விஸ்வரூபம்
IMDB ரேட்டிங் பார்த்தவுடன் விஸ்வரூபம் படத்தை முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என்று நைட் ஷோவெல்லாம் போய், தூக்கம் தொலைத்து, அதிகாலை வீட்டிற்கு வந்து படுக்கையில் சாய்ந்தபோதுதான் தெரிந்தது, இது அவ்ளோ வொர்த் எல்லாம் இல்லை என்று. ஆங்காங்கே ஊசி குத்துவது போன்ற செருக் வசனங்கள், சில சமயம் வழவழா மொக்கை, சில இடங்களில் உண்மைச் சம்பவங்களின் துணுக்கு, சில இடங்களில் தமிழ் சினிமாவுக்கே உரித்தான ரசிகனின் ‘தலைவாஆஆ’காட்சிகள், இதற்கு ஊடே நாடு கடந்து, மதம் கடந்து, மொழி கடந்து, கடைசியில் செம சூப்பரான க்ளைமாக்ஸுடன் படத்திற்கு இனிதே தொடரும் போட்டிருக்கிறார்கள். படம் வெளியாவதற்கு முன்பே தடை செய்ய வேண்டும் என்ற இஸ்லாமிய அமைப்பினர்களிடமிருந்து நான் முரண்பட்டாலும், படம் பார்த்த பிறகு அவர்களின் அச்சத்தை என்னால் உணர முடிந்தது. ஆம், சர்ச்சைக்குரிய காட்சிகள் சில அங்கங்கே தென்படுவதுபோலத்தான் தெரிந்தன. நிச்சயமாகத் தொழில்நுட்ப ரீதியாகத் தமிழ் சினிமாவை இப்படம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை. அவ்விஷயத்தில் கமலுக்குப் பாராட்டுகள்.
டைட்டில் கார்டில் போடுவதுபோல் குழந்தைகள் கட்டாயம் பார்க்கக்கூடாத படம் இது. என் 13 வயது தம்பியைப் படம் பார்க்க அழைத்துப் போக பயமாக இருக்கிறது, ஏற்கனவே அவன் படிக்கும் பள்ளி சிறப்பு அபிஷேகத்திற்கெல்லாம் லீவு விடும், ஆனால் குறிப்பிட்ட சில பண்டிகைகளுக்கு மட்டும் லீவு விடாது, ஏன் என்று கேட்டால் இந்தப் பள்ளி இந்த மதம் என்கிறான். மனிதர்களுக்குப் பத்தாதென்று பள்ளிகளுக்கும் மதக் குறியீடு வைக்கும் விஷ விதையை தெரிந்தோ தெரியாமலோ இளைய தலைமுறையினரின் மனத்திற்குள் சில கல்வி நிலையங்கள் விதைத்துதான் வருகின்றன. மாற்றுக் கருத்து என்று ஒன்று இருக்கிறது என்கிற விவரம் தெரியும் வரை, அல்லது அதை மதிக்கிற பக்குவம் வரும்வரை இது போன்ற படங்களைக் குழந்தைகள் பார்க்காமல் இருப்பதே நலம்.
கமல் என்ற ஒற்றை மனிதரின் மதச்சார்பற்ற பிம்பத்தினால்தான் இது நடுநிலையான படம் என பெரும்பான்மை இணைய இளைஞர்களால் ஏற்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். ஒரு சராசரி ரசிகனின் பார்வையில் நல்ல படம், அடுத்த பாகத்திற்கு வெயிட்டிங் ! தனக்குக் கருத்துரிமையை விட, படைப்புத் திறமையை விட, சமூகப்பொறுப்புதான் அதிகம் என்று சந்தேகமற நிரூபிக்கக் கமலுக்கு இருக்கும் வாய்ப்பாக அது அமையலாம்.
பாக்கணும்னு தோணிச்சுனா ஒரு வாட்டி பாக்கலாம்.
Comments
Post a Comment