இந்தியாவும் உலகமும் - ஜவகர்லால் நேரு
லக்னோவில் நவம்பர் 22, 1952 அன்று ஒரு பொதுக் கூட்டத்தில் நேரு ஆற்றிய உரையிலிருந்து தேர்ந்தெடுத்த பகுதிகளை நேருவின் நினைவு தினத்தையொட்டி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். இக்காலத்தில் நாம் அவசியமாக உள்வாங்கிக்கொள்ள வேண்டிய பல கருத்துகள் இச்சொற்பொழிவில் இருக்கின்றன.
----------------------------------------------------------------------------------------------------------------------
சகோதரிகளே! சகோதரர்களே!
சென்ற முறை தேர்தலுக்கு முன்னால் நான் லக்னோ வந்தபோது தேசமே உற்சாகத்தில் இருந்தது. பல வருடங்களுக்குப் பிறகு நான் மீண்டும் நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்து, பலதரப்பட்ட மக்களை சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். மற்றவர்கள் எப்படியோ எனக்குத் தெரியாது, ஆனால் தனிப்பட்ட அளவில் அத்தேர்தல் சுற்றுப்பயணம் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. நான் இந்திய மக்களோடு மேலும் நெருக்கமாவதைப் போல் உணர்ந்தேன். அப்பொழுதுதான் புரிந்தது, தில்லியில் எனக்கு எவ்வளவு பணிச்சுமைகள் இருந்தாலும், இந்தியாவின் மற்ற இடங்களுக்கும் நான் தொடர்ந்து வருகை புரிந்தபடி இருக்க வேண்டியது அவசியம் என்று. இந்தியா மிகப்பெரியதொரு தேசம், அதன் எல்லா இடங்களுக்கும் செல்வது என்பது கடினமான காரியம். தேர்தல் முடிந்த உடனே தில்லியில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் துவங்கியதுதான் தாமதம், பல புதிய, சிக்கலான பிரச்னைகள் எழுப்பப்பட ஆரம்பித்துவிட்டன. கூட்டத் தொடர் முடிந்ததும் இந்தியாவின் பல பகுதிகளுக்கு நான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆரம்பித்தேன். அப்படி கடந்த இரண்டரை மாதங்களாக நான் மதராஸ், ஐதராபாத், மைசூர், மத்தியப் பிரதேசம், மத்திய பாரத், திபெத்திய பர்மிய எல்லைப்பகுதிகள் என்று பல இடங்களுக்கு சென்று வந்திருக்கிறேன்.
இந்தியா மிகவும் சிக்கலான நாடு. பல்வேறு வேறுபாடுகளைக் கொண்ட பரந்துபட்ட தேசம் இது. பல்வேறு பிரதேசங்களில் வாழும் மக்கள் பல்வேறு மதங்களைப் பின்பற்றுகிறார்கள்; பல்வேறு ஜாதிகளில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட இந்தியாவை யாரால்தான் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்று வியக்கிறேன். இத்தனை வேறுபாடுகள் இருந்தும் அனைத்துப் பிரதேசங்களிலும் ஒரு மெல்லிய இந்திய இழை காலம் காலமாகப் படர்ந்தபடியே இருந்திருக்கிறது. இதை நான் உங்களிடம் குறிப்பாக சொல்லக் காரணம், இந்தியாவின் இப்பண்பினை நாம் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும் என்பதுதான். இல்லாவிட்டால், குறுகிய சிந்தனையுடன் இந்தியாவில் ஒற்றைக் கலாசாரத்தைப் புகுத்த முனைந்தால், இந்தியா உயிர்த்திருக்காது. இந்தியாவின் பன்முகத்தன்மையில் அத்துணை அழகு இருக்கிறது.
இந்தியாவைப் பற்றி எவ்வளவுக்கெவ்வளவு நான் புரிந்துகொள்கிறேனோ, அவ்வளவுக்கவ்வளவு நான் இந்தியாவின் ஒரு அங்கமாக மேலும் உறுதியுடன் உணர்கிறேன். இத்தருணத்தில் எனக்கு இரண்டு விஷயங்கள் தோன்றுகின்றன. முதலாவது, அரசியல் ரீதியாகப் பல்வேறு ராஜ்ஜியங்களாக சிதறுண்டிருந்தாலும், இந்திய வரலாற்றில் ஆயிரமாயிரம் வருடங்களாக ஏதோ ஒரு விசை இந்தியாவை இணைத்தபடி இருந்திருக்கிறது. இரண்டாவது, இத்தனை வருடங்களில் அலை அலையாக மக்கள் இந்தியாவிற்குள் வந்து ஐக்கியமாகியிருக்கிறார்கள். வெவ்வேறு மனித ஆறுகள் இந்தியா என்னும் பெருங்கடலில் சங்கமித்து, ஒன்றோடொன்று கலந்து, அப்பெருங்கடலின் அங்கமாகவே மாறியிருக்கின்றன. அப்படி ஒவ்வொரு மனித ஆற்றிலும் இருக்கும் வெளிதேசக் கலாசாரம் ஒவ்வொன்றும் இந்தியாவில் தாக்கம் செலுத்தி, பதிலுக்கு இந்தியாவின் பழம்பெரும் கலாசாரத்தால் தாக்கமடைந்திருக்கின்றன. இவ்வாறு இந்தியா தன் தனித்தன்மையைப் பாதுகாத்தபடித் தொடர்ந்து பரிணமித்தபடி வந்திருக்கிறது. ஒரு புறம், இந்தியாவின் பெரும்பலமாக இந்த அரவணைக்கும் பண்பை நான் காண்கிறேன். மறுபுறம், குறுகிய சிந்தனையும் பிரிவினை உணர்வையும் தன்னகத்தே கொள்ளும் திறன் பெற்றவர்களாகவும் நாம் இருப்பதைப் பார்க்கிறேன். ஜாதியமைப்பு இந்தியாவில் மக்களைத் தனித்தனி அடுக்குகளாகப் பிரித்து வைத்திருக்கிறது, அதனாலேயே அடிப்படையில் பலம்பொருந்திய இத்தேசம் வரலாற்றில் பல முறை பலமிழந்திருக்கிறது. நாம் மீண்டும் மீண்டும் அந்நியப் படையெடுப்புகளால் தாக்கப்பட்டு அவர்களால் ஆளப்பட்டோம். நாம் கோழைகளாக இருந்தோம் என்பதல்ல அதற்கு அர்த்தம். மாறாக, நாம் பிரிவினை உணர்வுடன், குறுகிய சிந்தனையுடன், தனித்தனி அடுக்குகளில் வாழ்ந்தோம் என்பதே காரணம்.
நம் நாடு தற்போது விடுதலையடைந்துவிட்ட வேளையில், வளர்ச்சிக்கான நம்பிக்கைகள் நம் முன்னே துளிர்த்தபடி இருக்கையில், நம் முன்னே ஒரு அடிப்படைக் கேள்வி எழுகிறது. நாம் குறுகிய சிந்தனையோடு நம்மிடையே இருக்கும் சிறு சிறு வேறுபாடுகளால் சச்சரவில் ஈடுபடப்போகிறோமா? அல்லது ஒற்றுமையான எதிர்காலத்தை நம்பிக்கையோடு வரவேற்க நம்மை நாம் ஆயத்தப்படுத்திக் கொள்ளப்போகிறோமா? இக்கேள்வி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் நம் கண்முன்னே இந்தியாவிலும் உலகத்திலும் சிக்கலான, மிகப் பெரும் பிரச்னைகள் தீர்க்கப்படுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன. அப்பிரச்னைகளைத் தீர்க்க நாம் எவ்வளவு பணம் படைத்திருக்கிறோம் என்பது முக்கியமல்ல. ஏனெனில் நம்முடைய பார்வையும், உள்வலிமையும், பரந்த மனதுமே அப்பிரச்னைகளைத் தீர்க்கவல்லன. ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னாலேயே நாம் அறிவார்ந்த வெளியுலகத் தொடர்புகள் ஏற்படா வண்ணம் நம்முடைய கதவுகளை மூடிக்கொண்டுவிட்டோம். அதனால், அறிவும் ஆற்றலும் மிகுந்த நம்முடைய தேசம் அதிவிரைவில் வளர்ந்த உலகத்தோடு ஈடுகொடுக்க முடியாமல் தேங்கிப் போனது. உலகத்திடமிருந்து கற்றுக்கொள்ள நமக்கு எதுவுமில்லை, அனைத்துமே யாமறிவோம் என்று அகந்தையிலும் பழம்பெருமையிலும் நாம் உழன்றுவிட்டோம். விளைவு, நாம் பின்தங்கிவிட்டோம். இப்பொழுதாவது நாம் உலகத்தோடு ஈடு கொடுத்துப் பயணிக்கத் துவங்க வேண்டும். அதோடு நில்லாமல் உலகத்தை ஒருபடி முந்தி அதற்கு வழிகாட்டவும் முனைய வேண்டும். நம் குறுகிய சிந்தனைகளிலிருந்து நம்மை நாம் விடுவித்துக்கொண்டால் மட்டுமே அது சாத்தியம். இன்றும் பலர் பழம்பெருமை கொடுக்கும் நிறைவான உணர்வில் திருப்தியடைந்து, நாம் வாழும் உலகத்தையும் காலகட்டத்தையும் புரிந்துகொள்ளாமல் வாழ்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில், மெதுவாக நாம் நம்மை செம்மைப்படுத்தியும் வருகிறோம்.
என் மீது பெருஞ்சுமைகள் விழுந்திருக்கின்றன. எனக்கு இன்னும் மீதி இருக்கும் காலங்களை இந்தியா பற்றி நான் கொண்டிருந்த கனவுகளை நிறைவேற்றுவதற்காக செலவிட பிரியப்படுகிறேன். இத்தேசத்தை நான் சுற்றுகையில் அதன் சிறுவர்களையும் சிறுமிகளையும் இளைஞர்களையும் காணும்போது, இந்தியா குறித்த என் நம்பிக்கை பன்மடங்காக உயர்கிறது. மிகுந்த உற்சாகத்தோடும் புத்தி கூர்மையோடும் இருக்கும் அவர்கள் இத்தேசத்திற்கு ஒரு பெரும் சொத்து. அதே நேரத்தில் இந்நாட்டு இளைஞர்களிடம் இருக்கும் சில விரும்பத்தகாத பண்புகள் எனக்கு விரக்தியைத் தருகின்றன. வரலாறு, சமூகம் குறித்த மேம்போக்கான புரிதலைக் கொண்டவர்களாகவும், எளிதில் வன்முறைப் பாதையில் விழுந்துவிடக்கூடியவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். இந்த நல்லது கெட்டது இரண்டுமே கலந்தவர்களாக அவர்கள் இருப்பது இயற்கையே, ஆனால் எது அதிக தாக்கத்தை அவர்களிடம் செலுத்துகிறது என்பதே எனக்கு முக்கியம்.
தேசம் வளர்ச்சியுறுவதற்கான பல திட்டங்களை அரசாங்கம் தீட்டியபடி இருக்கிறது. நாம் எத்தனை திட்டங்கள் வேண்டுமானாலும் வகுக்கலாம், ஆனால் முடிவில், நம் வளர்ச்சியை ரத்தமும் சதையுமான நாமே தீர்மானிக்கிறோம், இரும்பும் செங்கற்களும் அல்ல. நம்முடைய தரமும், திறமையும், வேலைத் திறனுமே இத்தேசத்தை ஒற்றுமையாக வைத்திருந்து நம்மை வளர்ச்சிப் பாதையில் நடைபோட வைக்கும். நம்முன்னே எழுந்திருக்கும் அந்த அடிப்படைக் கேள்வியை மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். பெருங்கனவுகளைக் காணும் தகுதி படைத்தவர்களாக நாம் இருக்கப்போகிறோமா? அக்கனவுகளை நிறைவேற்ற நாம் உழைக்கப்போகிறோமா? அல்லது வேறுபாடுகளைக் களையாமல் சிறு சிறு கவலைகளில் நம்மை நாமே மூழ்கடித்துக்கொள்ளப் போகிறோமா?
உங்கள் அன்பினாலும் நம்பிக்கையாலும் என்னைப் பிரதமராக்கி எனக்கு மிகப்பெரும் பொறுப்புகளைத் தந்திருக்கிறீர்கள். பிரதமராக நான் இருக்கும் வரை, இந்தியாவில் எது நடந்தாலும் அதற்கு நான் பொறுப்பானவன் ஆகிறேன், அது நல்லதோ கெட்டதோ. அப்பொறுப்பிலிருந்து என்னை நான் விடுவித்துக் கொள்ளப்போவதுமில்லை, தவறாக முடியும் செயல்களுக்கு மற்றவர்கள் மீது நான் பழி சுமத்தப்போவதும் இல்லை, அது அவர்களின் தவறாகவே இருந்தாலும். ஒரு பிரதமராக, இத்தேசத்தில் எது நடந்தாலும் அதற்குப் பொறுப்பாளியாக என்னை நான் ஆக்கிக்கொண்டே ஆகவேண்டும்.
நாடு அரசியல் விடுதலை பெற வேண்டும் என்பது பிரச்னையாக இருந்தது. அப்பெரும் பிரச்னையை நாம் தீர்த்துவிட்டோம். நாம் விடுதலையடைந்த உடன் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு சமூக, பொருளாதார பிரச்னைகள் நம் கண்முன்னே எழுந்திருக்கின்றன. அது போக உலக அரசியல் சிக்கலான நிலையில் இருக்கிறது. சக்திவாய்ந்த நாடுகள் ஒன்றோடொன்று பேச்சுவார்த்தை நடத்தவோ சந்திக்கவோ கூடத் தயாராக இல்லை. சிறுபிள்ளைத்தனமாக ஒன்றையொன்று வசைபாடிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு குழந்தைத்தனமாக நடந்துகொள்ளும் பெரியவர்களிடம் நிலைமையை சொல்லிப் புரியவைப்பது மிகவும் கடினமான ஒன்று.
எப்படியோ, இதுவரை இந்தியா அவர்களின் புவியரசியல் விளையாட்டில் சிக்காமல் தனித்திருக்கிறது. அதே நேரத்தில் பல்வேறு பொறுப்பு மிக்க வட்டங்களில் நம்முடைய குரல் கேட்கப்படுகிறது. உலக அரசியல் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் இவ்வேளையில், நம்மிடையே தீர்க்கப்படப் பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும், உலக அரசியலில் தலையிட நமக்குத் தற்போது விருப்பமில்லாவிட்டாலும், நாம் எப்படியோ அதற்குள் இழுத்துவிடப் படுகிறோம். கொரியப் பிரச்னை குறித்து நம் நிலைப்பாட்டை நாம் வகுத்திருக்கிறோம். தென் ஆப்பிரிக்காவில் நிலவி வரும் இனவெறிப் பிரச்னை ஐ.நா.வில் எழுப்பப்பட்டிருக்கிறது. சில சக்திவாய்ந்த உலக நாடுகள் மற்ற நாடுகளை ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்துவது நியாயமானதா என்ற கேள்வி உலக அரங்கில் எதிரொலிக்க ஆரம்பித்திருக்கிறது. காலனிய ஆதிக்கத்திற்கும், அவற்றால் ஏற்படும் அநீதிகளுக்கும் எதிராக இந்தியா முன்னணியில் நின்று குரல் கொடுத்து வருகிறது. நாம் முன்வைத்த தீர்மானங்களுக்கு தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட இரண்டு நாடுகள் தவிர்த்து மீதமுள்ள பல நாடுகள் ஆதரவளித்துள்ளன.
கிழக்கு ஆப்பிரிக்கப் பிரதேசங்களிலும் சில வருத்தம் தரும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. ஒரு இந்தியர் வர்த்தகத்திற்காகவோ பணிக்காகவோ வேறொரு நாட்டிற்குச் சென்றால், அங்கு அவர் மரியாதையுடன் நடத்தப்படவேண்டும். இந்திய சமூகத்திற்கு நிகழும் எந்த ஒரு அவமரியாதையையும் நம்மால் சகித்துக்கொள்ள முடியாது. அதே நேரத்தில், அங்குள்ள உள்ளூர் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தவும் இந்தியர்கள் முயலக்கூடாது. எவ்வாறு நாம் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரத்தை விரும்பினோமோ, அதே போல் நாமும் மற்ற நாடுகளில் உள்ள மக்களை ஒடுக்கியாளவோ, சிறப்புச் சலுகைகளை எதிர்பார்க்கவோ, உள்ளூர் மக்களின் விருப்பங்களுக்கு எதிராக நடந்துகொள்ளவோ கூடாது. ஆப்பிரிக்காவில் கருப்பினத்தவர் அதிகம் வாழ்கின்றனர். கருப்பினத்தவர்கள் அறிவால், கலாசாரத்தால் பின்தங்கியவர்கள் என்றோ, அறியாமை மிக்கவர்கள் என்றோ நாம் நினைத்தால் அது தவறாகும். அதிகமான திறனும் திறமையும் மிக்க அவர்கள் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். சரியான வாய்ப்புகள் மட்டும் அமைந்துவிட்டால் பெருமளவு முன்னேற்றத்தை அவர்களால் ஏற்படுத்த முடியும். அவர்கள் மேற்குலகைக் கண்டு சிறிது அச்சம் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடாது என்ற நம்பிக்கையில் நம்மை நோக்கி அவர்கள் திரும்பிப் பார்க்கிறார்கள். அவர்களுடைய அரசாங்க அமைப்புகளைக் கட்டமைப்பதற்கும், பள்ளி மருத்துவனைகள் சிறப்பாக செயல்படுவதற்கும், வளர்ச்சித் திட்டங்களை வகுப்பதற்கும் நாம் அவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
ஆப்பிரிக்கப் பிரச்னை விரைவில் தீர்க்கப்படாவிட்டால் அக்கண்டம் முழுவதும் வன்முறைச் சுழலில் சிக்கிவிடும் ஆபத்து இருக்கிறது. அதனால் ஏற்படும் விளைவுகள் ஒட்டுமொத்த உலகையும் பாதிக்கவல்லது. ஏனெனில், ஐந்தில் ஒரு மனிதர் ஆப்பிரிக்கக் கண்டத்தில் வாழ்கிறார், அதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதுபோக ஜெர்மனி தொடர்பாக ஐரோப்பாவில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது, ஆனால் அதைப் பற்றி நான் விரிவாக பேசப்போவதில்லை. ஏனெனில் மேற்சொன்ன இரண்டு விஷயங்களில்தான் இந்தியா கவனம் செலுத்துகிறது, அவற்றிலிருந்து விலகி ஓடும் எண்ணம் நமக்கு இல்லை.
உள்நாட்டில் நம்முடைய பொருளாதார நிலையை முன்னேற்றுவதே தலையாய குறிக்கோளாக இருக்கிறது. ஐந்தாண்டுத் திட்டம் வகுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது, ஆனால் அதைவிட முக்கியம், நம்முடைய கடின உழைப்பும் உறுதியான மனநிலையும்தான். ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளாகட்டும், சீனா, சோவியத் போன்ற நாடுகளாகட்டும், அரசியல் கருத்தாங்கள் எவ்வாறாயினும் கடின உழைப்பின் மூலம் அவர்களால் வளர்ச்சியை சாத்தியப்படுத்த முடிகிறது. நம்மாலும் முடியும், அந்த நம்பிக்கையை நாம் கொள்வது மிகவும் அவசியம். வெறும் தீர்மானங்களை நிறைவேற்றினால் போதும், இந்தியா முன்னேறிவிடும் என்ற அதீத நம்பிக்கை சிலருக்கு இருக்கிறது, ஆனால் உண்மை வேறு. மக்கள் சக்தியே இத்தேசத்தை மாற்றவல்லது.
நாம் பல்வேறு சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அவற்றை விரைவாகவும் செய்து முடிக்க வேண்டியுள்ளது. இல்லையேல் உலகம் செல்கிற வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் நாம் பின்தங்கி விடுவோம். அறிவியலும் தொழில்நுட்பமும் உலகத்தின் முகத்தையே மாற்றியிருக்கின்றன. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் இங்கு வந்தபோது இத்தேசம் ஒற்றுமையின்றிப் பிளவுபட்டிருந்தது. வளர்ச்சியில் பின்தங்கியும் நவீன ஆயுதங்கள் இன்றியும் நாம் இருந்தோம். என்னதான் ராஜபுத்திரர்கள் போன்றவர்களின் வீரமும் தீரமும் போற்றப்பட்டாலும், எதிரிகளின் மேம்பட்ட ராணுவத் தொழில்நுட்பங்களின் முன்னால் அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. இந்த இடைவெளியைக் குறைக்க நாம் அடுத்தவரை எதிர்பார்க்காமல், நம்முடைய அறிவியல் அறிவைக் கைகொள்ள வேண்டும். அதற்கு உறுதுணையாக இந்தியாவின் பல்வேறு இடங்களில் தேசிய அறிவியல் கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன. தில்லி, பூனா, லக்னோ, மதராஸ், கல்கத்தா, பெங்களூர் என அனைத்து திசைகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள அக்கூடங்களில் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் பயிற்சி பெறுவதைப் பார்க்கிறபோது இந்தியாவின் எதிர்காலத்தின்மீது எனக்குப் பெரும் நம்பிக்கை ஏற்படுகிறது.
அடுத்ததாக இந்தியா-பாகிஸ்தான் பிரச்னையை எடுத்துக்கொள்வோம். பல்லாயிரக்கணக்கான மக்கள் இருபக்கங்களிலிருந்தும் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து அகதிகளாகப் புலம் பெயர்ந்திருக்கிறார்கள். இப்பிரச்னையை இரு நாடுகளும் சரி செய்ய வருடங்கள் ஆகும். ஆனால் இந்நிகழ்வுகள் ஏற்படுத்திய காயங்களும் வடுக்களும் இன்னும் ஆழமானவை. அது இரு நாடுகளுக்கிடையேயான உறவைக் கசப்பானதாக மாற்றியிருக்கிறது. அதன் ஒரு அங்கமாகக் காஷ்மீர் விவகாரமும் கிளைவிட்டிருக்கிறது. ஏன் இன்னும் இந்தியா-பாகிஸ்தான் பிரச்னை தீர்க்கப்படவில்லை என்று என்னிடம் யாராவது கேட்டால், அதில் என் அரசாங்கத்திற்கும் எனக்கும் உள்ள திறமையின்மையை நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அதே நேரத்தில், இப்பிரச்னையை நாம் உலகப்பார்வையோடும் அணுக வேண்டியிருக்கிறது. அவ்வாறு அணுகும்போதுதான் இப்பிரச்னையில் உள்ள பல்வேறு சிக்கல்கள் நமக்குத் தெரிய வரும். நம்மைப் பொறுத்தவரை காஷ்மீர் விவகாரம் எளிமையானது, ஆனால் ஐ.நா. சபையில் அது ஐந்தாண்டுகளாக மாட்டிக்கொண்டிருக்கிறது. நாம் ஆட்சேபிக்கத் தகுந்த தீர்மானங்களை பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கத் தூதுவர்கள் எழுப்புகிறார்கள். சரி அவை நியாயமானதாகவாவது இருக்கிறதா என்று பார்த்தால் அவை அடிமுட்டாள்தனமாக இருக்கின்றன. உண்மைகளை மறைத்து எவ்வாறு அப்படி சில தீர்மானங்களை, அதுவும் உலக அரங்கில் எழுப்ப முடியும் என்று வியப்பாக இருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை அத்தீர்மானங்கள் அதீத அறிவின்மையையும் முட்டாள்தனத்தையும் மிஞ்சுவதாக இருக்கின்றன. அதே நேரத்தில், அதற்காக அவர்களுடன் நாம் முட்டிக்கொண்டு இருக்கும் நிலையில் இருக்கிறோமா என்பதே இங்கு கேள்வி. ஒவ்வொரு நாடும் சரியான, நியாயமான பாதையில் செல்ல வேண்டும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், எதையாவது பேசி பிரச்னைக்குள் மேலும் நாம் இழுக்கப்பட நாமே காரணமாகிவிடக்கூடாது. உணர்ச்சி வேகத்தில் வார்த்தைகளைக் கொட்டி அதனால் பாதிக்கப்பட்ட சிறிய, பெரிய நாடுகள் வரலாறு முழுக்க உள்ளன. ஒவ்வொருவரும் நமக்கு ஒவ்வொரு அறிவுரையை சொல்வார்கள். அவற்றை நாம் கேட்டுக்கொள்ளும் அதே சமயத்தில், லட்சக்கணக்கான மக்களின் உயிர் நாம் எடுக்கும் முடிவுகளில் இருக்கிறது என்ற பொறுப்புணர்வோடும் நாம் செயல்பட வேண்டியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பணியை செய்ய நமக்குத் தகுதியிருக்கிறதா என்பது வேறு, ஆனால் அப்பணியை செய்யும் பொறுப்பு நம்மிடம்தான் இருக்கிறது. அப்பொறுப்பில் இருக்கையில், கேடு விளைவிக்கும் உணர்ச்சிகளுக்கு நாம் இடமளித்தால், அப்பொறுப்புகளை நாம் சரிவர நிறைவேற்றாதவர்கள் ஆகிவிடுவோம். இதை நீங்கள் கவனத்துடன் மனதில் கொள்ள வேண்டும். எனவே இந்தியா-பாகிஸ்தான் சிக்கலைத் தொலைநோக்குப் பார்வையுடன் அணுகி, நிரந்தரத் தீர்வையே நாடவேண்டும். தற்காலிக மன திருப்திக்காக நாம் அவசர முடிவுகளை எடுத்துவிடக்கூடாது. நம்முடைய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் எந்த ஒரு பாதையையும் நாம் முதலிலேயே தேர்ந்தெடுத்துவிடக்கூடாது. பரஸ்பரப் புரிதல்களை ஏற்பட விடாமல் தடுக்கும் எந்த ஒரு சுவரையும் நான் விரும்பவில்லை.
இரு நாடுகளுக்கு இடையேயான சிக்கல்களை உள்ளூர் சிக்கல்களைத் தீர்ப்பதுபோல் தீர்க்க முடியாது. இரு நாடுகளுக்கு இடையே சிக்கல்கள் தீர இரண்டே வழிதான். ஒன்று போர், மற்றொன்று பேச்சுவார்த்தை. என்னைப் பொறுத்தவரை இதுவரை எந்த ஒரு பிரச்னையையும் போர் முழுமையாகத் தீர்த்ததே கிடையாது. முட்டாள்களே போரில் நம்பிக்கை கொள்வார்கள். பேச்சுவார்த்தையின் போது தூதுவர்களும் மத்தியஸ்தர்களும் உரையாடி மற்றொருவரை சம்மதிக்க வைக்க முயற்சிப்பார்கள். உலகக் கருத்தாக இந்த இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. இதில் மூன்றாவது வழி என்று ஒன்று இல்லவே இல்லை. அதனால் ஆத்திரத்தில் வார்த்தைகளை நாம் கொட்டிவிடக்கூடது. யாருடனும் போருக்குச் செல்வதை நான் எதிர்க்கிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்பே தெளிவாக சொல்லிவிட்டேன். என் குரல் இந்தியாவில் ஒலித்துக்கொண்டிருக்கும்வரை, பாகிஸ்தானோடோ வேறொரு நாட்டின் மீதோ நாம் போர் தொடுக்க விட மாட்டேன். நம்மை யாராவது தாக்கினால் அப்பொழுது நம் நாட்டை நாம் தற்காத்துக் கொள்ள உழைப்போம், அது வேறு விஷயம்.
மீண்டும் மீண்டும் சொல்கிறேன். போர் எதையும் தீர்க்காது. போரின் விளைவுகள் என்ன என்று இரண்டாம் உலகப் போரில் வென்றவர்களிடமே கேட்டுப் பாருங்கள். ஜெர்மனியையும் ஜப்பானையும் நட்பு நாடுகள் தரைமட்டமாக்கின. ஆனால் அவர்களின் நாட்டில் இப்பொழுது பல பிரச்னைகள் தலைதூக்குகின்றன. நவீனமயமான போர்களில் தோற்கும் அணிக்கு நிகராக வெல்லும் அணிக்கும் சேதம் கடுமையாகவே இருக்கும். நம் வளர்ச்சிக்கான திட்டங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கிவிட்டுத்தான் நம்மால் போருக்குப் புறப்பட முடியும். போரினால் கிடைக்கும் வெற்றியும் அவ்வகையில் பேரிழப்புதான். அப்பொழுது நாம் அடையும் பலவீனத்தைப் பயன்படுத்தி நம்முடைய விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிட ஆரம்பிக்கும்; என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிட ஆரம்பிக்கும்.
உலகின் பெரும் சக்திகளோடு ஒப்பிட்டால் நம்முடைய ராணுவம் பலமானது அல்ல. ஆனால் நாம் ஒரு தலைசிறந்த தேசம். நாம் வெளி அழுத்தங்களுக்குப் பணிவதுமில்லை, புகழ்ச்சிகளுக்கு மயங்குவதுமில்லை. நாம் அனைத்து நாடுகளுக்கும் நேசக் கரங்களையே நீட்டுகிறோம். நமக்குப் பொருளாதார நிதியுதவி அளித்து வரும் தேசங்களிடமே, சர்வதேச அரங்கில் நம்முடைய அரசியல் நிலைப்பாடு அதனால் பாதிப்புறாது என்று நாம் தெளிவாக சொல்லிவிட்டோம். அந்நிதியுதவிகளின் மூலம் எந்த ஒரு நாடும் நம்முடைய அரசியல் நிலைப்பாடுகளை பாதிக்கமுடியாது. உலகத்தில் உள்ள நாடுகளில் எத்தனை நாடுகள் நம்மைப்போல் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைக் கொண்டிருக்கின்றன என்று தெரியவில்லை. அவ்வப்போது பெரிய நாடுகள் அவற்றின் பக்கம் நம்மை இழுக்க முயல்கின்றன. ஆனால் அடக்கத்துடன் நான் இங்கு ஒன்றைக் கூற விழைகிறேன். நம்முடைய வெளியுறவுக் கொள்கை, சரியோ தவறோ, நம்முடைய விருப்பங்களை மீறி பயத்தாலும் வெளி அழுத்தங்களாலும் வகுக்கப்படவில்லை. நாம் சுயமரியாதை மிக்க சுதந்திர தேசம். போர்களைப் பற்றியும் அவற்றின் விளைவுகளைப் பற்றியும் உங்களிடம் பொதுவாக யாரும் பேசுவதில்லை. ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்பதை உங்களிடம் சொல்லாமல் இருக்கும் பழக்கம் எனக்கில்லை. நீங்கள் இப்பிரச்னைகளை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.
சிலர் நான் பாகிஸ்தானை சமாதானப்படுத்த முயல்கிறேன் என்று மேம்போக்காகப் பேசுவதைப் பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. ஆமாம், பாகிஸ்தானிடம் மட்டுமல்ல, அனைத்து நாடுகளுடனும் நான் சமாதானப் போக்கையே கையாள்வேன், அது சுயமரியாதையுடன் கூடியதாக, நம் தரப்பும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவே இருக்கும். எனவே என்னை கோழை என்று சிலர் விமர்சிப்பதற்காக நான் அச்சப்படப் போவதில்லை. இந்தியாவின் மரியாதைக்கும் மாண்பிற்கும் ஊறு விளைவிப்பதைப் போல் என் செயல்கள் இருக்கின்றன என்று நீங்கள் நினைப்பீர்களாயின், என்னை இப்பொறுப்பிலிருந்து விடுதலையளிக்கும் ஜனநாயக உரிமை உங்களிடம் இருக்கிறது. கோவா, பாண்டிச்சேரி பிரச்னையும் அப்படித்தான். ஆங்கிலேய ஆட்சியைப் போல் பிரெஞ்சு, போர்த்துகீசிய ஆட்சிக்கும் இந்தியத் துணைகண்டத்தில் வேலையில்லை. ஆனால் இதற்கும் நாம் முடிந்தவரை அமைதி வழியிலேயே தீர்வு காண வேண்டும். அமைதி ததும்பப் பேசிவிட்டு செயலில் போர் முகத்தை நாம் காட்டக்கூடாது. பல நாடுகள் அவ்வாறு செயல்படுவதை நம்மால் காணமுடியும்.
மக்களிடம் வெறுப்பைத் தூண்டினால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். இந்தியா-பாகிஸ்தான் இடையே இருக்கும் சிக்கலான பிரச்னைகளை அது தீர்த்துவிடுமா சொல்லுங்கள்? வன்முறையை வளர்க்கும் வாசகங்களும் சூளுரைகளும் மக்களிடையே உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தி, எங்கோ தூரத்தில் இருக்கும் எதிரி மீது உள்ள கோபத்தை எதிர்வீட்டினரிடமும் பக்கத்து வீட்டினரிடமும் காட்டுவது எந்த விதத்தில் சரியாகும்? இரு நாடுகளுக்கு இடையே உள்ள அரசியல் பிரச்னைக்கு மதச்சாயம் பூசி, உள்நாட்டில் கசப்புத்தன்மையும் கலவரத்தையும் தூண்டுவதை எவ்விதம் நியாயப்படுத்துவது? அது எவ்வளவு விரைவாகப் பரவும் என்பது உங்களுக்கே தெரியும். இந்திய அரசியலோடு சம்பந்தமே இல்லாதவர்கள், நிலைமையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், அவ்வளவே.
மதவாதக் கட்சிகளை நான் முற்றாக நிராகரிக்கிறேன். உணர்ச்சிகளைத் தூண்டுவதும் பிரிவினையை வளர்ப்பதும்தான் அவற்றின் ஒரே வேலையாக இருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் உறவு என்பது நமக்கு பிரதான முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு குறித்துத் தொலைநோக்குப் பார்வையில் நாம் சிந்திக்கப் போகிறோமா? அல்லது முட்டாள்தனமான காரியங்களைச் செய்து மேலும் முப்பது நாற்பது வருடங்களுக்கு இப்படியே இறுக்கமாக இருக்கப் போகிறோமா? நமக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இரண்டாயிரம் மைல்கள் நீளத்திற்கு எல்லை இருக்கிறது. இவ்வளவு நீளமான எல்லையை வைத்துக்கொண்டு ஒருவரையொருவர் எவ்வளவு காலம்தான் முறைத்துக்கொண்டு நிற்க முடியும்? மேலும் பாகிஸ்தானிய மக்கள் யார்? பாகிஸ்தானின் தலைவர்கள் விஷம் தோய்ந்த பேச்சுகளால் மக்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள். ஆனால் அங்கு வாழும் மக்கள் நம்மிடமிருந்து வேறுபட்டவர்கள் கிடையாது. நமக்கும் அவர்களுக்கும் அடிப்படையில் எந்த வித்தியாசமும் இல்லை. சில அரசியல் பிரச்னைகள் ஏற்படாமல் இருந்திருந்தால் அவர்களும் நாமும் ஒரே தேசத்தைச் சேர்ந்தவர்களாக ஒருவரையொருவர் சந்தித்திருப்போம். அவ்வப்போது இங்கிருந்து சில தனிநபர்கள் பாகிஸ்தானுக்குச் சென்று வருகிறார்கள். பாகிஸ்தானிலிருந்து தனிநபர்கள் தில்லுக்கும் பஞ்சாபிற்கும் வருகிறார்கள். இங்கு வந்து ஒருவரையொருவர் கட்டியணைத்துக்கொண்டு, ஆனந்தக் கண்ணீர் விட்டபடி தொலைந்த நாட்களை நினைவு கூர்கிறார்கள். எனக்கு அதில் சிறிதும் ஆச்சரியம் இல்லை. ஏனெனில், இப்பொழுதும் அவர்களின் மனதில் இந்தியப் பிரிவினை குறித்து வருத்தம் இருக்கிறது, அது நடந்திருக்க வேண்டாமே என்று.
இரு நாடுகளிலும் வெறுப்பைத் தூண்டும் விஷமத்தனமான செய்தித்தாள்களும் இயக்கங்களும் இருக்கின்றன. ஆனால் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள சாதாரண குடிமக்கள் போரை விரும்புவதில்லை. அவர்கள் அமைதியான வாழ்க்கையையே விரும்புகிறார்கள். அவ்வப்போது சிலரின் தவறான தூண்டுதல்களால், மதத்தின் பெயரால், உணர்ச்சி வேகத்தில் அவர்கள் தவறு செய்கிறார்களே தவிர பொதுவாக அவர்களுக்கும் மதவாதத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை.
பாகிஸ்தான் அரசாங்கம் தவறான வழியில் செல்கிறது என்று நாமும் அதே பாதையைத் தேர்ந்தெடுத்தால், மீள முடியாத ஒரு பெருஞ்சுழலில் நாம் சிக்கிக்கொள்வோம். மதவாதத்தையும் அதன் கோர விளைவுகளையும் நாம் என்றுமே விரும்பியதில்லை. பாகிஸ்தான் அரசாங்கம் மதவாத்தை ஊக்குவிக்கிறது என்பதற்காக நாமும் பதிலுக்கு மதவாதிகளாக மாறினால், மதவாதத்தை எப்படி ஒழிப்பது? அவர்கள் கக்கும் விஷத்திற்கு மாற்றாக நாமும் விஷத்தைக் கக்குபவர்களாக மாறிவிடுவோம். இதை சிலராவது புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். வேறொருவர் தவறான வழியில் செல்கிறார் என்பதற்காக நாமும் அதே வழியில் சென்றால், நமக்குக் கடந்தகாலத்தில் எந்தக் கொள்கைகள் வலிமையை வழங்கினவோ, அக்கொள்கைகள் நம்மை விட்டு நீங்கிவிடும்.
நிச்சயமாக இந்தியா-பாகிஸ்தான் இடையே நல்லுறவு ஏற்படும் நாள் வரும். வேற்றுமைகளை மீறி தோழமை உணர்வு நிச்சயமாக வளரும். ஏனெனில், என்ன ஆனாலும் பாகிஸ்தான் நமது அண்டை நாடு, அந்த உண்மையை நம்மால் மாற்ற முடியாது. பலநூறு ஆண்டுகால வரலாறும், புவியியலும், பொருளாதாரமும் நம்மை இணைக்கின்றன. இரு நாடுகளும் ஒன்றோடொன்று நெருங்கி வராமலேயே போகும் நிலை வந்தால் அது மிகவும் துரதிர்ஷ்டமானது. அந்நெருக்கத்தை ஏற்படுத்த நாம் முனைவோமாயின், இடைவெளிகளைப் பெரிதுபடுத்தும் காரியங்களை நாம் செய்யமாட்டோம்.
பாகிஸ்தானின் தலைவர்கள் பின்பற்றும் தவறான கொள்கைகளுக்கு நாம் அடிபணிந்துவிடக்கூடாது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் தேர்வு செய்த பாதையிலிருந்து எக்காரணம் கொண்டும் நாம் விலகமாட்டோம் என்று உலகத்திற்கு நாம் காட்டவேண்டும். பாகிஸ்தானோ வேறெந்த நாடோ தரும் எவ்வித அச்சுறுத்தலும் நம் உயர்ந்த கொள்கைகளை பாதிக்காது. அதே நேரத்தில், நாம் எப்பொழுதும் முடிந்தவரை அமைதி வழியிலேயே பிரச்னையைத் தீர்க்க முயல வேண்டும். பாகிஸ்தான் நாட்டின் மக்களோடு நமக்கு எவ்வித பகையும் இல்லை. நம் இருவரின் உறவு மேம்படும் நாள் வரும். இதை நான் சொல்வது சுலபம், ஆனால் எப்பொழுதும் கத்தியின் மீது நடந்தபடியே இருப்பது சித்திரவதையானது. நம் கொள்கைகள் பலன் தர வெகுகாலம் ஆகும். ஆனால் இன்று உங்களின் நேரத்தை நான் அதிகப்படியாக எடுத்துக்கொண்டதற்குக் காரணம், உண்மைகளை உங்கள் முன் தெளிவாக முன்வைப்பதற்குத்தான். பாகிஸ்தான் என்னும் தேசத்தை ஏசுவதன் மூலம் எந்தப் பிரச்னையும் தீராது, மாறாக அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். காரணம், அது அம்மக்களிடையே சந்தேக விதையைத் தூவிவிடும், அதனால் அங்குள்ள சிறுபான்மை இந்துக்கள் நம்பிக்கை கொள்வதற்கு பதிலாக மேலும் அச்ச உணர்வையும் குழப்ப மனநிலையையுமே அடைவார்கள்.
இறுதியாக, கடந்த சில வருடங்களாக உலகப் பிரச்னைகளுக்கு நாம் எடுக்கும் நிலைப்பாடுகள் சக்தி வாய்ந்த இரு நாடுகளாலும் விமர்சிக்கப்படுகின்றன. அவர்களின் அணியில் இணைய மறுக்கிறோம் என்று அமெரிக்கா, சோவியத் இரு நாடுகளும் நம் மீது வருத்தத்தில் உள்ளன. ஆனால் நாம் நம் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறோம். நம்முடைய அணி சேராக் கொள்கையே இந்தியாவிற்கும் உலகத்திற்கும் உகந்தது என்று கொஞ்சம் கொஞ்சமாக உலகம் உணர ஆரம்பித்திருக்கிறது. நம் கருத்து எப்பொழுதெல்லாம் கேட்கப்படவில்லையோ, அங்கெல்லாம் துர்நிகழ்வாக விபரீத விளைவுகள் ஏற்பட்டிருப்பதால், உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. நம்மிடம் பண பலமோ ஆயுத பலமோ இல்லாவிட்டாலும், பல்வேறு நாடுகள் நம்மை மரியாதையுடன் பார்க்கின்றன.
நாம் ஒரு பழமையான தேசம்; பழம்பெரும் ஞானத்தின் ஊற்று நாம். மேலும் கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக ஒரு மகாத்மாவின் நிழலில் ஒரு தேசமாக நாம் பெரிதும் மேம்பட்டிருக்கிறோம். நாம் நம்முடைய வலிமையை அந்தக் குறுகிய காலத்திலிருந்தே பெறுகிறோம். சிக்கலான பிரச்னைகள் இந்தியாவிலும் உலகத்திலும் எழுந்தவண்ணம் உள்ளன. அவற்றை நாம் சுயமரியாதையுடனும், தைரியமாகவும், அறிவு பொருந்தியும் எதிர்கொள்ள வேண்டும். ஜெய் ஹிந்த்.
Comments
Post a Comment