Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

நாங்களும் ரவுடிதான்



விக்னேஷ்: நீ ஒரு இலக்கிய வாசகன்.

விஷ்ணு: என்னது ஏலக்கா வாசமா?

விக்னேஷ்: சிலப்பதிகாரம் படிப்பவன் வாசகன். இளங்கோவைப் படிப்பவன் இலக்கிய வாசகன்.

விஷ்ணு:  நான் உனக்கு இலக்கிய ரவுடினு பட்டம் குடுக்கலாம்னு பாக்கறேன். நீ கொடுத்த ஈபுக்ஸ்ல என்னன்னமோ இருக்கு. பிராமி எழுத்துகள் எல்லாம் இருக்குன்னா பாத்துக்கோயேன்!

விக்னேஷ்: நானே முழுசா படிக்கல. எல்லாம் ஒரு ஆர்வக் கோளாறுதான்.

விஷ்ணு: இலக்கிய ரவுடியோட இலக்கணமே அதுதான். எல்லா இடத்திலும் இலக்கிய அறிவை வசூல் செய்வதுதான் அவன் வேலை. இலக்கிய ரவுடியும் ஏரியா பிரிப்பான். சிலப்பதிகாரம் உன்னுது, சீவக சிந்தாமணி என்னுதுன்னு.

விக்னேஷ்: நீ சொல்றது எதுவும் புரியல. ஆதலால் நீ ஒரு சிறந்த விமர்சகனாக, சிறு பத்திரிகை கட்டுரையாளனாக பரிணமிக்க வாய்ப்புகள் ஏராளம்.

விஷ்ணு: புரியலையா? வளைஞ்சு நெளிஞ்சு படுத்துருக்கேன், அதனால என் வார்த்தைகளில் ஏகப்பட்ட உள்மடிப்புகள் இருக்கும்.

விக்னேஷ்: உலகமயமாக்கலுக்கு பின்னான வாழ்க்கை முறையின் கூறுகள் நீ படுத்திருப்பதில் வெளிப்படுகிறது.

விஷ்ணு: இல்லை. நான் தனியாகப் படுத்திருக்கிறேன்.

விக்னேஷ்: இந்த சாட்ட படிச்சுட்டு தமிழ்மணி கடுப்பாகப்போறான்.

விஷ்ணு: தரை டிக்கெட் வாசகனுக்கு நம் கருத்தாடல்கள் புரியாது.

விக்னேஷ்: `தரை டிக்கெட்என்ற சொல்லாடல் தங்கள் ஆழ்மனதில் தொன்மமாகப் படிந்திருக்கும் ஆதிக்க மனோபாவத்தை அடக்குமுறையின் குரூர முகத்தை வெளிக்காட்டுகிறது.

விஷ்ணு: தரை டிக்கெட் என்பதில் ஒரு நுண்ணிய முரண் உள்ளது. தரை என்பது பூமி. டிக்கெட் என்பது மேலே போவது. இதைக் கண்டுபிடிப்பது கிட்டத்தட்ட ராமானுஜன் 1729 எண்ணைக் கண்டுபிடித்ததற்கு ஒப்பானது.

விக்னேஷ்: இதை தங்கள் கருத்துக்கு தாங்கள் இடும் வெளிப்பூச்சாகவே கொள்ள முடியும்.

விஷ்ணு: ஒரு நல்ல இலக்கிய ரவுடி வெளிப்பூச்சுகளை அடையாளம் கண்டு அதை அழித்து அடியில் இருக்கும் சிமெண்டு சுண்ணாம்பை வெளிக்கொணர்வான். பிறகு அச்செங்கல்களை எடுத்து அதைக்கொண்டே சொன்னவனின் கல்லறையைக் கட்டுவான். அவன் மீண்டும் அக்கல்லறையிலிருந்து மீண்டெழா வண்ணம் அவனைப் பற்றிப் பல கற்பிதங்களை அந்த இலக்கிய ரவுடி கட்டமைப்பான். கேட்டால் அதுதான் ஞான மரபு என்பான்.

விக்னேஷ்: இதன் பெயர்தான் மீட்டுருவாக்கம்.

விஷ்ணு: இலக்கிய ரவுடி பிறந்த ஊருக்கு புழுதிவாக்கம் பாலவாக்கம் மாதிரி மீட்டுருவாக்கம்னு பேரு வைக்கணும்.

தமிழ்மணி: தரை டிக்கெட் வாசகனுக்கு புரியாத இலக்கியம் தரை தெரியாம போயுடும் டோய்!

விஷ்ணு: அதாவது தர்மனின் தேர் போல் தரையில் படாமல் இருக்கும். ரவுடிகளுக்கிடையே பகை இருப்பதுபோல் இலக்கிய உலகில் இரு ரவுடிகள் இருக்கிறார்கள். ஒருவர் கம்ப ரவுடி, இன்னொருவர் சிலம்ப ரவுடி. முன்னவர் சீதாப்பிராட்டியை இட்டாந்தால் பின்னவர் கண்ணகியைக் கூட்டியாந்து கடை பரப்புவார். கம்ப ரவுடி சீதை நெருப்பில் விழுந்ததை சரி என்பார். சிலம்ப ரவுடி கண்ணகி மதுரையை நெருப்பால் எரித்தது சரி என்பார். இருவரும் பெரும் வன்முறையாளர்கள். ஆதலால்தான் அவர்கள் இலக்கிய ரவுடிகள்.

விக்னேஷ்: வரலாற்று ஆய்வாளர்கள் ஒருமித்த கருத்துடன் காரி துப்பும் வாய்ப்பு தெற்றெனத் தெரிகிறது நம் உரையாடலில்.

விஷ்ணு: அப்படியென்றால் வரலாற்று ஆய்வாளர்களை ஓரணியில் திரட்டிய பெருமை நம்மைச் சாரும் ஓய்!

தமிழ்மணி: அப்பவும் சு.சா. உண்மையான வரலாற்றை வெளியிடக்கோரி வழக்கு போட வாய்ப்புண்டு.

விஷ்ணு: சு.சா.வெல்லாம் தூசு. இலக்கிய ரவுடி நீதிமன்றங்களுக்கு அப்பாற்பட்டவன். நீதி தேவதை அவன் வாசகி. அவனுக்கு அதிக கடிதங்கள் எழுதி சாம்சங் கலர் டிவி வாங்கியவள் அவள்.

விக்னேஷ்: அவன் அரசமைப்புச் சட்டத்தையே இலக்கியத் திறனாய்வு செய்வான்.

தமிழ்மணி: இப்படி ரவுடியா வாக்கப்படுறதுக்கு...

விஷ்ணு: நோ நோ, வாக்கப்படுறது பெண்கள் சமாசாரம். அதில் ரவுடிகள் கை வைக்கக் கூடாது.

விக்னேஷ்: அதைப் பெண்ணுக்கானது என்று ஆணாதிக்கம் கொப்பளிக்கச் சொல்கிறீர்கள்.

விஷ்ணு: ஒரு நிமிஷம், வாஷ் பேசின்ல துப்பிக்கறேன்

விக்னேஷ்: நான் இதை பெண்ணியல் திறனாய்வு செய்யப்போகிறேன்.

விஷ்ணு: ஓ! பெண்ணிய ரவுடியா நீங்ள்?

விக்னேஷ்: ரவு`டி` என்பதே வரலாற்று ரீதியில் பெண்ணுக்கானதுதான்.
வழக்கம் மாறி ஆணுக்கு ஆயிற்று. வேண்டுமானால் இப்போது `ரவுடன்` என்று சொல்லலாம்.

விஷ்ணு: பெண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே பேணல் வேண்டும்; திண்ணிய ரவுடி வேண்டும்; தெளிந்தநல் லார்ஜு வேண்டும்.

விக்னேஷ்: மனிதன் என்பவன் ரவுடி ஆகலாம்.

விஷ்ணு: காலை வாரி விடுகிறப்போ காலி ஆகலாம். சீதையைத்தான் சுமந்த உள்ளம் கம்பனாகலாம்; கண்ணகியைக் கவர்ந்த நெஞ்சம் சிலம்பனாகலாம். இவன், இவன், நல்ல ரவுடியாகலாம்...
ஷங்கர் கூட ஒரு நாள் ரவுடிஸ்க்ரிப்ட் செய்யலாம்.

விக்னேஷ்: நாம அதுக்கு இலக்கிய விமர்சனம் எழுதிடலாம்.

விஷ்ணு: ’ஒரு நாள் இலக்கிய ரவுடி’. என்ன ஒரு வரலாற்று தூமகேதுத் தருணம்! உப்புக் கம்பர் எலும்பு ஊறவச்ச சிலம்பு.... ஊட்டிவிடத் தோணுது எனக்கு அது சரி, இப்போ நாளைக்கே நீ கலெக்டர் ஆகிட்டா அப்போ நீ அரசாங்க ரவுடியா?

விக்னேஷ்: ஜனநாயக ரவுடி.

தமிழ்மணி: ரவுடிகள் இல்லையடி பாப்பா!

விக்னேஷ்: என்னுடைய அடுத்தப் படைப்பு `சில நேரங்களில் சில ரவுடிகள்`.

விஷ்ணு: என்னுடைய அடுத்த படைப்பு டீக்கடை ரவுடியும் டிராக்டர் ரவுடியும்.

விக்னேஷ்: ரவுடி வீடு பூட்டிக் கிடக்கிறது.

விஷ்ணு: கண்ணம்மா என் ரவுடி-I, கண்ணம்மா என் ரவுடி-II.

விக்னேஷ்: குடும்ப ரவுடி.

விஷ்ணு: ரவுடியும் அரசியலும்.

விக்னேஷ்: இயக்கங்களும் ரவுடிகளும்.

விஷ்ணு: மலை ரவுடி.

விக்னேஷ்: ரவுடியலங்காரம்.

விஷ்ணு: ரவுடிகள் நாகரிகமும் பண்பாடும்.

விக்னேஷ்: யாருமே ரவுடியில்லை.

விஷ்ணு: ரவுடிப்பாவை.
பாடல் 1-5 = ரவுடி நோன்பு பற்றி.
பாடல் 16-30 = ஒன்று கூடி ரவுடி வீட்டிற்குச் செல்லுதல்.

விக்னேஷ்: "நான் இந்த நாட்டின் இலக்கிய ரவுடியானால் அரசியலும் இலக்கியமும் தனித்தே இருக்கும். நான் இலக்கிய ரவுடி. அதற்காக நான் என் உயிரையும் தருவேன். அரசுக்கு அதில் தலையீடு இல்லை."
- மகாத்மா ரவுடிஜி

தமிழ்மணி: ரவுடியே செத்துட்டான் இதுக்குமேல என்னடா உங்களுக்கு இலக்கியம்?

விஷ்ணு: ரவுடிகள் மறையலாம். ஆனால் இலக்கியங்கள் மறைவதில்லை.

தமிழ்மணி: போங்கடா டேய் போங்கடா போய் விவசாயம் பாருங்கடா.

விஷ்ணு: ஓ! விவசாய ரவுடியா நீ?
.......
........
.......
........
.......
........
விஷ்ணு: எங்க விவசாய ரவுடி? எஸ்கேப்பா?

Comments

Post a Comment

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி