Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஏன் பலருக்கு காந்தியின் மீது வெறுப்பு?

"Mr.Gandhi was not an extra-ordinary man. He was an ordinary man who did extra-ordinary things."

நேற்று(15/08/14) அண்ணா பல்கலைக்கழகத்தில் 'யுவசக்தி' என்றொரு இளைஞர் அமைப்பு நடத்திய இளைஞர் எழுச்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் திரு.எஸ்.இராமகிருஷ்ணனிடம் ஒரு மாணவர் ஒரு கேள்வியைக் கேட்டார். “எனக்குக் காந்தியை மிகவும் பிடிக்கும். ஆனால் என் வயதை ஒட்டிய குறைந்தபட்சம் 50 சதவீத இளைஞர்களுக்கு காந்தியின் மீது வெறுப்பே உள்ளது. அவர் இந்தத் தவறை செய்திருக்கிறார், அந்தத் தவறை செய்திருக்கிறார், என்று ஒரு புகார்ப் பட்டியலே அவர்களிடம் இருக்கிறது. அவற்றிற்கு என்னால் சரியான பதிலை அளிக்க முடியவில்லை. அவற்றை நான் எப்படி எதிர்கொள்வது?”, என்று கேட்டார். அதற்கு திரு.எஸ்.ரா. அளித்த பதிலை இங்கு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.

”காந்தியை வெறுப்பது என்பது காந்தியை நேசிப்பதற்கான முதல் கட்டம் என்று வைத்துக்கொள்ளலாம். ஒருவரைப் பிடிக்காவிட்டால்தான் அவரைப்பற்றியே யோசித்துக்கொண்டிருப்போம். அவர் ஏதேனும் தவறு செய்துவிட மாட்டாரா என்று காத்துக்கொண்டிருப்போம். காந்தி பற்றிய எல்லா குறைகளையுமே காந்திதான் எழுதியிருக்கிறார். அதனை வேறு யாரும் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. இதுவரை காந்தியின் ஒரு குறையைக்கூட காந்தி சொல்லாமல் வேறு யாரும் கண்டுபிடித்ததே கிடையாது. அவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார் பாருங்கள். ‘My Experiment with Truth'. சத்திய சோதனை அது. சத்திய வெற்றி அல்ல. அவர் செய்தது பரிசோதனைகளை. அவர் தன் வாழ்நாள் முழுக்கப் பல்வேறு சத்திய சோதனைகளை மேற்கொண்டு வந்திருக்கிறார். பரிசோதனை என்றாலே வெற்றியும் இருக்கும் தோல்வியும் இருக்கும் அல்லவா? அவர் தன் வாழ்நாளை ஒரு சோதனைக் கூடமாக அமைத்துக்கொண்டார். சத்தியத்தை சோதனை செய்தார். சத்தியத்தை சோதனை செய்வதால் வருகிற விளைவு என்ன தெரியுமா? அவரைச் சுற்றியுள்ளவர்கள் அவரை வெறுக்க ஆரம்பிப்பார்கள். கோபப்பட ஆரம்பிப்பார்கள். ஆனால் யோசித்துப் பாருங்கள். காந்தியை வெறுக்கும் மக்களில் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆண்கள்தான் முக்கியமாக காந்தியை வெறுக்கிறார்கள். ஏன் காந்திக்குப் பெண்களைப் பிடிக்கிறது, பெண்களுக்குக் காந்தியைப் பிடிக்கிறது என்றால் இருவருமே தாய்மை உள்ளத்தோடு இருப்பவர்கள் என்பதால்தான். ஆண்களுக்கு ஏன் காந்தியைப் பிடிக்கவில்லை? ஒரு அரைகுறை உடையோடு, எந்த ஆடம்பரத்தையும் விரும்பாமல், ஒரு நிமிடத்தையும் வீணடிக்காமல், சுகத்தைத் தேடாமல், அதிகாரத்தைத் தேடாமல், தான் ஒரு ஆண் என்கிற அடையாளத்தைக் கூடத் துறந்துவிட்டு இருக்கிற இப்படி ஒரு மனிதன் எதற்கு? காந்தியைப் பின்பற்றுவது கடினம் ஆயிற்றே? காந்தியைப் பின்பற்றினால் நம்முடைய கழிவறைகளை நாம்தானே சுத்தம் செய்யவேண்டும்? நமக்குத்தான் அதில் உடன்பாடு இல்லையே. காந்தியை யார் பின்பற்ற நினைத்தாலும் அவருடைய வாழ்க்கை முறையை அவர் மாற்றிக்கொள்ள நேரிடும். காந்தியைப் போல் ஒருவர் உடையணிந்துவிட்டால் மட்டும் அவர் காந்தியாகிவிட முடியாது. காந்தியைப் போல் நாம் நடக்க ஆரம்பித்தால் அது சத்திய சோதனையில்தான் முடியும். அந்த சத்திய சோதனையை நிறைய பேர் விரும்ப மாட்டார்கள். அப்படி விரும்பாதபோது காந்தியை வெறுக்கத்தான் செய்வார்கள்.”

“சொல்லப்போனால் ஓராயிரம் குற்றச்சாட்டுகள் காந்தியின் மீது இருக்கின்றன. அவை காந்தியின் காலத்திலும் இருந்தன. காந்தியும் அவற்றை எதிர்கொண்டார். அந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் அவர் என்ன பதில் கொடுத்தார் தெரியுமா? புன்னகைதான். இதையெல்லாம் கவனித்து, இவற்றிற்கெல்லாம் சண்டை போடுகிறவர் அல்ல காந்தி. அதனால் அவரைப் பற்றி சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். நீங்கள் பதிலுக்கு வாதிடலாம், உங்கள் கருத்துகளை எடுத்து வைக்கலாம். அவர்கள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். இன்றைக்கு இல்லாவிட்டால் என்றைக்காவது ஒருநாள் அவர்களுக்கு வாழ்க்கையின் ஏதோவொரு கட்டத்தில் காந்தி தேவைப்படுவார். அப்பொழுது அவர்கள் காந்தியைத் தேடி வருவார்கள். ஆனால் காந்தி அப்படித் தேடி வருபவர்களை விரட்டியடிப்பவர் அல்ல. ஒருவர் எவ்வளவுதான் காந்திக்கு எதிராகப் பேசியிருந்தாலும், அவர் காந்தியை நெருங்கி வரும்போது காந்தி அவரை நோக்கித் தன்னுடைய கரங்களை நீட்டி, அன்போடும் அக்கறையோடும் அவரை அரவணைத்து, திரும்பவும் சொல்லப்போகிறார், ”நீயும் நானும் சகோதரன்தான்”, என்று.”

Comments

Post a Comment

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி