Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

பதினொன்றாம் புத்தகத் திறனறிதல் சந்திப்பு - ஒரு நீட்சி

          சாரல் தமிழ் மன்றத்தில் எது நடக்கிறதோ இல்லையோ, புத்தகத் திறனறிதல் சந்திப்பு வாரா வாரம் தொடர்ந்து நடைபெற்றே ஆகவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இதுவரை பதினொரு புத்தகங்கள் தங்குத் தடையின்றித் திறனறியப்பட்டுள்ளன. சாரல் தமிழ் மன்றத்தில் இந்த நிகழ்ச்சி ஒரு spin off என்று சொல்லலாம். மற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் வளர்ச்சியிலோ அல்லது முழுக்க முழுக்கத் தமிழ் சார்ந்தோ இருக்கும்போது இந்நிகழ்ச்சி மட்டும் சற்றே தனித்து நிற்கிறது. அறிவுப் பரிமாற்றம் மட்டுமே இந்நிகழ்ச்சியின் குறிக்கோள். மாணவர்கள் தங்களுக்கு எவ்வாறு வசதியோ அவ்வாறு பேச முழு சுதந்திரம் கொடுக்கப்படுகிறது. ஒரு புத்தகம் பற்றிப் பேசும்போது, இது தமிழ் மன்றம் நடத்தும் நிகழ்ச்சி, எனவே பேச்சில் ஆங்கிலக் கலப்பு இருக்கக்கூடாது என்று யோசித்து யோசித்துப் பேசி, அதனால் புத்தகம் சொல்ல வந்ததை சொல்லாமல் கருத்தில் கோட்டை விடுவதைத் தவிர்க்கவே இப்படி. சொல்ல வருகிற செய்தி அனைவருக்கும் போய் சேர வேண்டும் என்பதே முழுமுதல் எதிர்ப்பார்ப்பு. அதனால்தான் ஒவ்வொரு முறையும் புத்தகத் திறனறிதல் சந்திப்பு தொடர்பாக நண்பர்களுக்கு செய்தி ஏதேனும் அனுப்பும்போது, அனைவரும் இதனை அறிவுப் பரிமாற்றத்தின் களமாக அடுத்த தளத்திற்கு அழைத்துச் செல்வோம் என்று குறிப்பிட்டு வருகிறேன்.


          சென்ற புதன் கிழமையன்று எழுத்தாளர் திரு.எஸ்.இராமகிருஷ்ணனின் 'மறைக்கப்பட்ட இந்தியா' புத்தகம் திறனறியப்பட்டது. அப்புத்தகம் பேசிய சில விஷயங்களை ஒட்டி எனக்குத் தெரிந்த கூடுதல் தகவல்களை முடிந்தவரை இங்கே பகிர்ந்துக்கொள்கிறேன்.

1. முகலாயர்களின் கலையார்வம்:

          முகலாய மன்னர்கள் ஓவியக்கலையிலும் கட்டிடக் கலையிலும் காட்டிய ஆர்வம் பிரமிக்க வைக்கும் ஒன்று. முகலாய ஆட்சிக்காலத்தில் வரையப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓவியங்களும் கட்டப்பட்ட நூற்றுக் கணக்கான கட்டிடங்களும் இன்றும் காணக் கிடைக்கின்றன. அவை பாரசீகப் பாணியும் அல்ல, மங்கோலியப் பாணியும் அல்ல, பண்டைய இந்தியப் பாணியும் அல்ல. இம்மூன்றும் கலந்து, முகலாயப் பாணி என்ற பெயரைப் பெற்றுத் தனிச்சிறப்பைப் பெற்றவை அவை. இன்று நாம் கொண்டாடும் surrealistic style முகலாய மன்னர்களின் ஓவியங்களிலேயே காணக் கிடைக்கும். மன்னருக்குப் பின்னால் ஒரு ஒளிவட்டம், உலகத்தின் மேல் மன்னர் உயர்ந்து நிற்பது, என்று முகலாயர் காலத்து ஓவியர்கள் தங்கள‌து கற்பனைக் குதிரைகளைக் கட்டவிழ்த்து விட்டுப் பூந்து விளையாடியிருக்கிறார்கள். கீழே இருப்பது ஒரு உதாரணம். ஓவியத்தில் இருப்பது மன்னர் ஜஹாங்கீர்.

உட்பொதிக்கும் படங்கள் 4


2. கடைசி முகலாய மன்னர்:

          பள்ளியிலேயே படித்திருப்போம், கடைசி முகலாய மன்னர் இரண்டாம் பகதூர் ஷா ஜாபர் என்று. ஒரு காலக்கட்டத்தில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் நிலப்பரப்பைத் தன் காலடியில் வைத்திருந்த சாம்ராஜ்யம், டெல்லிக் கோட்டையின் நான்கு சுவர்களுக்குள் அடங்கிப்போயிருந்த சமயத்தில் அரியணை ஏறியவர்தான் இந்த இரண்டாம் பகதூர் ஷா ஜாபர். கடைசி முகலாய மன்னர் என்ற பெயரைத் தவிர சொல்லிக் கொள்ளும்படி வேறு விஷயங்கள் இல்லை. சிப்பாய்ப் புரட்சிக்கு வலுவான தலைமை இல்லை என்றபோது சிலர் இவரது தலைமையை ஏற்றனர். வெற்றி பெற்றால் இந்தியாவின் அரசராக முடிசூடப்படுவார் என்று முடிவு செய்தனர். வரலாற்றில் இவ்வளவுதான் இரண்டாம் பகதூர் ஷா ஜாபர். ஆனால் வேறு எந்த முகலாய மன்னருக்கும் வாய்க்காத ஒரு பெருமை இந்த மன்னருக்குக் வாய்த்திருக்கிறது. அது என்னவென்றால், புகைப்படம் எடுக்கப்பட்ட ஒரே முகலாய மன்னர் இவர்தான். சிப்பாய்ப் புரட்சிக்குப் பிறகு தற்போதைய மியான்மரின் தலைநகரான ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார். 87 வயது வரை உயிர் வாழ்ந்தார். மதன் எழுதிய ‘வந்தார்கள் வென்றார்கள்’ புத்தகம் இரண்டாம் பகதூர் ஷா ஜாபரின் வேதனை மிகுந்த கவிதையோடு முடிவு பெறும். 

"நான் நேசித்த எல்லாமே
எங்கோ போனது!
இது இலையுதிர் காலம்...
இழந்தது பூந்தோட்டம் 
தன் அழகையெல்லாம்!
நான் இன்று...
மின்னிய பழம்பெருமையின் 
மிஞ்சிய வெறும் நினைவு!"

கீழே இருப்பது அவரது கடைசி காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

உட்பொதிக்கும் படங்கள் 1

இது இரண்டாம் பகதூர் ஷா ஜாபரின் ஓவியம்.

உட்பொதிக்கும் படங்கள் 2 

3. காந்திக்கு முந்தைய மகாத்மா:

          மகாத்மா ஜோதிராவ் புலே மற்றும் சாவித்திரிபாய் புலே பற்றிய அறிமுகம் கிடைக்கக் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சுட்டிகளில் உள்ள பதிவுகளைப் படித்தாலே போதுமானது.


          இதுபோல் உங்களுக்குத் தெரிந்த தகவல்களை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துக்கொள்ளவும். இதனால் மூன்று நன்மைகள். ஒன்று, அனைவருக்கும் அறிவு போய் சேருவது. இரண்டாவது, யாரேனும் அதனைப் படித்து அதிலுள்ள தவறுகளை சுட்டிக்காட்டி நம் மண்டையில் கொட்டுவது. மூன்றாவது, ஈகோ பார்க்காமல் தவறைத் திருத்தி அத்திருத்தத்தையும் அனைவரிடமும் பகிர்ந்துக்கொள்வது. அறிவும் வாங்கிய பல்பும் அன்பும் பரிமாறிக்கொள்ளத்தானே?

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி