28/08/12 - Appa-Amma's wedding day
அன்பைக் காட்டத் தெரியவில்லை எனக்கு. நான் என் அப்பாவின் ஜெராக்ஸ் காப்பி என்று அனைவரும் சொல்லும்போது சந்தோஷத்தில் எனக்கு என்னமோ பண்ணுகிறது, அப்பாவைக் கட்டியணைக்க வேண்டுமா, தோள் மீது கைபோட்டுக் கொள்ளவேண்டுமா, தொடையைச் செல்லமாக தட்டிக்கொடுக்க வேண்டுமா, மனசு விட்டுப் பேச வேண்டுமா, மோதிரத்தில் முத்தம் பதிக்க வேண்டுமா, தூங்கும்போது காலை அமுக்கி விட வேண்டுமா, என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை, அதேபோல் அப்பாவுக்கும் தெரியவில்லை ! அவர்தான் ஒரிஜினல் ஆச்சே ! அன்பைக் காட்டத் தெரியவில்லை, ஆனால் அன்பு இருப்பதுதான் முக்கியம், காட்டுவது இல்லை என்பது என் அப்பாவின் கோட்பாடு. சரியோ தப்போ, அந்த எண்ணம் அப்படியே எனக்கும் வந்துவிட்டது. இன்று என் அப்பா-அம்மாவின் 21-ம் கல்யாண நாள். என் அப்பா-அம்மாவுக்குப் பெரிதாக நான் ஒன்றும் செய்ததில்லை, அம்மாவிடம் சமையல் சூப்பர் என்று சொன்னதில்லை, அப்பாவிடம் நீங்கதான்பா என் ஹீரோ என்று காட்டிக்கொண்டதில்லை, ஆனால் இதெல்லாம் அவர்களுக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியும் ! சில நாட்கள் பிரிந்து இருந்தால் ஒரு ஃபோன் போட்டுக்கூட பேசியதில்லை. ஒரு மனிதனாக இதுவரை எந்த நல்லதையும் அவர்களுக்குத் செய்ததில்லை என்றாலும் ஒரு பையனாக, ஒரு மகனாக, இதுவரை நான் உண்மையாகவே இருந்து வந்திருக்கிறேன், அவர்கள் நான் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவ்வாறு நான் இல்லாமல் இருந்தாலும் நான் எப்படி இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்களோ அவ்வாறு நான் இல்லை என்பதுதான் ஒரு மகனாக நான் அவர்களுக்குத் தந்த பரிசு... Happy wedding day pa, ma... இவ்வளவுதான் வெளியே வருகிறது, சீக்கிரம் ஒரு சாதாரண மனிதனாக, மகனாக மாற முயல்கிறேன் அம்மா, அதுவரை என்னுடைய இந்த வார்தைகளில் இன்பம் காணுங்கள் ப்ளீஸ்... Happy wedding day.
Comments
Post a Comment