Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

எலிமென்டரி

Jonny Lee Miller for CBS Watch - Oh No They Didn't!



அமெரிக்காவின் சிபிஎஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'எலிமென்டரி' ஷெர்லாக் ஹோம்ஸ் சீரியலும், பிரிட்டனின் பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஷெர்லாக் சீரியலும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில்தான் துவங்கின. அதனாலோ என்னவோ, இரண்டையும் ரசிகர்கள் ஒப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். எனக்கு இவை இரண்டையும் ஒப்பிடுவதில் உடன்பாடு இல்லை. இரண்டும் வெவ்வேறு உலகத்தில் இயங்குபவை. தனிப்பட்ட அளவில் எனக்கு பெனடிக்ட் கும்பர்பேட்ச் சிறந்த ஷெர்லாக்காகத் தெரிந்தாலும், எலிமென்டரி சீரியலில் வரும் சில காட்சிகளும் தருணங்களும் பிபிசி சீரியலைப் போகிற போக்கில் தூக்கி சாப்பிட்டு விடும். பிபிசி ஷெர்லாக் ஒரு ஹீரோ. ஆனால் எலிமென்டரி ஷெர்லாக் நம்மைப் போன்ற ஒருவன்; போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி மீள்பவன்; அவனுக்கும் உடல் உபாதைகள் வரும்; சக மக்களோடு சேர்ந்து பயணிக்கும் நிர்பந்தம் இருக்கும். இவற்றையெல்லாம் செய்தும்கூட அவன் ஒரு டிபிக்கல் ஷெர்லாக்காகவும் இருப்பான். அவ்வாறு இருக்க முயன்று இயல்பாகக் கஷ்டப்படுவான்;அதன் பாதிப்புகளை அனுபவிப்பான்.

எலிமென்டரியை நான் ஒரு சைக்கலாஜிக்கல் டிராமாவாகத்தான் வகைப்படுத்துவேன். ஒவ்வொரு எபிசோடிலும் ஒவ்வொரு கேஸ், பல உப்புசப்பில்லாதவை என்று குறை இருப்பினும், கதையை முன்நகர்த்தும் காட்சிகள் மிகமிக அழுத்தமாக இருக்கும். அவை ஆரவாரத்துடன் இருக்காது, மாறாக மெலிதாக வருடியபடி நம்மை உள்முகமாகத் திரும்ப வைக்கும். ஷெர்லாக் மற்றும் அவனுடைய பிரதான எதிர்ப்பாத்திரம் இரண்டுமே சாதாரண மனிதர்கள் என்பது, ஆச்சரியமாக கதையை சப்பையாக்காமல் இன்னும் சுவாரசியமாகவே ஆக்கும். ஷெர்லாக்குக்கும் மொரியார்டிக்கும் இடையே நடக்கும் யுத்தம் என்பது காட்சியளவில் மிகமிகக் குறைவாக இருந்தாலும், அந்த இருவரின் இருப்பு என்பது நம்மோடு கூட வந்துகொண்டே இருக்கும். போதைப் பழக்கம் மற்றும் மனநலப் பிரச்னைகள் பற்றி ஷெர்லாக்கின் மூலமாகவே உணர்ந்துகொள்ளும்போது அவற்றை நாம் சீரியசாக எடுத்துக்கொள்கிறோம். ஷெர்லாக்கின் மூளையே பாதிக்கப்படும்போது நம்முடைய மூளையெல்லாம் எம்மாத்திரம் என்ற நிதானத்தை ஷெர்லாக் ரசிகர்களுக்கு இந்தத் தொடர் வழங்கலாம். எனக்கு வழங்கியது. சர் இயான் மெக்கல்லன் நடித்த மிஸ்டர் ஹோம்ஸ் திரைப்படமும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. "ஆளானபட்ட ஷெர்லாக்குக்கே வயதாகிறது, நீயெல்லாம் எம்மாத்திரம்?" என்று ஒரு போஸ்டரை நான் உருவாக்கி என் அறையில் ஒட்டிவைத்திருக்கிறேன். ஷெர்லாக்கை மாடர்ன் உலகத்திற்கு ஏற்றார்போல் அட்டகாசமான திரைக்கதையோடு உருவாக்கியது பிபிசி சீரியல் என்றால், ஷெர்லாக் என்னும் மனிதனோடு பயணிக்கும் ஒரு மிகச்சாதாரணமான எளிமையான தொடர் எலிமென்டரி.

எலிமென்டரி எபிசோடுகள் குறித்து மைல்ஸ் மெக்னட் என்பவர் உளவியல் திறனாய்வு செய்து அருமையான விமர்சனக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். எலிமென்டரி ரசிகர்கள் கூகுளில் தேடவும். குறிப்பாக டயபாலிக்கல் கைண்ட் என்னும் எபிசோடுக்கு எழுதிய விமர்சனத்தைப் பலமுறை வாசித்திருக்கிறேன். எலிமென்டரி சீரியல் மீது என் மதிப்பு பன்மடங்கு உயர்ந்ததற்கு அந்தக் கட்டுரையும் ஒரு முக்கியக் காரணம். சில அலுவல்கள் காரணமாக நான் சீசன் நான்கு வரைதான் பார்த்திருக்கிறேன். கடைசியாக சென்ற ஆண்டின் துவக்கத்தில் பார்த்தது. இன்னும் இரண்டு சீசன்கள் மீதம் இருக்கின்றன‌ என்று நினைக்கிறேன். அந்த டயபாலிக்கல் கைன்ட் எபிசோடில் ஷெர்லாக் ஒரு பெண்ணுக்குக் கடிதம் ஒன்று எழுதுவான். யார் அந்தப் பெண் என்று தயவுசெய்து தேடாதீர்கள். அது தெரிந்தால் எலிமென்டரி பார்ப்பதில் அர்த்தம் சற்றே குறையும். கூகுளில் அறிவே இல்லாமல் அதை முதல் வாக்கியத்திலேயே வேறு போட்டிருக்கிறார்கள். அந்தக் கடிதத்தை சென்ற வருடம் தமிழில் மொழிபெயர்த்தேன். இன்று அதைக் காணொளியாக வெளியிடுகிறேன். சத்தமே இல்லாமல் என் இதயத்தில் குடிகொண்ட சீரிஸ் இந்த எலிமென்டரி. அதனால்தானோ என்னவோ, பிரேக்கிங் பேடை விட, நியூஸ் ரூமை விட எலிமென்டரியை ஒருபடி மேலாகவே நான் வைத்திருக்கிறேன், மேற்சொன்ன சீரிஸ்களின் திரைக்கதைகளின் கால் தூசி கூட எலிமென்டரி பெறாது என்றாலும். எலிமென்டரி வழி தனி வழி. ஜானி லீ மில்லர் நடிக்கும் ஷெர்லாக் அனைவருக்குமான ஷெர்லாக் அல்ல. கும்பர்பேட்ச் போல இவன் எல்லோரையும் கவர மாட்டான். ஆனால் அவனுக்கான இடம் என்ற ஒன்றை உங்களுக்குள் அவனே உருவாக்கிக்கொள்வான்.

I love this Sherlock!

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி