கல்லணைக் கிளி
கரிகால் பெருவளத்தான் தான் கட்டிய கல்லணையை நோட்டம் விட்டபடித் தன் யானை மீது அமர்ந்திருந்தார். அவரை சுற்றி அமைக்கப்பட்டிருந்த வேலியில் ‘யானைப் பூங்கா, உள்ளே அனுமதி இல்லை’ என்று போர்டு மாட்டியிருந்தது. அந்த வேலியில் சில மாடுகள் கட்டிப் போடப்பட்டு அதை மேய்த்துக் கொண்டிருந்தவன் கரிகாலருக்கு இணையாக அந்த அதிசயத்தைப் பார்த்துகொண்டிருக்க பூங்காவைச் சுற்றிலும் தார்சாலை போடப்பட்டு ஹாரன் சத்தம் காதைக் கிழித்துக்கொண்டிருந்தது. ஆறுவயதில் நான் சிறுவர் மலரில் பார்த்த கார்ட்டூன் கல்லணை இதுவல்ல, இது என்னமோ சென்னை மெரினா பீச் ரேஞ்சுக்கு திருச்சிராப்பள்ளிக் குரல்களில் கலகலத்துக்கொண்டிருந்தது. பாப்கார்ன், கோன் ஐஸ், மீன் வறுவல், சோளம், என்று அச்சு அசல் திருச்சி பீச்தான் !
யானைகளே நிற்க பயப்படும் அணை மதகுகளினூடே வெண்நாரைகளும் கொக்குகளும் ‘வாடி இருக்குமாம்’ படலத்தை நடத்திக்கோண்டிருக்க, அவைகளின் கணுக்கால் அளவிற்கு ஏதோ தண்ணீர் ஓடியது. கர்னாடக ஷெட்டர்வாளின் சூழ்ச்சியைக் கரிகாலர் சலனமின்றி பார்த்துக்கொண்டிருந்தார். கொக்குகளைப் பிடிக்க என் கேமரா சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.
“நியாயப்படி இவன்தான் ராஜராஜ சோழனுக்கு முன்னாடி ராஜாவாகியிருக்கணும், ஆனா சூழ்ச்சி பண்ணி கொன்னுட்டாங்க”, என்றார் அப்பா.
“அப்பா, அது ஆதித்த கரிகாலன். இவர் வேற, அவருக்கும் முன்னாடி !”
என் தம்பி இது எதுவும் புரியாமல் சரித்திரம் பேசும் என் வாயையும் சக்கு சக்கு என்று க்ளிக்கிக் கொண்டிக்கும் கையையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருக்க அம்மாவோ அங்கே அமர்ந்திருந்த ஜோசியக்காரர்களில் யாரை அணுகலாம் என்று நல்ல முகமாகத் தேடிக்கொண்டிருந்தார். கடைசியாக ஒருவரைப் பார்த்து அவரிடமே மாட்டிக்கொள்ளலாம் என்று முடிவு செய்து எங்களனைவரையும் கூட்டிச் சென்றார்.
“தலைச்சம் பிள்ளையோட பேரைச் சொல்லு தாயி”
“விஷ்ணு”
“விஸ்ணுங்கற பேருக்கு என்ன வந்துருக்கு மீனாட்சி ?”
நான் இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் ‘தலை+எச்சம்=தலைச்சம்’ என்று குருட்டுக் கணக்குப் போட்டபடி தலைக்கு மேலிருந்த மரக்கிளைகளை உற்று நோக்கிக்கொண்டிருந்தேன்.
“வயசு என்ன ஆகுது தம்பி ?”
“டேய் உன்னதான் !”, அப்பொழுதுதான் திரும்பிப் பார்த்தேன்.
“19”
“கேட்டியா மீனாட்சி ? தம்பி ஒரு பத்து ரூபாயைக் காணிக்கையாப் போடுங்க”. போட்டேன். கிளி வெளியே வரவில்லை.
“மீனாட்சி ? என் தாயே ? என்னம்மா ?”, அவரும் என்னவெல்லாமோ செய்து பார்த்தார், ஊஹும்.
“வேற பேரைச் சொல்லும்மா”
“விஜித்”
‘க்றீச்’, என்று கத்தியபடி வெளியே வந்தாள் மீனாட்சி. ஒரு சீட்டை எடுத்துக் கொடுத்தாள்.
“முழுமுதற் கடவுள் வினாயகன் வந்திருக்கான் ! அம்மா மொதல்ல தலைச்சம் பிள்ளைக்குப் பாத்துடறேனே, நீங்க பாக்க மீனாட்சியம்மன் மாதிரியே இருக்கீங்க, நீங்களே ஒரு சீட்டை எடுத்துக் குடுங்களேன்”, என்று என் அம்மாவைக் கிளி ஆக்கிவிட்டார். அம்மாவும் ஒரு சீட்டை எடுத்துக் கொடுத்தார்.
“ஆமா இவனுக்கு ஏன் கிளி சீட்டு எடுத்துக் கொடுக்கல ?”, அம்மா கேட்டார்.
“என் மீனாட்சி எல்லாருக்கும் சீட்டு எடுத்துக் குடுக்கும், இவருக்குக் குடுக்கல, ஏன்னு உண்மையைப் பட்டுனு சொல்லவா இல்ல ஒளிச்சுவச்சு சொல்லவா ?”, என்று பீடிகை போட்டார்.
“சொல்லுங்க ? என்ன விஷயம் ?”, அப்பாவின் குரலில் பதட்டம் தெரிந்தது.
அப்போதுதான் நான் கிளியைப் பார்த்தேன். என்னைப் பார்த்து அது திரும்ப வெறித்தது, கூண்டை அலகால் திறக்கப் பிரயத்தனப்பட்டு தோற்றது, அப்பொழுதுதான் அதை நான் கவனித்தேன்.
“இவரு விதியில புதுசா பெண்ணொருத்தி நுழைஞ்சிருக்கா, அவளுக்கும் உங்களுக்கும் ரத்த சம்பந்தம் ஏதுமில்ல, கூடவே பீடையும் சேர்ந்து நுழைஞ்சிருக்கு”
அம்மா என்னைப் பார்த்தார். நான் அவரை கவனிக்காமல் கிளியையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
“அவங்க என்ன வயசுக்காரங்களாகவும் இருக்கலாம், விதவையாக் கூட இருக்கலாம், இளம்பெண்ணாக்கூட இருக்கலாம்”
“விதவையா, அப்படி ஒன்னும் இல்லையே எங்களுக்குத் தெரிஞ்சு ?”, என்று வினவினார் அம்மா.
“ஹும்ம், உங்க பையனுக்கு கடந்த ஒன்றரை வருஷமா நேரம் சரியில்ல”, பேச்சை திசைதிருப்பினார். “ஆசுபத்திரி செலவு ஆகியிருக்குமே, மரணத்தைக் கிட்டத்துலேர்ந்து பாத்துட்டு வந்துருப்பாரே ?”
அம்மாவின் கைகள் நடுங்கின. “ஆமா சாமி”
“உடனே பரிகாரம் பண்ணியாகணும்மா, முடிஞ்சா நாளைக்கே !”, பரிகாரத்தை சொன்னார்.
“இதுக்கு யாராவது ரெண்டாயிரம் மூவாயிரம்னு கேட்டா குடுத்துடாதீங்க. வெறும் ஆயிரத்து இருனூற்றி அம்பத்தொன்னு ரூவாதான், உங்களால முடியாட்டி இவரு பேர்ல நாளைக்கே நான் பண்ணிடறேன். இவரோட வலதுகால் மண்ணை எடுத்து...”
“இல்லை இல்லை, நாங்க பாத்துக்கறோம்”, என்று அவசரமாக பதில் சொல்லிவிட்டு, “கெளம்பலாமா ?”, என்றார் அப்பா.
“கண்டிப்பா பண்ணிருங்க சாமி. இவ்வளவு நாளா இது தெரியாம இருந்துது, இப்ப தெரிஞ்சுக்கணும்னு விதிச்சிருக்கு ! இல்லைன்னா நீங்க ஜோசியம் பாக்காமலேயே போயிருக்கலாமே ?”
யாரும் பதில் பேசவே இல்லை.
“மத்தபடி நல்ல யோகமான முகவெட்டு ! சித்தன் போக்கு சிவன் போக்குனு அவரு பாட்டுக்கு ஒரு தனி உலகத்துல இருப்பாரு, என்ன நினைக்கிறாருன்னு கண்டுபிடிக்கறது ரொம்பக் கஷ்டம் ! பொண்ணு பாக்க உங்களுக்கு வேலை வெப்பாரா மாட்டாரான்னு என்னாலயே சொல்லமுடியலன்னா பாத்துக்குங்கமா !”, என்று ஒரு போடு போட்டார்.
அம்மா மறுபடியும் என்னைப் பார்த்தார்.
“பாவத்துக்கு சீக்கிரமா பரிகாரம் பண்ணிடுங்க சாமி, வேற எதாவது கேள்வி இருக்குங்களா ?”
“இல்லங்க, ரொம்ப நன்றி”, இன்னொரு பத்து ரூபாயைக் கொடுத்துவிட்டு எல்லாரும் எழுந்து நடக்க ஆரம்பித்தார்கள். தம்பிக்கு பார்க்க ஏனோ இஷ்டப்படவில்லை. நான் மட்டும் உட்கார்ந்திருந்தேன்.
“என்ன சாமி ? பரிகாரத்தைப் பத்தி மறுபடியும் சொல்லட்டுங்களா ?”
“கிளியோட றெக்கைக்கு என்னாச்சு ?”, என்றேன்.
“ஒன்னும் இல்லீங்களே”, என்றார். “நல்லாத்தானே இருக்கு ?”
“நல்லா பாருங்க”, என்றேன்.
அவர் முகம் சற்று கறுத்தது. “வேற ஒரு பரிகாரம் சொல்றேன் சாமி...”, என்று ஆரம்பித்தார்.
“கிளியோட றெக்கையை வெட்டின பாவத்துக்கு என்ன பரிகாரம்னு சொல்லுங்களேன் ?”
அவர் இதை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. குரல் தடுமாறியது.
“அது...வந்து...இல்ல சாமி பொழப்பு...”
எல்லோரும் எனக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
“சொல்லுங்க என்ன பரிகாரம் ?”, மறுபடியும் கேட்டேன்.
“ஹும்ம்ம்”, நீண்ட மௌனத்திற்குப் பிறகு பெருமூச்சுடன் சொன்னார். “கொடூரமான சாவுதாங்க எங்களுக்கெல்லாம். ஆனா நாங்க அடுத்த வேளை சாப்பிடணுமே ?”, என்று மீனாட்சியைப் பார்த்து குரல் நடுங்கக் கூறினார். மீனாட்சி அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. “க்றீச்” என்று றெக்கைகளற்ற பாதி கைகளை ஆட்டியபடி உணர்ச்சியற்ற கரிகாலர் சிலையைப் பார்த்து அலறினாள் அவள், அவராவது கண்டுகொள்வாரா என்று.
Comments
Post a Comment