Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

இராட்டையும் ரோஜாவும்


          10/05/17 அன்று தி.நகர் காந்தி கல்வி நிலையத்தில் நவின் ஜோஷி தொகுத்த “The Charkha and The Rose" புத்தகத்தின் நூல் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. தனக்கென்று தனித்த ஆளுமை இல்லாத, முழுக்க முழுக்க காந்தியின் நிழலில் வளர்ந்தவர் நேரு என்று ஒரு புறமும், இத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தும் காந்தி நேருவைத் தலைமைப் பொறுப்புகளுக்கு முன்மொழியக் காரணம் அவரை ஆரம்ப காலத்தில் மோதிலால் நேரு ஆதரித்ததுதான் என்று மற்றொரு புறமும் தொடர்ந்து மேம்போக்கான வாதங்கள் பொதுவாக வைக்கப்படுகின்றன. ஆனால் காந்தி, நேருவுக்கு இடையேயான உறவு என்பது எவ்வாறு தொடர்ந்த உரையாடல்களால் கருத்து வேற்றுமைகளுக்கு இடையே செதுக்கப்பட்டது என்பதை இந்நூலின் மூலம் அறிய முடிகிறது. இது ஒரு ஆய்வு நூல் அல்ல; காந்தி நேரு தொடர்புடைய இருவரின் பேச்சுகள், புத்தகங்கள், கடிதப் பரிமாற்றங்கள், நாளிதழ் செய்திகள், பத்திரிகையாளர் சந்திப்புகள், தலையங்கங்கள் ஆகியவற்றின் தொகுப்பே இப்புத்தகம். திரு.ஏ.பாஸ்கர் அவர்கள் மிக அருமையாக செலுத்திச் சென்ற அந்நிகழ்வில் நான் கேட்டவற்றை என் நினைவில் உள்ளவரை, என் புரிதலையும் இடையிடையே நுழைத்தபடித் தருகிறேன்.

முன்குறிப்பு 1: காந்தி-நேரு இடையேயான தனிப்பட்ட கடிதப் பரிமாற்றங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே அமைந்திருக்கின்றன. ‘You' என்று காந்தி உபயோகித்த சொல் ‘நீ’ என்று குறிக்கிறதா அல்லது ‘நீங்கள்’ என்று குறிக்கிறதா என்று தெரியவில்லை. கிட்டதட்ட தந்தை-மகன் உறவு இருவருக்குமிடையே இருந்திருக்கிறது; காந்தியும் மிக உரிமையோடு நேருவின் குடும்ப விஷயங்களில் கருத்து தெரிவித்திருந்திருக்கிறார். அவற்றை வைத்து பாஸ்கர் ‘you' என்பதை ‘நீ’ என்றே மொழிபெயர்த்திருந்தார். அதை அப்படியே இங்கும் பின்பற்றியிருக்கிறேன். மோதிலால் நேருவாகட்டும், ஜவகர்லால் ஆகட்டும், இந்திரா காந்தியாகட்டும், கமலா நேருவாகட்டும், அனைவரிடமும் ஒரே அன்போடும் உரிமையோடும் காந்தி உரையாடியிருக்கிறார்; ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலைமுறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களோடு காந்தியால் ஒரே அலைவரிசையில் உரையாட முடிந்திருக்கிறது.

முன்குறிப்பு 2: காந்தி, நேரு இருவரும் ஆங்கில மொழியில் அதீத ஆளுமை பெற்றவர்கள். அவர்களின் கடிதங்கள் உயர்தர ஆங்கிலத்தில் பொட்டில் அடித்தாற்போல் இருக்கும். தமிழில் அவற்றை மொழிபெயர்க்கும்போது கடிதத்தின் சாரம் சற்றே மழுங்கிப் போவதைத் தவிர்க்க முடியாது என்று பாஸ்கர் கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார். அதையே இங்கும் சொல்லிக் கொள்கிறேன்.


* ஒரு முறை நேருவின் பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு ஒரு நாளிதழில் அச்சடிக்கப்பட்டுவிடுகிறது. காந்தி யங் இந்தியாவில் எழுதுகிறார், “சமயங்களில் என் பேச்சே என் நாளிதழில் தவறாக அச்சடிக்கப்பட்டுவிடுகிறது. அவ்விஷயத்தில் ஆங்கிலப் பத்திரிகையாளர்கள் நம்மை விட கவனமாக இருக்கிறார்கள். என்னைக் கேட்டால் இப்படித் தவறாக அச்சடிக்க முதலில் இந்தப் பேச்சுகளை ஏன் அச்சடிக்க வேண்டும்? எதிர்காலத்தில் பேச்சாளர் அந்தப் பேச்சில் திருத்தம் செய்தால் அப்பொழுது மட்டும் அதைக் குறிப்பிட்டு பிரசுரிக்கலாம்”.

* 1922-ல் சௌரி சௌரா நிகழ்விற்காக ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி நிறுத்தியதற்கு காட்டமாக அதிருப்தி தெரிவித்த பலருள் நேருவும் ஒருவர். “அம்மக்களையே அறியாமல் அந்நிகழ்வு வன்முறைப் பாதையில் முடிந்துவிட்டது; அதற்காக மொத்த இயக்கத்தையும் நிறுத்துவது எப்படி சரியாகும்”, என்று சிறையில் இருந்தபடி நேரு காந்திக்குக் கடிதம் எழுதுகிறார், அதற்கு காந்தி, “நீ சிறைக்கு உள்ளே இருக்கிறாய், அதனால் நிலைமையை உன்னால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம்; ஆனால் நான் வெளியே இருக்கிறேன், என்னால் நிலைமையின் தீவிரத்தை உணர முடிகிறது.”, என்று பதிலளித்தார். பின்னாளில் தன் சுயசரிதையில் நேரு சௌரி சௌரா குறித்து சொல்கிறார். காந்தி உட்பட யாருமே முன்வைக்காத பார்வை அது. “வன்முறை நிகழ்ந்ததால்தான் காந்தி பின்வாங்கினார் என்று பலரும் சொல்கிறார்கள். எனக்குக் கூட காந்தி மீது கோபமும் வருத்தமும் இருந்தது. ஆனால் காந்தி தன்னுடைய ஆழ்மனது உணர்த்திய அறிவை சார்ந்தே செயல்பட்டிருக்கிறார். இந்நாட்டின் நாடித் துடிப்பை அறிந்தவர் அவர். ஒவ்வொரு இந்தியக் குடும்பத்தின் எண்ண ஓட்டமும் காந்திக்கு மட்டுமே தெரிந்திருந்தது. அதன் அடிப்படையில்தான் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தினார்.”, என்கிறார் நேரு. அதாவது மக்கள் வன்முறையை விரும்பிவிட்டார்கள் என்று காந்தி பின்வாங்கவில்லை, மாறாக அவ்வன்முறை மக்களிடையே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது; அதன் அடிப்படையிலேயே அகிம்சைக்கு இந்தியா இன்னும் தயாராகவில்லை என்று காந்தி பின்வாங்கினார், என்று பதிவு செய்கிறார் நேரு.

* அதே காலகட்டத்தில் சிறையில் இருந்தபடி ஒவ்வொன்றிற்கும் கருத்து சொல்லியபடி காந்திக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருந்தார் 31 வயதான நேரு. “வெளியுலகை சட்டை செய்யாதே. இப்படி நான் சொல்வது ஆச்சரியமாக இருக்கலாம்; வெளியுலகை சட்டை செய்யாமல் இருப்பது சுலபமான காரியமும் அல்ல. ஆனால் நீ இன்னும் நிறைய படிக்க வேண்டும். ஆழமாகப் படி, நிரம்பப் பணிகள் செய், நிறைய இராட்டை சுற்று”, என்று அவருக்கு அறிவுரை வழங்கினார் காந்தி. சில நாட்கள் கழித்து ‘சிறையில் இருந்தபடி 4,000 யார்டு (12,000 அடிகள்) நூல் நூற்றிருக்கிறார் நேரு’ என்று நவஜீவன் பத்திரிகையில் செய்தி வெளியானது.

* 1920-கள் நேருவுக்கும் காந்திக்கும் கருத்து வேறுபாடுகள் பெருமளவில் இருந்த காலகட்டம். ஒரு கூட்டத்திற்குத் தலைமை தாங்க சிலர் காந்தியை அணுகியிருந்தார்கள். தன்னால் வர இயலாது என்று கூறிய காந்தி, “இதற்கு என்னால் நேருவை மட்டுமே பரிந்துரைக்க முடியும்; நேருவை மட்டுமே என்னால் நினைக்க முடிகிறது. ஏனெனில் எனக்குத் தெரிந்து இந்தியாவில் உள்ள உண்மையான மனிதர்களுள் நேருவும் ஒருவர்”, என்றார். இந்தியாவின் மிக உண்மையான மனிதர் என்று சொல்லவில்லை; எனக்குத் தெரிந்த உண்மையான மனிதர்களுள் நேருவும் ஒருவர், என்றார்.

* ஜவகர்லால் நேரு அடுத்த தலைவராக வரவேண்டும், இளைஞர்கள் முன்வந்து காங்கிரசைப் புத்துணர்வு பெறச் செய்யவேண்டும், என்று இயக்கத்திற்குள் குரல்கள் வலுப்பெறத் துவங்கியிருந்தன. 1928-ல் அப்பொழுது காங்கிரஸ் தலைவராக இருந்த மோதிலால் நேரு இது சரி வருமா என்று காந்தியிடம் தன் தயக்கத்தை வெளிப்படுத்தினார். அதற்கு காந்தி, “ஜவகர்லால் தலைவராக ஆவதில் எனக்குக் கருத்து வேற்றுமை இல்லை. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாட்டில் மதவாதம் தலைதூக்கியிருக்கிறது; நம் இயக்கத்தவரே மாற்று வழியில், வன்முறைப் பாதையில் ஈடுபாடு கொள்ளும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இத்தருணத்தில் காங்கிரசை வழிநடத்த ஜவகர்லால் சிறந்த தேர்வாக இருக்கும் பட்சத்தில் அதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவராக ஜவகர்லால் தேர்வு செய்யப்பட்டால், அங்கு தன்னுடைய இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்குத்தான் தன் முழு நேரத்தையும் செலவிட வேண்டியிருக்கும்; அந்தப் பொறுப்பை வைத்துக்கொண்டு நாட்டிற்குப் பெரிதாக சேவை செய்துவிட முடியாது; அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்”, என்றார். காந்தி அனைத்துக் கடிதத்தையும் முடிக்கும்போது நல்லவிதமாகத்தான் முடிப்பார்; நம்பிக்கையை ஏற்படுத்தும் முனைப்பு அதில் தெரியும். இதிலும் அப்படித்தான் இருக்கிறது. “காங்கிரசுக்குள் தலைதூக்கியிருக்கும் மதவாதம் நிச்சயமாக ஓய்ந்துவிடும்; அப்பொழுது அவர்களுக்கே ஒரு ஒழுக்கவாதி தேவைப்படுவார், அப்பொழுது ஜவகர்லால் அத்தேவையைப் பூர்த்தி செய்வார்”, என்று அக்கடிதத்தை முடிக்கிறார் காந்தி.

*1928-ல் அலகாபாத்திலிருந்து காந்திக்குக் கடிதங்களாக அனுப்பிக்கொண்டிருந்தார் நேரு. காங்கிரஸ் சப்ஜெக்ட் கமிட்டியின் சில தீர்மானங்கள் மீது காந்தி கடுமையான விமர்சனங்கள் வைத்திருந்த பின்னனியில் நேரு ஒரு நீண்ட கடிதம் எழுதுகிறார். “காங்கிரஸ் சப்ஜெக்ட் கமிட்டியின் தீர்மானம் குறித்து ஆழமாக எழுதாமல், மிகவும் பொத்தாம் பொதுவாக சில விமர்சனங்களை வைத்திருக்கிறீர்கள். அது கமிட்டிக்கும் காங்கிரசுக்கும் நல்லது என்று நினைக்கிறீர்களா? அவை அவசர கதியில் நிறைவேற்றப்பட்டதாகச் சொல்லியிருக்கிறீர்கள்; சிந்திக்காமலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டதாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால் இவற்றைப் பற்றி ஐந்து வருடங்களாக பல தளங்களில் விவாதங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன, கூட்டங்களில் பேசப்பட்டிருக்கின்றன, பல கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன, அது போக அந்தக் கமிட்டி மூன்று மணி நேரங்கள் விவாதம் செய்து, அதில் பன்னிரண்டு பேர் தீர்மானத்தை ஆதரித்தும் எதிர்த்தும் பேசியிருக்கிறார்கள், அதன் பிறகே ஏகமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள். இதைத்தான் அவசர கதியில் எடுக்கப்பட்ட முடிவு என்று சொல்கிறீர்களா? அல்லது சப்ஜெக்ட் கமிட்டியில் இருக்கக்கூடியவர்கள் சிந்திக்கும் திறனற்றவர்களா? தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோது நீங்கள் அங்கு இல்லவே இல்லை, ஏதோ நான்கு பேர் குறை சொன்னார்கள் என்பதற்காக சரியாக விசாரிக்காமல் இவ்வாறு எழுதலாமா?”, என்று சரமாரியாகக் கேள்விகளால் தாக்குகிறார். இறுதியாக இன்னொரு கடுமையான விமர்சனத்தை வைக்கிறார். “சென்ற ஆண்டு நீங்கள் இருந்தபோது இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லையே என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இது ஒரு ஆரோக்கியமான செயலா? இதனால் தனிநபர்களின் விருப்பப்படியே தீர்மானங்கள் நிறைவேற்றப்படவேண்டும் என்னும் பொருள் வந்துவிட்டதே?”, என்று கேட்கிறார். “சப்ஜெக்ட் கமிட்டியின் தீர்மானத்தை ஏற்கனவேயே சிலர் விமர்சித்து எழுதியபடி இருக்கிறார்கள், அதை யார் வேண்டுமானாலும் எதிர்க்கட்டும், நையாண்டி செய்யட்டும், ஆனால் யார் செய்தாலும் ஒருவர் மட்டும் அவ்வாறு செய்ய மாட்டார் என்று நினைத்திருந்தேன், அது நீங்கள்தான். அது பொய்யாகிப் போனதைத்தான் எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சரியான விசாரணைகள் இல்லாமல் யார் வேண்டுமானாலும் பேசிவிட்டுப் போகட்டும், ஆனால் காந்தி அவ்வாறு பேசிவிட்டாரே என்பதுதான் எங்களின் வருத்தம்”, என்று முடிக்கிறார்.

* அதே 1928-ம் ஆண்டு. அப்பொழுது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக நேரு இருந்த காலகட்டம். நேருவின் ஆளுமை பன்மடங்கு வளர்ச்சியடைந்திருந்த காலமும் கூட. இங்கிருந்துதான் காந்தி-நேரு இடையே கருத்துப் பரிமாற்றம் அதிகரிக்கத் துவங்குகிறது. சபர்மதி ஆசிரமத்திலிருந்து காந்தி ஒரு கடிதத்தை எழுதி அந்த நீண்ட நெடிய கடித உறவுக்கு விதை போடுகிறார், “எனக்கு அறிவுரை ஏதேனும் சொல்லவேண்டும் என்று நினைத்தால் நீ தாராளமாக சொல்லலாம்”, என்று எழுதுகிறார். அதே கடிதத்தில் “சைமன் கமிஷனை பகிஷ்கரிப்பதைவிட இயக்கத்திற்குள் ஒற்றுமையைக் கட்டிக் காப்பதுதான் முக்கியம். போராட்டம் என்பதுகூட இரண்டாம் பட்சம் என்னும் அளவிற்கு ஒற்றுமை மிக மிக அவசியம், அதை இணைத்தே பார்க்கவேண்டும்”, என்று காந்தி ஆலோசனை கூறுகிறார். அப்போது காங்கிரசுக்குள் இருந்த பன்முகத்தன்மை அப்படி. இயக்கத்தையும் ஒற்றுமையாக வைத்துக்கொள்ளவேண்டும், சுதந்திரப் போராட்டத்தையும் தொய்வின்றி நடத்த வேண்டும், அதே நேரத்தில் அது வன்முறையற்ற, ஆயுதமேந்தாத, அகிம்சைப் போராட்டமாகவும் இருக்கவேண்டும். கம்பியின் மேல் நடப்பதுபோன்றது இது என்ற பதட்டம் காந்திக்கு இருந்திருக்கிறது. பலருக்கும் எழுதிய கடிதங்களில் இறுதிவரை அந்த ஒற்றுமையைத் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருந்திருக்கிறார் காந்தி. அதே நேரத்தில் நான்தான் இப்போராட்டத்தையே செலுத்துகிறேன் என்று காந்தி எந்த இடத்திலும் வெளிப்படுத்திக்கொள்ளவில்லை. நேருவுக்கு நம்பிக்கையூட்ட சபர்மதியிலிருந்து அடுத்த கடிதத்தை எழுதுகிறார். “உனக்கு இயக்கத்திற்குள் ஏதேனும் சுதந்திரம் தேவைப்பட்டால், உனக்கு வேண்டிய சுதந்திரம் கிடைக்கும்”. நாற்பதாண்டுகளுக்கும் மேல் நெடும் வரலாறு கொண்டிருந்த காங்கிரஸ் இயக்கத்தில் இளவட்டமாக நுழைந்து வளர்ந்துகொண்டிருந்த நேருவுக்கு காந்தி வழங்கிய நம்பிக்கை அது.

* அதுபோக மூன்றாவதாக ஒரு கடிதத்தை அனுப்புகிறார்; அதில், “என் கருத்துகளுக்கு எதிராக மட்டுமல்ல, எனக்கு எதிராகவும் நீ வெளிப்படையாக யுத்தம் நடத்தவேண்டும். ஏனென்றால், ஒருவேளை என் பக்கம் தவறு இருந்தால் அது தேசத்திற்கே ஈடுசெய்ய முடியாத இழப்பாகிவிடும். நீ என்னோடு யுத்தம் செய்வதன்மூலம் என் தவறுகளை என்னால் திருத்திக்கொள்ளமுடியும்; அதன்மூலம் தேசத்தை அபாயத்திலிருந்து காக்கலாம்”, என்று எழுதுகிறார். இங்கு காந்தி ‘அபாயம்’ என்றும், ‘ஈடு செய்ய முடியாத இழப்பு’ என்றும் குறிப்பிடுவது தான் முன்வைக்கும் அகிம்சைக்கு மாற்றான வன்முறையைப் பாதையின் விளைவுகளையே. காந்தி மேலும் எழுதுகிறார், “என் முடிவுகளில் உனக்கு சந்தேகம் இருக்குமானால், அதை நிவர்த்தி செய்வதற்குக் கூட எனக்கு எதிராக நீ யுத்தம் நடத்தலாம். ஏனென்றால், காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இருக்கும்போது நீ சந்தேகத்துடன் செயல்படக்கூடாது. அந்த அவசியத்தின் பொருட்டு நீ என்னோடு வெளிப்படையாகவே யுத்தம் புரிய வேண்டும், அது உன் கடமையும் கூட”, என்கிறார். இவ்வாறு காந்திக்கும் நேருவுக்கும் இடையே நிகழ்ந்த கருத்து மோதல்கள் அவர்களின் கடிதங்களிலும் எதிரொலிக்கிறது. காந்தி மிக முக்கியமான ஒரு கருத்தை அக்கடிதத்தில் பதிவு செய்கிறார். “நமக்கிடையே இருக்கும் வேற்றுமைகள் அதிகமாகவும் மிகவும் கடுமையாகவும் இருக்கின்றன. என் நெஞ்சத்தில் அதனால் ஏற்பட்ட துக்கத்தை என்னால் மறைக்கவும் முடியவில்லை. இதனால் ஒரு உண்மையான, நம்பிக்கையுள்ள, திறமையான, ஒரு தோழமையை நான் இழந்துவிடுவேனோ என்று எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது.”, என்கிறார். இதிலும் நேர்மறையாகவே கடிதத்தை முடிக்கிறார். “தோழமையை இழந்தாலும் பரவாயில்லை, ஏனெனில் நம் நோக்கங்கள் எல்லாவற்றைவிடவும் உயர்வானது. நம்மிடையே தோழமை உணர்வு பாதிக்கப்பட்டாலும், நம் தனிமனித நெருக்கத்தை அது பாதிக்காது”. நம் தோளோடு தோள் நின்று போராடும் தோழனாக ஒருவன் இருந்தால் மட்டுமே அவன் நெருக்கத்தை நம்மால் விரும்ப முடியும் என்பதை காந்தி மறுக்கிறார். இதுவேறு அதுவேறு என்று தெள்ளத் தெளிவாக காந்தி அன்பை முன்னிலைப்படுத்திய தருணம் அது. “நாம் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அது எத்தகையது என்றால், லால் பகதூர் சாஸ்திரிக்கும் எனக்குமான நெருக்கத்தைப் போன்றது. எங்கள் வேற்றுமைகள் எங்களுக்குத் தெரிவதற்கு முன்னால் எங்களிடையே இருந்த பரஸ்பர அன்பு எப்படி இப்போதும் இருக்கிறதோ, அவ்வாறே நாமும் இருப்போம்”.

* அக்கடிதத்தின் இறுதியில், “என் கருத்தோடு முரண்படும் இடங்கள் அனைத்தையும் பட்டியலிட்டு உன் எதிர்க்கருத்துகளை வை, அதை நான் யங் இந்தியாவில் பிரசுரிக்கிறேன். அவற்றிற்கான என் பதில்களையும் நான் பிரசுரிக்கிறேன். மக்களிடையே உடையாடல்கள் நடக்கட்டும்”, என்கிறார் காந்தி. ஆனால் நேரு அவ்விதம் யங் இந்தியாவில் பிரசுரிக்கப்பட எழுதவில்லை. பின்னாட்களில் நேரு இதையொட்டித் தனது சுயசரிதையில் எழுதுகிறார். “சமூக-பொருளாதார மற்றும் இதர விஷயங்களில் காந்திக்கு முரணான கருத்தாக்கங்கள் இருந்தன. ஆனால் அவருடைய கருத்தாக்கங்களை காங்கிரஸ் தலைமையின் மீது அவர் திணிக்கவில்லை. மாறாக, சில நேரங்களில் சிலவற்றை அவர் காங்கிரசுக்குள் நுழைத்தார். அப்படி நுழைக்கும்போது, அனைவரின் சம்மதத்தையும் பெற அவர் முயற்சித்தார். சில சமயங்களில் சம்மதம் கிடைத்தது. சில சமயங்களில் அவர் அனைவருக்கும் முன்னால் செல்லத் துவங்கிவிடுவார்; அப்போது சக மக்கள் கூட வரவில்லையென்றால், சிறிது பின்வாங்குவார்”, என்று சமரசங்களின் மூலம் காந்தி அனைவரையும் அரவணைத்துச் சென்றதைப் பதிவு செய்கிறார் நேரு.

* அதே வருடம் ஜூன் மாதத்தில் சபர்மதியிலிருந்து காந்தி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கடிதத்தை நேருவுக்கு எழுதுகிறார். “நீ சொன்னவற்றோடு எனக்கும் ஒத்த கருத்து இருக்கிறது. ஒரு நாள் இக்காங்கிரஸ் இயக்கம் செல்வந்தர்களும் செல்வாக்குள்ள படித்தவர்களும் இல்லாத ஒரு தீவிரமான இயக்கமாக உருவாக வேண்டும்”, என்கிறார். அதாவது காந்தி காங்கிரசைப் புணரமைப்பு செய்த பின்னும் பெரும்பாலும் செல்வந்தர்களும் படித்தவர்களும்தான் இன்னும் தீவிரமாக இயங்குகிறார்கள் என்றும், அவ்வியக்கத்தை இன்னும் மக்கள் நோக்கி செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்றும் இருவரும் பேசிக்கொள்கிறார்கள். பாமர மக்களின் மீது முன்முடிவான, கீழானதொரு கருத்து இல்லாமல், அவர்களாலும் ஜனநாயகத்தை உயிர்த்திருக்கச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருவரிடமுமே வெளிப்படுகிறது.

* அடுத்த காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுப்பது குறித்து 1929-ல் யங் இந்தியாவில் காந்தி எழுதுகிறார். “எனக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் நம்பிக்கையோ தைரியமோ இல்லை. காரணம், நான் காங்கிரஸ் கட்சியின் தலைவரானால், நான் காங்கிரஸ் கட்சியின் பிரச்னைகளை மட்டும்தான் பார்க்க வேண்டி வரும்; பிறகு சுதந்திரப் போராட்டத்திற்கான என்னுடைய வியூகத்தை வகுப்பது கடினமாகிவிடும். எனக்கு வெளியே நிரம்ப வேலைகள் இருக்கின்றன”, என்கிறார். நேரு ஏகப்பட்ட இளைஞர்களை திரள் திரளாகக் காங்கிரசுக்குள் கொண்டு வந்திருந்தார். காந்தி இந்த இளைஞர் அலையை வரவேற்கவே செய்தார். “காங்கிரசில் உள்ள பொறுப்புகளிலிருந்து நான் விலகிச் செல்வதன்மூலம் என்னால் இன்னும் சிறப்பாக தேசப் பணிகளை செய்ய முடியும். நான் பின்னிருக்கையில் அமர்ந்துகொண்டு சீறி வரும் இளைஞர் அலை என்னைத் தாண்டி முன்னே செல்வதைப் பார்க்க விரும்புகிறேன்.”, என்கிறார். நேரு பற்றி குறிப்பிடுகையில், “தற்பொழுது காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இருக்கும் நேருவின் ஆளுமை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இளைஞர்களின் ஆதர்சமாக, அவர்களின் கனவுகளை நிறைவேற்றும் குணநலன்கள் மிக்கவராக அவர் திகழ்கிறார். தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோருக்கும் நேருவின் மீது நம்பிக்கை இருக்கிறது. மேலும் ஐரோப்பிய அரசியலைப் பற்றி அவர் நன்கு அறிந்து வைத்திருக்கிறார். எனவே காங்கிரசின் தலைமைப் பொறுப்பை அவரிடம் கொடுப்பது பொறுத்தமாக இருக்கும்”, என்று ஆதரவு தெரிவிக்கிறார். ஆனால் காங்கிரஸ் போன்ற பேரியக்கம் இளைஞர்களின் கைகளில் செல்வது சரியாக இருக்குமா என்ற தயக்கம் பலருக்கு இருந்தது. நேரு காங்கிரசின் தலைவரான பிறகு யங் இந்தியாவில் காந்தி, “இளைய தலைமுறையிடம் அதிகாரம் செல்வதில் எனக்கு பயம் இல்லை. காரணம், அது பாதுகாப்பான கரங்களில்தான் இருக்கிறது. இத்தேசம் இளைஞர்களின் மீது நம்பிக்கை வைத்திருப்பதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான் நேரு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது. இந்நாட்டில் உள்ள இளைஞர்கள் தங்களின் ஆதர்சமாக இருக்கக்கூடியவர் தலைவராக வந்துவிட்டார் என்று மகிழ்வதோடு மட்டும் நிற்காமல், ஒவ்வொருவரும் நேருவின் கரத்தை வலுப்படுத்துகின்ற வகையில் செயல்பட வேண்டும்”, என்று இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். 1922-ல் ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட்டு, சுயராஜ்யக் கட்சி துவங்கப்பட்டு, தேசிய அரசியலிலிருந்து காந்தி தற்காலிக ஓய்வு பெற்று, சைமன் கமிஷன் வந்து, வன்முறையின் வழி நின்ற இயக்கங்கள் ஒவ்வொன்றாக முளைத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், காங்கிரசுக்குள் நிகழ்ந்த இந்த மாற்றம் வரலாற்றுப்பூர்வமாக முக்கியத்துவம் வாய்ந்தது.

* 1929-ல் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக நேரு தேர்வு செய்யப்பட்ட பின், சில நாட்களிலேயே அவரிடமிருந்து காந்திக்கு ஒரு கடிதம் செல்கிறது. அலகாபாத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்ற வேளையில் நேரு எழுதுகிறார், “உலகத்திலேயே கடினமான பொறுப்பு காங்கிரஸின் தலைவராக இருப்பதுதான் என்று இப்பொழுது புரிகிறது. மதன் மோகன் மாளவியா போன்றவர்களின் கொள்கைகள்தான் காங்கிரசின் கொள்கை என்றால், எனக்கு இங்கு வேலை செய்வது கடினம். அவர்களோடு கருத்து ரீதியாக முரண்பட்டுக்கொண்டே தலைவராகவும் இயங்குவது என்பது என்னால் முடியாத காரியம். இப்படி அனைவரையும் இணைத்துக் கொண்டு செல்ல உங்களால் மட்டுமே முடியும். நீங்களே தலைவர் ஆகிவிடுங்களேன்”, என்று அதில் எழுதப்பட்டிருந்தது. பின்குறிப்பாக, “நான் இக்கடிதத்தை எழுதுவதன் மூலம் காந்தியை எவ்வளவு துன்புறுத்துகிறேன் என்று எனக்குத் தெரியும்; ஆனாலும், நான் என் இதயத்தை லேசாக்கிக் கொள்வதற்காக இதை எழுதுகிறேன்”, என்கிறார். இரண்டாம் நாளே காந்தியிடமிருந்து விரைவாகத் தந்தி வந்தது. “இதுபோன்ற முடிவுகளை எடுக்கையில் அவசரப்படக்கூடாது. நான் எங்கே வரவேண்டும் என்று சொல், அங்கே நாம் சந்திக்கலாம்; ஆனால் ராஜிநாமாவை மட்டும் வலியுறுத்தாதே”, என்று சமாதானப்படுத்துகிறார் காந்தி. காந்தியின் இத்தந்தி ராஜினாமா நோக்கி நேரு செல்வதைத் தடுத்து நிறுத்தியது. இவ்வாறு தேச ஒற்றுமை கருதி அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பை நேரு படிப்படியாக வளர்த்துக்கொண்டார். அதற்கு காந்தி குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றியிருக்கிறார். ராஜினாமா செய்யாதே என்று அவசரமாகத் தந்தியனுப்பிவிட்டு, பிறகு நேருவுக்குப் பொறுமையாகக் கடிதமும் எழுதுகிறார் காந்தி. “தற்பொழுது எவராலும் இந்தப் பொறுப்பை உன்னைப் போல் சிறப்பாக ஏற்க முடியாது, ஏனெனில் இக்கிரீடம் ரோஜாக்களால் ஆனவை அல்ல; முற்களால் ஆனவை”, என்று அன்புக் கட்டளை இடுகிறார்.

* காங்கிரசின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட நேரு லாகூர் மாநாட்டில் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பை ஏற்கிறார். அங்கு காந்தி, “என்னால் இளைய தலைமுறையினரைக் கட்டுப்படுத்த முடியும். என்னைக் குதிரை சவாரி செய்யச் சொன்னால் நான் செய்வேன்; காரணம், கடிவாளம் நேருவின் கைகளில் இருக்கிறது; நேருவோடு நிற்கும் இளைஞர்களின் கைகளில் இருக்கிறது.”, என்கிறார். அந்த வருடம் நேரு கைது செய்யப்பட்டபோது, “நேரு போன்ற இளைய தலைவர்களை பிரிட்டிஷ் அரசாங்கத்தால் புறக்கணிக்க முடியாது; அதனால்தான் கைது செய்திருக்கிறார்கள்”, என்கிறார் காந்தி. நேரு இதற்கு முன் கைது செய்யப்பட்டபோது காந்தி இவ்வாறு சொன்னதில்லை. ஆனால் நேரு காங்கிரசின் தலைவராக இருக்கும்போது கைது செய்யப்பட்ட நிலையில் அவ்வாறு சொல்லி பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு காந்தி மேலும் நெருக்கடி கொடுத்தார். குஜராத்தில் ஒரு கூட்டத்தில், “எப்படி குஜராத்துக்கு ஒரு சர்தார் படேலோ அப்படி இந்தியாவுக்கு ஒரு நேரு. அவர் எங்களுள் சிறந்தவர்”, என்கிறார்.

* காந்தி-நேரு இடையேயான உறவு வளர்ந்தது பெரும்பாலும் கடிதங்களால்தான். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பல்வேறு விஷயங்களை அவர்கள் இருவரும் பகிர்ந்துகொள்கிறார்கள். அக்டோபர் 1935-ல் நேருவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார் காந்தி. “நாமிருவரும்  கடிகாரத்தைப் போன்ற துல்லியத்துடன் கடிதங்களை எழுதுகிறோம். சீரான இடைவெளிகளில் நீ எனக்கும் நான் உனக்கும் எழுதும் கடிதங்கள் என்பது நமக்கு ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டது. அது எனக்கு மிகப்பெரும் ஆசீர்வாதமாக இருக்கிறது.”

* 1933-ல் ஒரு நேர்காணலில் காந்தியிடம் ‘நேருவின் பொதுவுடைமை சார்ந்த கொள்கைகளால் காங்கிரசுக்குக் கம்யூனிச சாயம் வந்துவிட்டதா’ என்று கேட்கிறார்கள். “காங்கிரசின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டுதான் நேரு அதன் தலைவர்களுள் ஒருவராக ஆகியிருக்கிறார். அவர் பொதுவுடைமைக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர், ஆனால் அதே நேரத்தில் அதை இந்தியாவின் சூழ்நிலைக்கேற்ப அவர் இன்னும் தகவமைக்கவில்லை; அதை நோக்கி அவர் சென்றுகொண்டிருக்கிறார்”, என்கிறார். அடுத்த ஆண்டு இந்துஸ்தான் டைம்ஸ் எடுத்த நேர்காணலில் ‘காங்கிரசுக்குள் சோசியலிச குழு ஒன்று நுழைந்திருக்கிறதே’ என்ற கேள்விக்கு, “அதை நான் வரவேற்கிறேன். அது சிறப்பாக செயல்படுமேயானால், தேசத்தின் பண்புகளையும் சூழல்களையும் கருத்தில் கொண்டு, கட்டுப்பாடுடன் இயங்கி நன்மையையே செய்யும்.”, என்கிறார் காந்தி. 1936-ல் “நேருவின் சொற்பொழிவுகள் விஞ்ஞான சோசியலிசத்தை மையமாகக் கொண்டிருந்தாலும் என்னை அது பாதிக்கவில்லை. அவர் ரஷ்ய மாதிரியை ஆதரிக்கவில்லை; அவர் அதை ஆதரிக்கிறார் என்பது பொய். ஆனால் இந்தியாவின் தேவைகளுக்கேற்ப அதை அவர் தகவமைக்க முற்படுகிறார் என்பது உண்மை. அதை நான் எதிர்க்கவில்லை என்றாலும், எந்த முறையில் காங்கிரஸ் இயக்கத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன; ஆனால் அதை வைத்து எங்களை எதிரெதிர் துருவங்களாக சித்தரிக்க முற்படுவது கேலிக்குரியது. எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பதில் சந்தேகமே இல்லை, ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் எங்களிடையே நடந்த கடிதப்போக்குவரத்தின் மூலம் பலவற்றை நாங்கள் சரி செய்துகொண்டு விட்டோம். இருந்தாலும், சில வேளைகளில் வெவ்வேறு பாதைகளில் நாங்கள் பயணித்தாலும், ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளவே முடியாத நிலை ஏற்பட்டாலும், எங்களிடையே உள்ள பரஸ்பர அன்பு உடனடியாக எங்களை ஒன்று சேர்த்துவிடும்”, என்கிறார் அழுத்தமாக.

* 1942-ல் காங்கிரஸ் காரிய கமிட்டியில் வார்தாவில் கூடியது. அங்குதான் காந்தி தன்னுடைய அரசியல் வாரிசாக நேருவை அறிவிக்கிறார். “என்னுடைய வாரிசு ராஜாஜி அல்ல; சர்தார் பட்டேலும் அல்ல; ஜவகர்லால் நேருவே என்னுடைய வாரிசு. இப்பொழுது நான் என்ன செய்கிறேனோ, அதை எனக்குப் பிறகு அவர் தொடர்வார். அந்த வேலையைத் தொடர்வது மட்டுமல்ல, நான் பேசுகின்ற மொழியிலேயே அவரும் பேசுவார்”, என்கிறார் காந்தி. வெறுப்பு விதையை ஜின்னா ஆழமாகத் தூவ ஆரம்பித்திருந்த காலகட்டம் அது. தேசம் வன்முறையால் பிளவுபடும் அபாயம் ஏற்பட்டிருந்தது. மேலும் பெண்களையும் ஒடுக்கப்பட்டோரையும் சமமாக, சக மனிதர்களாகப் பாவிக்கும் இந்திய சமூகத்தை உருவாக்கும் அவசியம் இருந்தது. அதுவும் வெவ்வேறு அடையாளங்களையும் கலாசாரங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த இந்தியாவை ஒற்றுமையாக வைத்துக்கொண்டே அந்த சாகசத்தைப் புரிய வேண்டியிருந்தது. எனவே அனைவருக்கும் பிடித்தமான, அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய ஜனநாயகவாதியான நேருவாலேயே இத்தேசத்தை ஒன்றுபடுத்தி, அதில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை சாத்தியப்படுத்த முடியும் என்பது காந்தியின் உறுதியான நம்பிக்கையாக இருந்தது. பிரிவினை காலகட்டத்தில் நேருவையும் கொல்ல முயற்சி நடந்ததை இதனுடன் இணைத்துப் பார்க்கவே வேண்டியிருக்கிறது.

* ஒரு புறம் இயக்கத்திற்காக, குறிக்கோளுக்காக உழைத்தபடி இருக்கும் காந்தி, பொது வாழ்வைத் தாண்டி தனி மனித அளவிலும் பலரிடம் நெருக்கம் பாராட்டுகிறார். குடும்ப உறுப்பினரைப் போல் இதைச் செய் அதைச் செய் என்று ஆலோசனை கூறுகிறார். மோதிலால் நேருவிடம், “ஜவகர்லால் பற்றி வருந்தத் தேவையில்லை”, என்கிறார். ஜவகர்லாலிடம், “வேலையை விட்டுவிட்டு அப்பாவின் காசில் சாப்பிடுவதாக நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறாயா?”, என்று கேட்கிறார். கமலா நேருவின் உடல்நலத்தை ஒழுங்காக கவனித்துக்கொள் என்கிறார், உதவியாகத் தனக்குத் தெரிந்த மருத்துவ முறைகளை நேருவுக்கு ஒரு கடிதமாக எழுதுகிறார். இந்திரா காந்தி குறித்து, “இந்திரா மேலே படிக்கப் போகிறாளா அல்லது திருமணம் செய்துகொள்வதாகத் திட்டமா?” என்று கேட்கிறார். ஒரு படி மேலே சென்று திருமணம் செய்துகொள்வதாக இருப்பின் தீபக் என்று ஒரு பையனைப் பார்த்து வைத்திருக்கிறேன் என்கிறார்! இந்திராவின் திருமணம் குறித்து நேருவுக்கோ கமலாவுக்கோ எண்ணம் வரும் முன்பே காந்தி உரிமையுடன் அப்பேச்சைத் துவக்குகிறார். வருடங்கள் கழித்து பெரோஸ் காந்தியைத் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்தபோது காங்கிரசுக்குள்ளிருந்து அதிருப்திக் குரல்கள் வருகின்றன. அப்பொழுது, “கமலா நேரு உடல்நலமின்றி இருந்தபோது பெரோஸ் அவரை நன்றாக கவனித்துக்கொண்டார். இந்திராவுடன் நட்பாகப் பழகினார். நேரு தேசப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது அவரது குடும்பத்திற்கு முழுக்க முழுக்க தன்னுடைய ஆதரவையும் அரவணைப்பையும் வழங்கினார். எனவே அவரை ஒரு பார்சி என்று மட்டும் பார்க்காமல், அவரிடத்திலே உள்ள மானுடத்தைப் பார்க்க வேண்டும்”, என்கிறார் காந்தி. வேறொரு இடத்தில், “திருமணத்திற்காக மதம் மாறுவதை நான் ஏற்கவில்லை, இந்தத் திருமணத்தைப் பொறுத்தவரை அது நடக்கவும் இல்லை. மதங்களுக்கிடையே பரஸ்பர சகிப்புத்தன்மை கூட இன்னும் எட்டப்படவில்லை. அப்படியே அது எட்டப்பட்டாலும், அந்தப் பரஸ்பர சகிப்புத்தன்மை பரஸ்பர மரியாதையாக உருவெடுக்கும் நாள்தான் இந்தியாவுக்குத் திருநாள்”, என்று காந்தி இந்தியாவுக்கு உயரியதொரு இலக்கை வைக்கிறார்.

* நேரு தன்னுடைய சுயசரிதையில் இவ்வாறு எழுதுகிறார். “ஒரு நோக்கம் எவ்வளவு பெரிதானதாக இருந்தாலும், அது தெளிவற்றதாக இருந்தால் காந்தி அதன் பக்கம் செல்ல மாட்டார். அதே நேரத்தில் ஒரு நோக்கம் மிகக் குறிப்பாக, நிச்சயமாக அடையக்கூடியதாக இருப்பின், அது எவ்வளவு சிறிதாக இருப்பினும் காந்தி தன் முழு கவனத்தையும் அதில் செலுத்துவார்.”, என்கிறார். “தேச விடுதலையோடு தொடர்பில்லாத சில விஷயங்களில் காந்தி தலையிட்டது முதலில் எனக்கு விருப்பமில்லாமல் இருந்தது. அவற்றின் பின்புலத்தில் இருந்த சமூக நுணுக்கங்களை என்னால் முதலில் சிந்தித்துப் பார்க்க முடியவில்லை. பிறகுதான் அவற்றைப் பற்றிய தெளிவு வந்தது”, என்று பதிவு செய்கிறார்.

* “காந்தி காங்கிரசுக்குள் வந்ததும் அதன் அமைப்பு விதிகளை முற்றிலுமாக மாற்றினார். காங்கிரஸ் இயக்கத்தை மேலும் ஜனநாயகப்படுத்தி அதை ஒரு வெகுஜன இயக்கமாகப் புதுப்பித்தார். எப்போது அவர் இந்திய அரசியல் அரங்கில் நுழைந்தாரோ, அன்றிலிருந்து இன்றுவரை அவருடைய பிரபலம் எக்காலகட்டத்திலும் இம்மியளவும் குறையவேயில்லை, மாறாக அதிகரித்துக்கொண்டேதான் சென்றது. இனியும் அவரின் பிரபலம் மக்களிடையே வளர்ந்துகொண்டுதான் செல்லும்”, என்று தன் சுயசரிதையில் எழுதுகிறார் நேரு. “காந்தியைப் போல் இந்தியாவின் மூலை முடுக்குகளெங்கும் பயணித்த தலைவர் வேறு யாரும் கிடையாது. அவர் ரயிலில் சென்றிருக்கிறார், காரில் பயணித்திருக்கிறார், எங்கு சென்றால் மக்கள் அகிம்சைப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று ஒரு பிச்சைக்காரனைப் போல் வீடு வீடாக, கிராமம் கிராமமாக சுற்றித் திரிந்திருக்கிறார்”.

* “பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவில் ஒரு புதிய ஜாதியை உருவாக்கிவிட்டார்கள். அது யாரென்றால், வெகுஜன மக்களோடு தொடர்பு அறுந்த நிலையில் உள்ள படித்த மக்களே. பிரிட்டிஷ்காரர்கள் உருவாக்கிய அந்த ஜாதியை காந்தி மக்களை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தார். இந்தியாவினுடைய பாமரனை, தொழிலாளியை, விவசாயியை, வெகுஜன மக்களை, உண்மையான இந்தியாவை காந்தி அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்”, என்று எழுதுகிறார் நேரு. “காந்தி இயந்திரமயமாக்கலை எதிர்த்தார் என்பது சரியல்ல. இயந்திரமயமாக்கல் ஒரு பாவம் என்றார் காந்தி; எப்போது என்றால், அதிகார குவிமையத்திற்காகவும் ஒரு சிலரை மட்டும் செல்வந்தர்கள் ஆக்குவதற்காகவும் இயந்திரமயமாக்குவது பாவம் என்றாரே தவிர இயந்திரமயமாக்கலை அவர் பொதுவாக எதிர்க்கவில்லை”, என்று தெளிவுபடுத்துகிறார். இயந்திரமயமாக்கலைப் பற்றி காந்தி, “அவை அரசுடமையாக இருக்கவேண்டும்; குடிசைத் தொழில்களோடு அவை போட்டி போடக்கூடாது. பொருளாதார சமத்துவம் என்ற அடித்தளத்தின் மீது அவை எழுப்பப்படவில்லை என்றால், அந்த இயந்திரமாக்கல் ஒரு மணல் கோபுரமாக சரிந்துவிடும்”, என்கிறார்.

* “காந்தியிடம் களிமண்ணைக் கொடுத்தால்கூட அதையும் தலைவராக்கிவிடுவார்”, என்று கோகலே சொன்னதை நேரு பதிவு செய்கிறார். காந்தியிடமிருந்து தான் கற்றுக்கொண்டவை அத்துணை என்ற நன்றி மற்ற தலைவர்களைப் போல் நேருவுக்கும் பெருமளவில் இருந்திருக்கிறது. “நான் ஓய்வு எடுத்துக்கொள்கிறேன் என்று காந்தி எப்பொழுதெல்லாம் சொல்கிறாரோ, அது எங்களுக்குப் பெரிய கலக்கத்தை ஏற்படுத்திவிடும். எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் காந்தியின் ஒரு வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அது நிசப்தமாகிவிடும். நாங்கள் எல்லா பாரத்தையும் அவர் மீது சுமத்தி சுமத்தியே பழக்கப்பட்டுவிட்டோம். அவர் இல்லாமல் நாங்கள் பெறக்கூடிய தற்காலிக வெற்றியை விட, அவர் இருக்கும்போது சமயங்களில் தோல்வி வந்தாலும் அதை ஏற்றுக்கொள்வது மேல்”, என்கிறார் நேரு. இந்திய ஜனநாயகம் உயிர்த்திருக்க வேண்டுமெனில் சமரசப் போக்கைப் பின்பற்ற வேண்டியிருக்கும் என்று காந்திக்குப் பிறகு நேரு இவ்வாறு கச்சிதமாகப் புரிந்துகொள்கிறார்.

Comments

  1. இதைவிட அருமையான எழுத்துக்களை, (பதிவுகளை) நான் இதுவரை படித்ததில்லை.

    முழுவதும், பாஸ்கர் பேச பேச, ரிகார்டு செயல்பட்டு எழுத்து வடிவம் கொண்டதோ என்ற பிரமிப்பு ஏற்படுகிறது.

    விஷ்ணு அருமை. இதனை அப்படியே தமிழ் இந்துவிற்கு அனுப்பி விடுங்கள்.

    40 வருடங்களாக காந்திய (நான் கூறுவதால் குப்பைகள் என்ற சொல் பயன்படுத்துகிறேன். அவ்வளவே)சொற்களை கேட்டு, சொல்லி, எழுதி வந்தபடி இருந்தாலும் நேரு பற்றி விமர்சனம், ஏதாவது கூறினால் பதில் கூற நான் பார்த்தவரை எந்தப்பெரியவரோ, நண்பர்களோ இல்லை, கிடையாது.

    வக்கீல் பிச்சை அவர்கள் நேரு பற்றி, அவர் பார்லிமெண்ட் செயல் பற்றி நன்றாக பல முறை எழுதியுள்ளார் தினமணியில்.
    ஆனால் விமர்சனங்களுக்கு பதில் கூறியதில்லை.

    ஆனால், விஷ்ணு உங்களின் பதிவுகளை கையில் வைத்தால் போதும், நாமும் தெளிவாகி கேட்டவரையும் தெளிவாக்கிவிடலாம்.

    மிகத் தேவையான விஷயம்.

    நன்றி. வாழ்க வாழ்க

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார். குறிப்புக்காக பாஸ்கர் பேச்சை ரிக்கார்ட் செய்தேன், அதனால் அவர் பேசுவதைப் போன்றே பதிவு அமைந்திருப்பதில் ஆச்சரியமில்லை. இன்னும் இரண்டு வாரங்களில் நேருவின் நினைவு தினம் வரவிருக்கிறது. சுனில் கில்னானியின் “Nehru's Faith" நெடுங்கட்டுரையை பூ.கொ.சரவணன் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார். நானும் ஒரு நினைவு தினப் பதிவு எழுதிட முயற்சிக்கிறேன். உங்களின் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.

      Delete

Post a Comment

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி