Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

கொசுக்கடி, எத்தனையோ அனுபவி !


Courtesy: jokesprank.com

“If you think you are too small to make a difference, try sleeping with a mosquito.”
- Dalai Lama XIV

          ஒரு ஆப்பிரிக்கப் பழமொழியை வழிமொழிந்து தலாய் லாமா கூறிய கருத்தைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன். டார்வினின் 'Survival of the fittest' கொள்கைப்படி தற்போது கிட்டத்தட்ட பூமியின் சகல இடங்களிலும் கோலோச்சுவது மனிதன்தான். மனிதனுக்கு முந்தைய காலகட்டங்களில் ஆதிக்க உயிரினங்கள் தங்களின் தேவைக்கேற்பதான் மற்ற உயிர்களை வதம் செய்தன. அதாவது உணவுச் சங்கிலி அறுபடாமல் ஆதிக்கம் செய்தல் என்பது ஒரு மூர்க்கமான உயிரியல் நியதியாகவே இருந்து வந்தது. ஆனால் மனிதனின் காலகட்டத்தில் மற்ற உயிர்களை அழித்தல் என்பது உணவுச் சங்கிலிக்கு அப்பாற்பட்டு ஒரு கட்டுக்குள் அடங்காமல் போக ஆரம்பித்தது. Necessity என்பதற்கும் Luxury என்பதற்கும் இடையே இருக்கும் ஒரு மெல்லிய கோடு பல உயிரினங்களின் பாதுகாப்பின் மேல் கீரல் விழச்செய்தது. மனிதனுக்கு ஆறறிவு வந்த பிறகு அவன் அழிக்க ஆரம்பிக்காத விலங்கினங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவு இயற்கையைச் சுரண்டியிருக்கிறான் மனிதன். கடைசியாக டோடோ பறவையை மனிதன் பார்த்தது 1662வில். கண்டுபிடிக்கப் பட்ட ஒரே நூற்றாண்டில் கூண்டோடு ஒழிக்கப்பட்ட பழம்பெரும் பறவையினம் அது. டாஸ்மேனியன் புலியை ஒரு எண்பது வருடங்களுக்கு முன்னால்தான் அழித்தோம். அமெரிக்காவின் பாசஞ்சர் புறா ஒரு காலத்தில் நம்மூர் காகம் போல் திரும்பிய இடமெல்லாம் இருந்தது, இப்போது அதையும் தீர்த்துக்கட்டியாகிவிட்டது. இயற்கையின் அழிக்கும் சக்தியாய் உருவெடுத்திருக்கிறோம் நாம். இப்படிக் கண்ணில் பட்டவையெல்லாம் நம் காலடியின் கீழ் வருகிறது, வராதவை ஒரேடியாய் மடிகிறது.

          இப்படி பயங்கர டெரர் பார்ட்டியாக பூமியை வலம் வரும் நமக்கு உடல்பல ரீதியாக எதிரிகள் இருந்தாலும் அவற்றை நமது ஏழாம்...சாரி, ஆறாம் அறிவு மூலமாக நிர்மூலமாக்கிவிடுகிறோம். நமக்குப் போட்டியாளர்களே கிடையாததால்தான் சக மனிதர்களுடன் சண்டை போடுகிறோமோ என்னவோ. Terror bird பூமியை வலம் வந்த போது அதன் எதிரியாய் இருந்தது Saber-toothed tiger என்னும் ஒரு வகைப் புலி. இப்பொழுதும் ஒவ்வொரு விலங்கிற்கும் ஒரு பொதுவான எதிரி இருக்கத்தான் செய்கிறது. நாய்க்கு பூனை, சிங்கத்திற்குக் காட்டெருமை, யானைக்கு புலியைக் கண்டாலே ஆகாது, இப்படி. மனிதனால் பாதிக்கப்படும் உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவான எதிரியாய் நாம் இருக்கிறோம், ஆனால் இவை எதுவும் மனிதனின் அறிவிற்கு முன், அந்த அறிவினால் விளைந்த ஆயுதங்களுக்கு முன் ஒன்றுமில்லாமல் போய்விடுகின்றன. இப்படியாக எதிரிகளே இல்லாத உலகம் என்று ஆட்டையும் மாட்டையும் பார்த்துக்கொண்டிருந்த மனிதனின் எல்லைக்குள் ‘எனக்கும் உடல் பலம் முக்கியமல்ல’ என்று சத்தமில்லாமல் புகுந்தது ஒரு உயிரினம். இன்று வரை அதை நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்த உயிரினம்... கொசு.

          ஔரங்கசீப்புக்கு எதிராக மராட்டியர்கள் தலைதூக்கியபோது அவர்களைப் பூச்சிகள் என்றுதான் ஆலம்கீர் நினைத்தார். ஆனால் நடந்தது ? அதேதான் இங்கும். ஒரு பிசாத்து உயிரினம் என்று நாம் நினைக்கிறோம், அது நமக்கே தண்ணி காட்டுகிறது. எங்க பரம்பரை டைனோசர் ரத்தத்தையே குடிச்ச பரம்பரை என்று மனிதனுக்கே சவால் விடும் கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம்தான் உள்ளது. பொடிப்பயல் மாதிரி இருந்துகொண்டு நம் அனைவரையும் நிஜமாகவே ‘ரத்தத்தின் ரத்தங்கள்’ ஆக்கி நமக்குத் தீராத தலைவலி கொடுத்து வரும் கொசுக்களை ஒழிக்க நாமும் என்னவெல்லாமோ செய்துதான் பார்க்கிறோம். டோடோவை அழிக்க முடிந்த நம்மால், மேம்மோத்தையே அல்லையில் போட்டு மிதித்த மனிதர்களால், தம்மாத்துண்டு கொசுவை ஒன்றும் செய்ய முடியவில்லை.

          மனிதன் அதனை அழிக்க என்ன செய்தாலும் அதற்கு ஏற்றார்போல் அது பரிணமித்து விடுகிறது. முதலில் கொசுவத்தி ஏற்றினோம், ஒரு பதினைந்து தலைமுறைகள் வரை அதற்கு மடிந்தன. பின்னர் வந்தவை கொசுவத்தியின் மேலேயே உட்கார ஆரம்பித்து விட்டன. அதற்குப் பின் கொசு மேட் வந்தது, அதற்கும் மசியவில்லை. பிறகு ஆல் அவுட், குட் நைட் என்று ஆங்கிலத்தில் எதாவது செய்து பார்ப்போம் என்றால் அதற்கும் அது அடங்குவதாய் இல்லை. பிறகு கொசு பேட் அறிமுகமானது, அதற்குத் தற்போது நல்ல பலன் இருந்தாலும் முன்பு பட் பட் என்று வெடிக்கும் கொசு இப்பொழுது இரண்டு செகண்டுகள் துடித்துதான் இறக்கின்றன. மனிதனால் அழிந்த உயிரினங்களின் வரலாறு பல உண்டு, ஆனால் மனிதனால் வாழ்வளிக்கப் பட்ட, பரிணமிக்கப்பட்ட ஒரே உயிரினம் கொசுதான் !

          பொதுவாக கூகுளில் ஒரு உயிரினத்தின் பெயரைத் தட்டச்சினால் அதன் உயிரியல் தகவல்கள்தான் முதலில் வரும், நம்மவர் விஷயத்தில் கொசு வலைதான் முதலில் வருகிறது ! கொசுக்களிடமிருந்து தப்பிப்பது எப்படி என்று படங்களுடன் ஒரு தளம் விளக்குகிறது ! எஸ்.வி.சேகரின் ஒரு நாடகத்தில் ‘தூக்கமே இல்லை, ஒரு கொசுவைக் கூட காணோம்’ என்பார் அந்த மேற்கு மாம்பலத்துக்காரர் ! ஆம், கொசுக்கள்தான் நம் பிரதான எதிரி, நம் திறமைக்கும் தகுதிக்கும் ஈடு இணையான வெ.மா.சூ.சொ பெற்ற ஒரே அக்மார்க் உயிரினம் கொசுதான். கொசுக்களுக்கு மத்தியில் குடும்பம் நடத்துவது நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக மாறி விட்டது.

          சில வகை கடிக்காத கொசுக்களால் மனிதர்களுக்கு நன்மை ஏற்பட்டாலும் பெரும்பாலும் நம்மை டரியல் ஆக்குவதற்கென்றேதான் கொசுக்கள் பிறக்கின்றன. சாயங்காலம் ஆறு மணிக்கு ஜன்னல் கதவை மூடாவிட்டால் அன்று நாம் தூங்கின மாதிரிதான். அதுவும் மழைக்காலங்களில் கேட்கவே வேண்டாம். ‘சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்’ என்று சொல்லி முடிப்பதற்குள் ஒரு புது வியாதியை வீட்டிற்குள் கொண்டு வந்து விடுகிறது. டெங்குக்கு மூன்றெழுத்து, ஊதுகிற சங்குக்கு மூன்றெழுத்து என்று அடுக்கு மொழி பேச வைத்து இதுபோன்ற பதிவிற்கும் வழி செய்கிறது. இப்பொழுதும் கூட என்னை டைப் செய்ய விடாமல் ஒரு கொசு B+ve மோகத்தில் என்னையே சுற்றி சுற்றி வந்துகொண்டிருக்கிறது.

          மனிதர்கள் கொசுக்களின் மீது கொலைவெறியில் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் கொசு பேட்டை ஆவேசத்துடன் சுற்றும் போதே தெரிந்து கொள்ளலாம். ஐந்து செகண்டுக்கு ஒரு முறையாவது பட் என்று சத்தம் வந்தால் தான் ஆவேசம் கட்டுக்குள் இருக்கும். கொசு அவர்களைப் படுத்திய பாடு அப்படி. கடி தாங்காமல் பொறுமை இழந்தவர்கள் ‘உன் ரத்தத்தைப் பார்க்காமல் விடமாட்டேன்’ என்று ஓங்கி அடிக்க கடைசியில் முக்கால்வாசி அவர்களின் ரத்தத்தையேதான் பார்க்கும்படி ஆகிறது. வருடா வருடம் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா என்று இறக்குமதிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன, அவ்வப்போது புது ரிலீஸும் வருகின்றன. ஒரு காலத்தில் சிங்கம் புலிகளுக்கு பயந்து மரங்களின் மேல் வாழ்ந்த நாம் தற்போது கொசுவுக்கு பயந்து கொசு வலைகளினுள் பதுங்க வேண்டியதாயிருக்கிறது.

          கொசு என்ன வியாதியைக் கொண்டு வருகிறது என்பதைப் பற்றியெல்லாம் இயற்கைக்குக் கவலை இல்லை. இயற்கைக்குத் தேவை சமநிலை ஒன்றே, அதற்காக அது ஆக்கவும் அழிக்கவும் வழி செய்கிறது. இயற்கை நமக்கு என்றுமே உணர்த்துவது ஒன்றைத்தான், நாம் ஒன்றும் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் ஆகிவிடவில்லை என்பதுதான் அது. இந்த விஷயத்தை ஒரு கொசு நமக்கு உணர்த்துகிறது. இது நமக்கு மானப்பிரச்னையா இல்லையா என்பதை மகா மகா மானஸ்தர்களாகிய நாம்தான் தீர்மானிக்க வேண்டும். மனமிருந்தால் மார்ட்டின் உண்டு !

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி