயங்கினாரோ அந்த சமூகம் அச்சாதனையை அங்கீகரிப்பது அவசியம். ஏனெனில் கலைஞர் தன்னுடைய நேரத்தை மக்களுக்காக மிகமிக நேர்த்தியாக செலவழித்தார். பொதுவாழ்க்கைக்கான எண்ணங்கள் இருந்தால் மட்டும் போதாது, அதை நடைமுறைப்படுத்துவதில் பிளானிங் முக்கியம். எனக்கு இருக்கும் 24 மணிநேரமும், உங்களுக்கு இருக்கும் 24 மணிநேரமும், கலைஞருக்கு இருந்த 24 மணி நேரமும் ஒன்றல்ல. அனைவருக்கும் 24 மணிநேரம்தான் என்பது எலீட் மனநிலை. என்னுடைய 24-வது வயதில் எனக்கு இருக்கும் 24 மணிநேரமும் அவருடைய 24-வது வயதில் அவருக்கு இருந்த 24 நேரமுமே வெவ்வேறுதான். இந்த விஷயத்தில் அம்பேத்கர், காந்தி, பெரியார் வரிசையில் கலைஞர் நிச்சயம் வருவார். இவர்கள் அனைவரும் நேரத்திற்கு உரிய மரியாதையைத் தந்தவர்கள். இவர்களுள் பன்னெடுங்காலம் தேர்தல் அரசியலிலும் கட்சி அரசியலும் இருந்துகொண்டே பல்வேறு தளங்களில் இயங்கியவர் கலைஞர் ஒருவர்தான். அந்த மாபெரும் மனித இயந்திரம் தன் இயக்கத்தை நிறுத்திக்கொண்டிருக்கிறது என்பது சாதாரணமாகக் கடந்துபோகும் விஷயம் அல்ல. ஆயிரமாண்டு கால மரம் ஒன்று வேரோடு சாய்ந்தால் அதை நாம் எப்படிப் பார்ப்போமோ அப்படிப் பார்க்க வேண்டிய நிகழ்வு இது. 90 ஆண்டுகளுக்கான நினைவுகளையும் வலிகளையும் சுமந்த பொக்கிஷம் கலைஞரின் மூளை. அது மண்ணோடு மண்ணாகப்போகிறது என்பதற்காகவும்தான் இத்தனை ஒப்பாரிகளும்.

இந்த சாவை லீவு கிடைக்கும் என்று கடந்துபோவதுபோன்ற குரூரமான புத்தி வேறு இல்லை. லீவு கிடைக்கும் அளவிற்கு எந்த சமூகத்திற்காக உழைத்தாரோ, அந்த சமூகத்தின் வளர்ச்சி பிடிக்காமல் பொருமும் செயல் அது. சற்றே சுற்றிப்பாருங்களேன். வாக்கு வங்கியே இல்லாத திருநங்கைகள் சமூகம் முதல்முறையாக ஒரு தலைவனின் மரணத்திற்குக் கண்ணீர் விடுகிறது. இதைவிட வேறு என்ன அளவுகோல் வேண்டும்? இதோ, இந்த வாரத்தில் கலைஞர் மருத்துவமனையில் இருக்கையில் தமிழகத்தின் முதல் பிராமணரல்லாத அர்ச்சகர் நியமிக்கப்பட்டார் என்று செய்தி வருகிறது. இன்னும் செல்ல வேண்டிய தூரம் இருந்தாலும் சட்ட சீர்திருத்தம் செய்து தசாப்தங்கள் கடந்த ஒரு நெடும் போராட்டத்தின் வெற்றி இது. கலைஞரின் காதுகளை இது நிச்சயம் எட்டியிருக்கும் என்றே நம்ப விரும்புகிறேன். பெரியாரின் அந்த முள்ளை சுமந்தபடியேதான் கலைஞர் அரசியலுக்குள் வந்தார். அரை நூற்றாண்டுக்குப் பின் அந்த முள் எடுக்கப்படுகையில் அவர் நம்மை விட்டுப் பிரிகிறார். அந்தக் கிழம் எதையோ சாதித்திருக்கிறது. இல்லை இல்லை என்று மறுக்காமல் ஒருமுறையேனும் அதை நாம் ஒத்துணரவேண்டும்.

கலைஞர் இனி இல்லையே என்று யார்யாருக்கோ என்னவெல்லாமோ கவலைகள். எனக்கோ இனி யார் என்னை அதிகாலை எழுப்பிவிடுவார் என்ற கவலை. சாவிலும் சலுகை குறித்துப் பாடம் எடுத்துவிட்டுத்தான் போயிருக்கிறது அந்தக் கட்டுமரம்.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி