அய்யப்பனும் Heteronormativity-யும்
நான் பார்த்து வியக்கும் சில நண்பர்கள் “என்ன அய்யப்பா, இனிமே ஜாலியா?” போன்ற பதிவுகளை ஷேர் செய்யும்போது சற்றே வருத்தமாக இருக்கிறது. Heteronormativity என்று இதற்குப் பெயர். அதாவது அய்யப்பனை ஓர்ப்பால் ஈர்ப்புள்ளவராகக் கற்பனை செய்ய முடியாது என்ற எண்ணத்தை நம்மை அறியாமல் மறைமுகமாகக் கடத்துவது. பாலின சிறுபான்மையினருக்கு இந்த ‘ஜாலியா’ போஸ்ட் சற்றே அசவுகரியத்தைக் கொடுக்கும். இன்றைய சபரிமலைத் தீர்ப்பு எனக்கு உண்மையில் கலவையான உணர்வுகளைத் தந்திருக்கிறது. வழக்கிற்கு சம்பந்தமில்லை என்றாலும் இந்தப் பிரச்னையில் பாலின சிறுமான்மையினர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் இணைத்தே பார்க்கிறேன். LGBTQA+ சமூகம் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் அங்கீகரித்தே ஆகவேண்டும். ஏனெனில் ஒரு விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த சிலர் ஒரு கடவுளைத் தங்களுடையதாக ஆக்கிக்கொள்ள முனைகிறார்கள் என்றால், அந்த முனைப்பிற்கு சமூக-அரசியல் நியாயங்கள் இருக்கின்றன. அந்த நியாயத்தை உணர வேண்டும். குறைந்தபட்சம் லிபரல்கள் என்று சொல்லிக்கொள்பவர்களாவது அதை உணர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு உண்டு. ஏனெனில் இது ஆண்-பெண் இருதுருவப் பிரச்னையாக முடிந்துவிடக்கூடாது என்று நினைக்கிறேன். நூறு வருடங்கள் கழித்து, "அவர் ஒரு queer God, பக்தியில் LGBTQA+ பரிமாணம் ஒன்று இருக்கிறது” என்று திருவாங்கூர் தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால், அப்பொழுது உயிருடன் இருக்கும் என் சந்ததியினர் இந்தத் தீர்ப்பைத் தூசிதட்டிக் கேள்வியெழுப்பவேண்டும் என்றே விரும்புகிறேன். சபரிமலை செல்லவேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு தங்களின் உதிரம் தீட்டாகப் பார்க்கபடுகிறது என்ற கோபம் இருக்கிறது. அவர்களிடத்தில் queer God வாதத்தை நான் கட்டாயம் வைக்க மாட்டேன். அது தவறான பூட்டை ஆட்டுவதற்கு ஒப்பானது. குறைந்தபட்சம் பாலின சிறுபான்மையினரின் குரல்களையும் விருப்பங்களையும் மறைமுகமாக அடிக்கும் இதுபோன்ற பதிவுகளைத் தவிர்க்கலாம் என்று கருதுகிறேன். "புத்திய காட்டிட்ட பாத்தியா, நீயாடா இப்படி ஷேர் பண்ண" என்று உங்கள் பாலின சிறுபான்மையின நண்பர் கேட்க ஒரு நிமிடம் ஆகாது.
It's a historic judgement.
It's a historic judgement.
Comments
Post a Comment