பேட்மேன் - ஜோக்கர்
"The man who laughs", என்னும் காமிக் புத்தகத்தை வாசித்து முடித்தேன். உலகில் அனைவருக்கும் பயத்தை உண்டு பண்ணுகிற, மிகவும் அபாயகரமான, அதே சமயம் அனைவருக்கும் பிடித்த சைக்கோ வில்லனான ’Joker' முதன்முதலில் தோன்றியது இந்தக் கதையில்தான். திடீரென்று காத்தம் பெருநகரத்தில் பல இடங்களில் பலருடைய சடலங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. சடலங்கள் அனைத்தும் வெள்ளை வெளேர் என்று வெளுத்துப்போய் பேயறைந்து, கண்கள் வெளியே திமிற யத்தனிப்பதுபோல் காணப்படுகின்றன இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியாமல் பேட்மேனும், போலீஸும் முடியைப் பிய்த்துக் கொண்டு இருக்க யாருமே எதிர்ப்பார்க்காத விதமாகத் தோன்றுகிறான் ஜோக்கர்.
இரசாயனம் பட்டதால் வெள்ளையான முகம், பச்சை முடி என்று கோமாளி போல் காட்சியளிக்கும் ஜோக்கர் இந்த உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட விதம் சுவாரசியமானது. ஒரு பத்திரிகையாளர் சடலங்கள் உள்ள இடத்தில் நின்று, நேரடி ஒளிபரப்பில் பேசிக்கொண்டிருக்க திடீரென்று அவரது முகமும் வெள்ளை ஆகிறது, கண்கள் எங்கோ பார்க்க முகம் பேயறைந்து, உடல் வெளுத்துப்போய், நடுநடுங்கி அப்படியே கீழே சரிகிறார், பின்னாலிருந்து சிரித்தபடியே கேமரா முன் நின்று, “காத்தமிற்கும் அதன் மக்களும் என் மாலை வணக்கங்கள்”, என்று கூறியபடி இந்த உலகிற்குக் காட்சியளிக்கிறான் ஜோக்கர். அதற்குப் பிறகு ஜோக்கர் பேட்மேனுக்கு ஏற்படுத்திய துன்பங்கள் சொல்லி மாளாதவை. ஒருவர் யிங்காகவும் இன்னொருவர் யாங்காகவும் சேர்ந்து நமக்கு நல்லது கெட்டதின் பரிணாமத்தைப் பல கதைகளில் உணர்த்துவார்கள். பல சமயங்களில் ஜோக்கரின் பேச்சில் நியாயம் ஓங்கி ஒலிக்கும். ஒடுக்கப்பட்ட ஒருவன் இந்த உலகைப் பழிவாங்க முடிவடுத்தால் அவனது வன்முறைக்கு எவையெல்லாம் வடிகாலாக இருக்கமுடியும், என்று அவன் தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தபடியே கூலாக ஜோக்கர் மக்களைக் கொன்று குவிக்கும்போது சில சமயம் நமக்கு நம் மீதே கோபம் கோபமாக வரும் !
இந்தக் கதையில் ஜோக்கர் இந்த உலகை எந்த மனநிலையில் நோக்குகிறான் என்று அறிய ஜோக்கரிடம் உள்ள அதே இரசாயனத்தை பேட்மேன் தன்னுள் செலுத்திக் கொள்கிறான், அது ஏற்படுத்துகிற வலி அவனைப் புரட்டிப் போடுகிறது. ஜோக்கரின் உதயத்திற்குத் தானும் காரணமாக இருந்ததை உணர்கிறான். என்னதான் ஜனநாயகம் என்று வாய்கிழியப் பேசினாலும் என்றுமே அரசாங்கம், பணம் படைத்தவனின் பகடைக்காயாகவே இருக்கிறது, சமூகத்தில் சமநீதி என்றைக்குமே கிடைப்பதில்லை, என்ற ஜோக்கரின் கோபத்தைப் புரிந்துகொள்கிறான். ஆனால் அதற்காக ஜோக்கர் தேர்ந்தெடுக்கும் பாதையை அவன் ஏற்க மறுக்கிறான். அங்குதான் இருவருக்கும் வேற்றுமை துவங்குகிறது. தனக்கு நேர்ந்த கதி அனைவருக்கும் நேரட்டும் என்ற ஜோக்கரது திட்டத்தை இறுதியில் கண்டுபிடித்து அதை முறியடிக்கிறான். கதை முடிகிறது.
இந்த ஜோக்கரின் பொழுதுபோக்கு பேட்மேனை சீண்டி அவனின் வழி தவறு என்றும் அவனைத் தன்னால் முறியடிக்க முடியும் என்றும் நிரூபிப்பது. பேட்மேன் ஜோக்கரைத் தன்பக்கம் இழுக்க முயற்சிக்க பதிலுக்கு ஜோக்கர் அவனை இவன் பக்கம் இழுக்க முயற்சிக்க, பிரச்னை தகராறு ஆகும், சண்டை வலுக்கும். இந்த இரண்டு கதாப்பாத்திரங்களுக்கு இடையே நிகழும் உளவியல் முரண்பாடுகள் மிகவும் சுவாரசியமானவை. ”The Killing Joke", என்கிற கதையின் இறுதியில் கீழ்காணும் உரையாடல் அரங்கேறும்:
“நமக்குள்ளே என்ன உறவு ஜோக்கர் ? உன்னை நான் அறவே வெறுத்தாலும் நான் ஏன் உன்னுடன் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறேன் ? உனக்கு என்னைப்பற்றித் தெரியும் அளவிற்குக்கூட எனக்கு உன்னைப்பற்றித் தெரியவில்லையே ?”
“அரசாங்கத்தின் கண்ணோட்டம் என்கிற கண்ணாடியைக் கழட்டி வைத்துவிட்டுப்பார், தெரியும்.”
“இது ஒரு முடிவே இல்லாமல் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. ஒன்று நீ சாகவேண்டும் அல்லது நான் சாகவேண்டும் என்கிற நிலை கூப்பிடு தூரத்தில்தான் இருக்கிறது என்பதை இருவருமே உணர்வோம். ஜோக்கர், உன்னை நான் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், நீ நல்லவன், உனக்கு இந்த உலகம் ஏற்படுத்திய துன்பத்திற்கு நான் வருந்துகிறேன், ஆனால் உன் வாழ்வு முடிந்துவிட்டது என்று நினைக்காதே, என்னுடன் வா, ஒரு புதிய வாழ்க்கையை நான் உனக்கு அமைத்துக் கொடுக்கிறேன்.”
”ஹாஹா”, ஜோக்கரின் கண்கள் கலங்குகின்றன. “ஒரு ஜோக் ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு சிறையில் இரண்டு பைத்தியக்காரர்கள் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள். எப்படியாவது விடுதலை பெறவேண்டும் என்று பல முயற்சிகள் செய்து பார்க்கிறார்கள். எப்படியோ கஷ்டப்பட்டு அறையை விட்டு வெளியே வந்து இருள் படர்ந்த மதில்சுவரை நோக்கி ஆவலுடன் ஓட, தூரத்தில் முழுநிலா இருவரையும் வரவேற்கிறது. ஒருவன் கையில் டார்ச் லைட் இருக்கிறது. அவன் அதை உபயோகித்து மேலே ஏறிவிட்டு, ‘நான் உனக்கு உதவி செய்கிறேன், மேலே ஏறி வா’, என்கிறான். இரண்டாமவன் மேலே ஏற எத்தனித்து, திடீரென்று அப்படியே நின்று யோசிக்கிறான், பிறகு சொல்கிறான், ‘என்னை என்ன பைத்தியக்காரன் என்று நினைக்கிறாயா ? பாதியில் நான் ஏறும்போது நீ டார்ச் லைட்டை அணைத்து விடமாட்டாய் என்பது என்ன நிச்சயம் ?’, என்கிறான்”, என்று சொல்லிவிட்டு பயங்கர சப்தத்துடன் சிரிக்கிறான் ஜோக்கர்.
பேட்மேனுக்கு சிறிது சிறிதாகப் புரிகிறது, மெலிதாகப் புன்னகைக்கிறான், பிறகு அவனும் ஜோக்கருடன் சேர்ந்து இடிஇடியென்று சிரிக்கிறான். ’இனி இருவருக்கும் திரும்பிப்போக வழியேதும் இல்லை, நாம் முரண்பட்டே ஆகவேண்டும்’, என்கிற ஜோக்கரின் வாதத்தில் உண்மை இருப்பதை பேட்மேன் உணர்கிறான். அந்த காமிக்கின் கடைசி பக்கம் உங்களை நிச்சயம் உறைய வைக்கும். உலகின் சிறந்த ஜோடிகளில் முதன்மையானவர்கள் இந்த பேட்மேனும் ஜோக்கரும்தான்!
Comments
Post a Comment