சாப்ளினின் கல்லறை
Corsier-sur-Vevey. வாழ்வில் என்றைக்காவது ஒரு நாள் இங்கு வரவேண்டும் என்று நினைத்திருந்தேன். இவ்வளவு சீக்கிரம் வருவேன் என்று நினைக்கவில்லை. சிட்டி லைட்ஸ் படத்தின் கடைசி ஷாட்டைப் பிரிண்ட் எடுத்து ஒரு மலர்ச்செண்டுடன் சென்றிருந்தேன். நண்பர் ஒருவர் துணைக்கு வந்திருந்தார். சாப்ளின்பால் நான் மொத்தமாக விழ சிட்டி லைட்ஸ் படத்தின் கடைசி ஷாட் ஒரு காரணம். சக மனிதர்களுடன் பழகுகையில் நாம் பல முகமூடிகளை அணிகிறோம், வேடங்களைப் போடுகிறோம், பாத்திரங்களை ஏற்கிறோம். நம்முடைய சுயம் என்று நாம் நினைக்கும் அந்தரங்க இயல்புகளை நாம் அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் காட்டிவிடுவதில்லை. தொடர்ந்து ஓர் இடைவெளியுடனே பயணிக்கிறோம். ஆனால் ஒருசில மனிதர்களிடம் பழகுகையில் ஒரு குறிப்பிட்ட பொழுதில் நம் பாசாங்குகளைக் களைந்துவிட யத்தனிக்கிறோம். சில நொடிகளுக்கு நம் சுயத்தை அப்பட்டமாகத் திறந்துகாட்டத் துணிகிறோம். மிகவும் அவஸ்தையான சூதாட்டத் தருணங்கள் அவை. “இதுதான் நான். அழகாக இருக்கிறதா? உனக்குப் பிடித்திருக்கிறதா? விலக வேண்டும் போல் தோன்றுகிறதா? உன் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கிறதா? பிடிக்கவில்லையா? இந்த அசிங்கம் இனி வெளியே யாருக...