அசாசின்ஸ் க்ரீட் ஒரிஜின்ஸ்
'அசாசின்ஸ் க்ரீட்' வீடியோ கேம் சீரிசில் கடைசியாக வந்த ‘அசாசின்ஸ் க்ரீட் ஒரிஜின்ஸ்’ வீடியோ கேமை இப்பொழுதுதான் முழுமையாக அனுபவிக்க முடிந்தது. அசாசின்ஸ், டெம்ப்ளார்ஸ் என்று இரண்டு எதிரெதிர் குழுக்கள் உலகம் முழுவதும் காலம் காலமாகப் போரிட்டு வருகின்றன. இரண்டுமே அமைதியை விரும்புபவை, ஆனால் வழிமுறைகள் வெவ்வேறு. ஒழுங்கின் மூலமாகத்தான் அமைதியைக் கொண்டுவர முடியும் என்று டெம்ப்ளார்கள் அதிகாரத்தைக் குவிப்பார்கள். இல்லை, கட்டற்ற சுதந்திரத்தின் மூலமாகவே அமைதியைக் கொண்டுவர முடியும் என்று அசாசின்கள் அதிகார பீடங்களைத் தகர்த்துக்கொண்டே இருப்பார்கள். இந்த அசாசின் குழு எப்படி உருவானது என்று சொல்லும் கேம்தான் இந்த ஒரிஜின்ஸ். 2007-ல் முதல் கேம் வந்தது. பத்து வருடங்கள் கழித்து பத்தாவது மெயின்ஸ்ட்ரீம் கேமாக ஒரிஜின்ஸ் வந்திருக்கிறது. இதற்கு முன்பு கடைசியாக வெளிவந்த யூனிட்டி (ப்ரெஞ்சுப் புரட்சி காலம்) மற்றும் சிண்டிகேட் (தொழிற்புரட்சி காலம்) சரியாக ஓடவில்லை (எனக்கு யூனிட்டி மிகவும் பிடித்தது, ஆனால் டெக்னிகல் பிரச்னைகள் நிறைய வந்து விளையாடும் மூடை ரொம்பவே கெடுத்தது). போச்சு, அசாசின்ஸ் க்ரீட் கேம் அவ்வளவுதான் என்று எல்லோரும் கைவிட்ட நிலையில் ஒரிஜின்ஸ் மூலம் பலத்த ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கிறது அ.கி.
கதை தெரியவேண்டாம் என்று நினைப்பவர்கள் இப்பதிவைத் தவிர்க்கவும். *ஸ்பாய்லர் அலர்ட்*
பரவலான மக்களிடையே ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருக்கும் இந்த கேமை இருப்பதிலேயே சிறந்த அசாசின்ஸ் க்ரீட் கேம் என்கிறார்கள். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. இரண்டாம் பாகத்தில் வந்த ஹீரோவான எட்சியோவுக்குப் பிறகு இந்த கேமின் கதாநாயகன் பாயக் அனைவரையும் கவர்ந்திருக்கிறான். கிமு 47ல் சீவா என்றொரு கிராமத்தின் தலைவனாக பாயக் இருக்கிறான். எகிப்தின் காவலன் என்று மன்னன் டாலமியால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவன். அவன் ஊரில் உள்ள அமுன் கோயிலுக்குள் விலைமதிப்பில்லாத பொருள் ஒன்று இருக்கிறது என்று ஒரு கூட்டம் வருகிறது. வழியில் இருப்பவர்களையெல்லாம் கொன்றபடி அது கோயிலுக்குள் செல்கையில் தெரியாத்தனமாக பாயக்கின் குட்டிப்பையன் வழியில் வந்துவிட, அவனையும் கொன்றுவிடுகிறார்கள். அலறியபடி அவர்களை வெட்ட பாயக் போக, அவனை அடித்துப்போட்டு சென்றுவிடுகிறார்கள்.
யார் என் மகனைக் கொன்றது என்று பாயக் வெறிபிடித்து அலைகிறான். தன் மகனைக் கொன்றவர்களைப் பழிவாங்கியே தீரவேண்டும் என்று மனைவி அயாவோடு சேர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறான். யாரோ கொள்ளையர்கள் அவன் மகனைக் கொல்லவில்லை, பெரும் சக்திவாய்ந்த ஒரு கூட்டம் அது என்று உணர்ந்து ஐந்து தலைவர்களை அடையாளம் காண்கிறான். அவனும் அயாவும் இணைந்து ஐவரையும் கொல்கிறார்கள். அப்பொழுதுதான் ஒரு உண்மை அவர்களுக்குத் தெரிகிறது. அந்த ஐவரும் கீழ்மட்டத் தலைமைகள். ஆக்டோபஸ் கரங்களைப் போல் அதிகாரம் மேலே செல்கிறது என்பதை உணர்கிறார்கள். அப்பொழுது அயா க்ளியோபாட்ராவின் சேவகராகப் பணி புரிந்துகொண்டிருக்க, அயாவின் மூலமாக பாயக் க்ளியோபாட்ராவை சந்திக்கிறான். யார் இந்தக் கூட்டம் என்று க்ளியோபாட்ரா அவர்களுக்கு விளக்குகிறாள். தி ஏன்ஷியண்ட் ஒன்ஸ் என்னும் இந்தக் குழு, அதிகாரத்தைத் தன்வசம் வைத்திருக்க என்ன வேண்டுமானாலும் செய்யும், இந்தக் கூட்டம் தன் சகோதரன் மன்னன் டாலமியைக் கைப்பாவையாக வைத்திருக்கிறது, டாலமியை வீழ்த்தித் தான் ராணியாக வேண்டும், அதற்கு பாயக் மற்றும் அயாவின் உதவி வேண்டும் என்கிறாள் க்ளியோபாட்ரா. மேல்கட்டத் தலைவர்கள் நான்கு பேரைக் காட்டி கொன்றுவரும்படி பணிக்கிறாள். பாயக் அவர்களைக் கொல்கிறான். முக்கியத் தலைவர்கள் கொல்லப்படுவதை அறிந்து உஷாரான ஏன்ஷியண்ட்ஸ் குழு, க்ளியோபாட்ராவைக் கொல்ல நெருங்க, க்ளியோபாட்ராவுக்கும் டாலமிக்கும் இடையே உள்நாட்டு யுத்தம் மூள்கிறது. இந்நிலையில் அயா மிகவும் ஆர்வத்துடன் க்ளியோபாட்ராவிற்கு சேவை செய்வதைக் கண்டு பாயக் அவளை எச்சரிக்கிறான். “நம் மகனைக் கொன்றவர்களைக் கொல்வது மட்டும்தான் நம் வேலை, வீணாக இதில் மனதைப் பறிகொடுக்காதே”, என்கிறான். ஆனால் அயாவோ “க்ளியோபாட்ரா நம் ராணி, நமக்காக உதவுகிறாள்”, என்று கடல் கடந்து ரோமாவின் தளபதி பாம்பேயின் உதவியை நாடுகிறாள். ஆனால் அந்த நேரத்தில் ரோமாவில் நடந்த உள்நாட்டு யுத்தத்தால் பாம்பேய் ஜூலியஸ் சீரரின் ஆட்களால் கழுத்தறுபட்டுக் கொல்லப்படுகிறான். எனவே சீசரை விட்டால் வழியில்லை, அவனை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்று க்ளியோபாட்ரா கேட்க, பாயக்கும் அயாவும் அவளை ஒரு சாக்குமூட்டைக்குள் கிடத்தி டாலமியின் காவலர்களை ஏமாற்றி சீசரிடம் சேர்க்கிறார்கள். டாலமி முன்பு ஒப்பிடுகையில் க்ளியோபாட்ராவிற்கு ஆளும் தகுதி அதிகம் என்று சீசர் உணர்ந்துகொள்ள, க்ளியோபாட்ராவிற்கு ஆதரவு தருகிறான். டாலமி கொல்லப்படுகிறான், க்ளியோபாட்ரா எகிப்தின் மகாராணி ஆகிறாள்.
இந்த நிலையில் தன் மகனைக் கொன்றது யார் என்று பாயக்கிற்குத் தெரிய வருகிறது. ஏன்ஷியன்ட்ஸ் குழுவின் தலைவனான அவனை பாயக் கொல்லப்போக, கடைசி நிமிடத்தில் சீசரால் அவன் காப்பாற்றப்படுகிறான். அவன் சீசரின் ஆள் என்று அப்பொழுதுதான் பாயக்கிற்குத் தெரிகிறது. அயா க்ளியோபாட்ராவின் உதவியை நாட முற்படுகிறாள், ஆனால் க்ளியோபாட்ரா அவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை. ராணி ஆகிவிட்டாள், இனி நம் உதவி தேவையில்லை என்று உதறிவிட்டாள் என்று பாயக்கிற்கும் அயாவிற்கும் உறைக்கிறது. தமக்குப் பெரும் அநீதி இழைக்கப்பட்டுவிட்டதை உணர்கிறார்கள். அதிகாரம் கிடைக்கும்வரை மக்களுக்காகப் பேசுகிறார்கள், அதிகாரம் கைக்கு வந்தவுடன் போதை தலைக்கேறி மீண்டும் மீண்டும் வரலாறு திரும்பிக்கொண்டே இருக்கிறது என்று மனம் வெதும்புகிறார்கள். தன் மகன் இனிமேல் வரமாட்டான், பழிவாங்குவதில் அர்த்தமில்லை என்று பாயக் உணர்கிறான். அதே நேரத்தில் தன் மகனுக்கு நேர்ந்தது வேறு யாருக்கும் நேரக்கூடாது என்று ஏன்ஷியண்ட்ஸ் குழுவை ஒழித்துக்கட்ட முடிவு செய்கிறான். தன் மகனைக் கொன்றவனைத் தேடிப் போய் கொல்கிறான். அப்பொழுதுதான் தெரிகிறது, இந்தக் குழுவைத் துவக்கியது ஜூலியஸ் சீசர் என்று.
இந்தக் குழுவின் கரம் சீசர் வரை செல்கிறது என்று தெரியவரும்போது நிலைமையின் தீவிரத்தை பாயக்கும் அயாவும் உணர்ந்துகொள்கிறார்கள். “இனி நமக்கு சாதாரண வாழ்க்கை என்பதே கிடையாது. நாம் தொலைதூரம் கடந்து வந்துவிட்டோம். நம் மகன் இறந்துவிட்டான். ஆனால் நமக்கு உலகத்தில் பல மகன்கள் இருக்கிறார்கள், அவர்களைக் காப்பதே இனி நம் கடமை. அதிகாரம் குவிக்கப்படும் இடங்களிலெல்லாம் நம் குழு இருக்கவேண்டும், அதற்காக இருவரும் உழைப்போம். இனி நான் உன் கணவன் இல்லை”, என்று பாயக் அயாவிடம் சொல்ல, “நானும் க்ளியோபாட்ராவை மிகவும் நம்பிவிட்டேன். ஒரு தலைமையைத் தகர்த்தால் இன்னொரு தலைமை அதையே செய்கிறது. தவறு செய்துவிட்டேன். இனி என் பயணமும் உன்னுடனே. இனி நீ என் கணவன் இல்லை, இருவரும் அசாசின்ஸ். நமக்குள் இனி லௌகீக உணர்ச்சிகள் கிடையாது. அயா இறந்துவிட்டாள். இனி என் பெயர் அமூநெட்” என்று அயா அவனைப் பிரிகிறாள். சீசரைக் கொல்ல வேண்டும் என்று ப்ரூட்டஸின் உதவியை நாடுகிறாள். பாம்பேய் கொல்லப்பட்ட நிலையில் சீசர் ரோமாவின் சக்கரவர்த்தி ஆகி ஜனநாயகத்தை அழிக்கக் காய் நகர்த்தி வருவதாக ப்ரூட்டஸ் சொல்கிறான். இருவரும் ரோமா செல்கிறார்கள். செனட் கூட்டத்தில் சீசர் தன்னை சக்கரவர்த்தி ஆக்கும்படி உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டு இருக்கும்போது அயாவும் ப்ரூட்டசும் அவன் ஆட்களும் கத்தியோடு பாய்கிறார்கள். முதலில் அயா குத்துகிறாள், பிறகு ப்ரூட்டஸ் சீசரை மாற்றி மாற்றிக் குத்துகிறான். “உன் அதிகார போதைதான் இந்த முடிவுக்குக் காரணம்” என்கிறான். “யூ டூ ப்ரூட்டஸ்” என்று சீசர் நிலைகுலைந்து வீழ்கிறான். அயா ரோமாவிலேயே தங்கிவிடுகிறாள். பாயக் எகிப்தில் தன் குழுவை வளர்க்கும் பணியில் ஈடுபடுகிறான். ரோமாவில் அப்பொழுது தங்கியிருக்கும் க்ளியோபாட்ராவை அயா சந்தித்து “நீயும் மக்களை ஏமாற்றினால் உன்னைக் கொன்றுவிடுவோம்” என்று எச்சரித்து க்ளியோபாட்ராவின் பார்வையிலிருந்து மறைகிறாள். இப்படியாகக் கதை முடிகிறது.
2008-ல் வெளிவந்த அசாசின்ஸ் க்ரீட் இரண்டாம் பாகத்தில் ஒரு தகவல் வரும். க்ளியோபாட்ரா அமூநெட் என்னும் அசாசினால் கொல்லப்பட்டாள், என்பதே அந்தத் தகவல். க்ளியோபாட்ரா சாவதற்கு பத்தொன்பது வருடங்களுக்கு முன்பாக இந்தக் கதை முடிகிறது. ஆக அடுத்த ஒரிஜின்ஸ் பாகத்தில் மார்க் ஆண்டனியோடு இணைந்து க்ளியோபாட்ரா நடத்தும் எதேச்சதிகாரத்தை அசாசின்கள் எதிர்ப்பார்கள் என்று நம்பலாம். விட்சர்-3 கேமிற்குப் பிறகு இவ்வளவு பெரிய ஒரு உயிருள்ள உலகை நான் பார்க்கவில்லை (ஹொரைசான் ஜீரோ டான் என்றொரு கேம் இருக்கிறது, அது தனிக்கதை). சூழலும் இசையும்(சாரா ஷாக்னர் இசை) கச்சிதமாகப் பொருந்தி நம்மை 2000 வருடங்கள் பின்னோக்கி அழைத்துச்செல்கிறது. பாயக்கும் அயாவும் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்கள் ஆகிவிட்டார்கள். சென்ற வாரம் பதினொராவது கேம் வந்திருக்கிறது, கிமு ஐந்தாம் நூற்றாண்டு கிரேக்கத்தில் நடக்கும் கதை. ஒடிசி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அதை இப்போதைக்கு விளையாட முடியாது. Origins is the best Assassin's Creed game yet! யூனிட்டி மற்றும் சிண்டிகேட் கொடுத்த நெகட்டிவ் விமர்சனங்களை எதிர்கொண்டு ஒரு வருடம் கூட எடுத்துக்கொண்டு பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்கள் யூபிஐசாப்ட் நிறுவனத்தார். Super comeback! கேமர்கள் அவசியம் விளையாடவேண்டிய கேம் இது.
Comments
Post a Comment