நேருவைத் துணைகொள்ளல்
அனைவருக்கும் விருப்பமான, எல்லா இடங்களிலும் நன்மதிப்பைப் பெற்றிருந்த, தேசியத் தலைவராக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, காந்திக்குப் பிறகு உலகமே மதித்த ஒரு உலகத் தலைவராக இருந்த நேரு, எவ்வாறு அடுத்தடுத்த தலைமுறையினருக்குப் பிடிக்காமல் போனார்? நேருவின் நிர்வாகத் தவறுகள் காரணமா? போஸ் மரணம் தொடர்பான நிரூபிக்கப்படாத பிரச்சாரங்களா? இன்றைய உலகமயமாக்கல் யுகத்தில் உறுத்தும் அவரின் பொதுவுடைமை சார்பு நிலையா? அல்லது காந்தியின் மீதான வெறுப்பு அவருடைய வாரிசு என்பதால் இவர் மீதும் படிந்துவிட்டதா? அல்லது திட்டமிட்டு நேருவின் பிம்பத்தை உடைக்க வேண்டும் என்ற சதியா?
காஷ்மீர் பிரச்னையை சரியாகக் கையாளாத நேருவாக, சீனப் போரில் இந்தியாவைத் தோற்கச் செய்த நேருவாக, ஆரம்பக் கல்வியைக் கவனியாது விட்ட நேருவாக, மொத்தத்தில் இந்தியாவிற்குத் தீங்கு விளைவித்தவர்தான் நேரு என்று அவரது பிம்பம் அவசர அவசரமாக இன்று கட்டமைக்கப்படுகிறது. இவ்வளவுதான் நேருவா? தவறான பொருளாதாரக் கொள்கைகள் மூலம் நாட்டை நாசமாக்கிவிட்டார் என்றும், காலனிய ஆட்சியின் நீட்சியாகத்தான் அவர் செயல்பட்டார் என்றும் அவர் தொடர்ந்து தாக்கப்படுகிறார். குடும்ப ஆட்சியைக் கொண்டு வந்தார் என்று சந்ததி செய்த பாவத்திற்கு நிகரற்ற ஜனநாயகவாதியான இவரைக் குற்றவாளியாக்கிவிட்டார்கள். ‘Nehru dynasty' என்கிறார்கள். இவ்வளவுதான் நேருவா?
இல்லை. நேருவின் நிர்வாகத் தவறுகளை விட நேருவின் சாதனைகள் இந்திய ஜனநாயகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.
இந்தியாவின் பெரும் கல்வி, அறிவியல் நிறுவனங்களைத் துவக்கியது நேருதான் என்பதே மறந்துபோகும் அளவிற்கு அவற்றின் அதிகாரமும் அமைப்பும் செயல்பாடுகளும் இன்று முன்னே துருத்திக்கொண்டிருக்கின்றன; அதுதான் நேருவின் வெற்றியும் கூட. பசியிலும் ஏழ்மையிலும் துவண்டு போயிருந்த தேசத்தைத் தொழிற்புரட்சி நோக்கிக் கரம்பிடித்து நேரு அழைத்துச் சென்றார். நேரு ஆட்சிக்காலத்தில் தொழில்துறை வளர்ச்சி சராசரியாக 7 சதவீதம் இருந்தது. உற்பத்தி மும்மடங்காகி தொழில்துறை வளர்ச்சியில் ஏழாவது இடத்தைப் பிடித்தது இந்தியா. ஆங்கிலேய அரசின் கீழ் வலுவான அமைப்பாக உருவாகியிருந்த இராணுவத்தைக் குடியாட்சியின் கட்டுப்பாட்டிற்குள் வெற்றிகரமாக நேரு கொண்டுவந்தார்; இல்லையேல் என்னவாகியிருக்கும் என்பதற்குப் பாகிஸ்தானே சிறந்த உதாரணம். அவதார புருஷர்களாக சித்தரிக்கப்படும் தனிமனிதர்களைப் பின்னுக்குத் தள்ளி, கட்டுப்பாடுகளையும் முன்னெச்சரிக்கை நெறிமுறைகளையும் கொண்ட, ஜனநாயகத்திற்குக் கட்டுப்பட்ட அமைப்புகள் முன்னே நின்றால்தான் இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம் வலுவாக இருக்கும் என்பதை நேரு கச்சிதமாகப் புரிந்துவைத்திருந்தார். அரசமைப்புச் சட்ட அங்கீகாரம் பெற்ற பல அமைப்புகளின் பின்னால் இருக்கும் நேருவின் பங்களிப்பு அளப்பரியது. நேரு அமைப்புகளை உருவாக்கியவர், எனவே அதே அமைப்புகளின் பின்னால் அவர் ஒரு வரலாறாக மறைந்துபோவது இயற்கைதான். அமைப்புகளை உடைத்து குவிமையப்படுத்துவதென்பது அடிப்படை ஜனநாயகத்திற்கே எதிரானது என்ற கருத்தாக்கத்தை நேரு தொடர்ந்து வலியுறுத்தினார். இந்த அளவுகோலை எந்த நாட்டிற்கும் எக்காலத்திலும் நம்மால் பொறுத்திப் பார்க்க முடியும்.
இந்தியாவிற்கென்று ஒரு ஒற்றைக் கலாசாரம் இருக்கிறது என்ற பரப்புரையை நம்பினால் நேருவின் சாதனைகளை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது. காந்திக்கு பிறகு இந்தியாவின் பன்முகத்தன்மையை உணர்ந்தவராக நேரு இருந்தார். “இந்தி வேண்டுமா வேண்டாமா என்பதை இந்தி பேசாத மாகாண மக்களிடமே விட்டுவிடுகிறேன்”, என்றார். மொழிவாரியாக மாநிலங்கள் உருவாக வழி செய்தார். என்னதான் சுதந்திரம் கிடைத்தாலும் ஒரு பொதுவான கலாசாரம் இல்லாத தேசம் நிச்சயமாக உடைந்து சிதறிவிடும் என்று உலகமே அவநம்பிக்கையுடன் கவனித்துக்கொண்டிருந்தபோது, அத்தேசத்தை உயிர்த்திருக்கச் செய்யும் சாகசத்தை நேரு நிகழ்த்திக் காட்டினார். வேற்றுமையையும் மீறி ஒற்றுமையாக இருக்கும் இந்தியாவை அவர் உருவாக்கவில்லை; மாறாக வேற்றுமையை அங்கீகரித்து ஒற்றுமையாக இருக்கும் மதச்சார்பற்ற இந்தியாவை ஜனநாயக வழியில் கட்டமைத்தார். அதற்கு அவருடைய அசாத்தியப் பொறுமையும், சமரசப் போக்கும், அனைவரையும் உள்ளடக்கிய உரையாடலும் துணை நின்றன.
பிரிவினை கால இந்து-முஸ்லிம் மதக் கலவர சூழ்நிலைகளில் நேருவின் செயல்பாடுகளை, அதன் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்வது இன்றைய இந்தியாவிற்கு மிக அவசியம். அரசு அமைப்புகளும் சட்ட ஒழுங்கும் பெரும்பாலும் வலுவாக இருக்கும் இன்றைய காலகட்டத்திலேயே மதவாதம் தலைதூக்குகிறது என்றால், மதத்தின் பெயரால் இரண்டாகப் பிளக்கப்பட்ட பிறகும் மதச்சார்பின்மையை வலியுறுத்தியபடிப் பிறந்திருந்த தேசத்தில், உணர்ச்சிக் கொந்தளிப்பு உச்சத்தில் இருந்த சமயத்தில் மதவாதத்தின் வீச்சு எத்தகையதாக இருந்திருக்கும்? உள்நாட்டு யுத்தம் என்று அமெரிக்காவில் நடந்ததை வரலாற்று புத்தகத்திலும் சிரியாவில் நடந்துகொண்டிருப்பதை ட்விட்டரிலும் வெறும் செய்திகளாகப் படித்து நகர்ந்துகொண்டிருக்கிறோம். இந்தியாவை விட்டு வெளியேறும் திட்டத்திற்கு வேவல் வைத்த பெயர் 'Operation Madhouse'. நேரு பொறுப்பை எடுத்துக்கொண்டபோது இந்தியா ஒரு மாபெறும் உள்நாட்டு யுத்தத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருந்தது. ஜின்னாவின் வெறுப்பரசியலால் உருவான பாகிஸ்தான் கருத்தாக்கத்தை சாதகமாகப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபை போன்ற இந்து அடிப்படைவாத இயக்கங்கள் தலைநகரிலேயே வன்முறையை வளர்த்தன. எல்லைப்பகுதி முழுவதும் ஏற்கனவேயே இரத்தம் படிந்திருந்தது. இந்து அடிப்படைவாத இயக்கங்களுக்கு எதிராக நின்றுகொண்டு, காங்கிரஸ் கட்சியையும் கவனித்தபடி, அகதிகளையும் ஏற்றுக்கொண்டு நேரு அரசாங்கம் சந்தித்த அழுத்தங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இதன் பின்னணியிலேயே காந்தி ஏன் நேருவை வாரிசாக அறிவித்தார் என்பதைப் பார்க்கவேண்டும்.
1942-ல் வார்தாவில் கூடிய காங்கிரஸ் காரிய கமிட்டியில்தான் காந்தி தன்னுடைய அரசியல் வாரிசாக நேருவை அறிவிக்கிறார். “என்னுடைய வாரிசு ராஜாஜியோ சர்தார் வல்லபாய் படேலோ கிடையாது. ஜவகர்லாலே என்னுடைய வாரிசு. இப்பொழுது நான் என்ன செய்கிறேனோ, அதை எனக்குப் பிறகு அவர் தொடர்வார். அந்த வேலையைத் தொடர்வது மட்டுமல்ல, நான் பேசுகின்ற மொழியிலேயே அவரும் பேசுவார்”, என்கிறார் காந்தி. அப்பொழுதுதான் வெறுப்பு விதையை ஜின்னா ஆழமாகத் தூவ ஆரம்பித்திருந்தார். தேசம் வன்முறையால் பிளவுபடும் அபாயம் ஏற்பட்டிருந்தது. மேலும் பெண்களையும் ஒடுக்கப்பட்டோரையும் சமமாக, சக மனிதர்களாகப் பாவிக்கும் இந்திய சமூகத்தை உருவாக்கும் அவசியம் இருந்தது. அதுவும் வெவ்வேறு அடையாளங்களையும் கலாசாரங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த இந்தியாவை ஒற்றுமையாக வைத்துக்கொண்டே அந்த சாகசத்தைப் புரிய வேண்டியிருந்தது. எனவே அனைவருக்கும் பிடித்தமான, அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய ஜனநாயகவாதியான நேருவாலேயே இத்தேசத்தை ஒன்றுபடுத்தி, அதில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை சாத்தியப்படுத்த முடியும் என்பது காந்தியின் உறுதியான நம்பிக்கையாக இருந்தது. பிரிவினை காலகட்டத்தில் நேருவையும் கொல்ல முயற்சி நடந்ததை இதனுடன் இணைத்துப் பார்க்கவே வேண்டியிருக்கிறது.
1947 டிசம்பர் 6-ல் கோல்வால்கர் தலைமையில் தில்லிக்கு அருகே கோவர்தன் நகரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தைப் பற்றிக் காவல்துறை அறிக்கை சொல்வது இதைத்தான்: “அக்கூட்டத்தில் எவ்வாறு காங்கிரஸின் முக்கியப் புள்ளிகளைக் கொலை செய்யலாம், பயங்கரவாத சூழலை ஏற்படுத்தி மக்களைக் கட்டுப்படுத்தலாம் என்று விவாதிக்கப்பட்டது”. இரண்டு நாட்கள் கழித்து தில்லியில் கோல்வால்கர் பேசுகிறார், “பாகிஸ்தானை ஒழித்துக்கட்டும்வரை ஆர்.எஸ்.எஸ். ஓயாது. எங்களின் பாதையில் குறுக்கே வருபவர்களுக்கும் அதே கதியை நாங்கள் அளிக்கவேண்டி வரும்; அது நேரு அரசாங்கமாக இருந்தாலும் சரி எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி. முஸ்லிம்களை இங்கேயே இருக்கவைத்தால் பின்னர் நடக்கும் விளைவுகள் எதற்கும் இந்து சமூகம் பொறுப்பேற்காது; அவர்களை ஆபத்தில் வைத்த அரசாங்கமே அவ்விளைவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். இந்துக்களை மகாத்மா காந்தி இனியும் ஏமாற்ற முடியாது. எதிரிகளை உடனடியாக நிசப்தமாக்க எங்களிடம் வழிமுறைகள் இருக்கின்றன”. நேரு அப்பொழுது சில தலைவர்களுக்கு எழுதிய கடிதங்களின் மூலம் நிலைமையின் தீவிரத்தை நம்மால் உணர முடியும்.
சர்வபள்ளி இராதாகிருஷ்ணனுக்கு ஜனவரி 1948-ல் ஒரு கடிதம் எழுதுகிறார் நேரு. “இந்தியாவின் இதயத்திற்கு ஒன்றும் ஆகிவிடவில்லை, ஆரோக்கியமாகத்தான் இருக்கிறது என்று நீங்கள் எண்ணுவதில் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் அதைப் பற்றி சில ஐயங்கள் எனக்குள் எழுந்துள்ளதை நான் ஒப்புக்கொள்ளவேண்டும். அடிப்படையில் அது தூய்மையாகத்தான் இருக்கிறது என்றாலும், சமீப காலங்களில் அதன் மீது பல அழுக்குப் படிவங்கள் படிந்துவிட்டதால் அதன் இதயத் துடிப்பை சமயங்களில் என்னால் சரியாகக் கேட்க முடிவதில்லை. நடக்கும் கொலைவெறித் தாண்டவத்தையும் சக மனித வெறுப்பையும் ஆரம்பித்தது பாகிஸ்தானும் அதன் உருவாக்கத்தின் பின்னணியில் இருந்தவர்களும்தான் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை; ஆனால் அதே வேளையில் இரண்டு தரப்பும் போட்டி போட்டுக்கொண்டு வன்முறையில் ஈடுபட்டிருக்கிறது என்பதையும் மறுக்கமுடியாது. எனவே இதில் எந்தப் பக்கம் நிற்கப் போகிறோம் என்ற கேள்விக்கே இடமில்லை. இப்பொழுது நம் கண்முன்னே இருக்கும் பிரச்னை பாகிஸ்தான் என்ன செய்யப் போகிறது, என்ன செய்யாமல் இருக்கப் போகிறது என்பதல்ல; நம் மக்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதே", என்கிறார். அதற்கு சில நாட்கள் முன்பு இராதாகிருஷ்ணன் ஆர்.எஸ்.எஸ். ஆர்வலர்களுக்கு மத்தியில் அவர்களுக்கு ஒழுக்கம், தியாக மனப்பான்மை, சோதனைகளுக்குத் தாக்குப் பிடிக்கும் பண்பு, தைரியம் ஆகியவை உள்ளன என்று பாராட்டி, அவர்களை தேசிய நீரோட்டத்தில் பொருந்திச் செயல்படுமாறு அறிவுரை கூறியிருந்தார். அதை சுட்டிக் காட்டி நேரு, “நீங்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஊக்குவிப்பதுபோல் பேசியதாக அறிந்தேன்; அதை எண்ணி வருந்துகிறேன். இந்தியாவில் இயங்கி வரும் விஷமத்தனமாக இயக்கங்களில் ஆர்.எஸ்.எஸ். முக்கியமானது. காந்தியின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்து, அவர் தேறி வருகிறார். அவரது உண்ணாவிரதம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது; எல்லை தாண்டி மேற்கு பஞ்சாப் சட்டசபையில் கூட காந்திக்குப் பாராட்டுரை செலுத்தியிருக்கிறார்கள். ஆனாலும் தற்பொழுது இந்தியாவிற்கு வந்துள்ள கேடு எளிதாக சரிசெய்ய முடியாதபடி ஆழமாக வேரூன்றியிருக்கிறது”, என்று கவலைப்படுகிறார்.
இந்து அவுட்லுக் இதழில் ‘காந்தியும் நேருவும் கொல்லப்படவேண்டும்’ என்று முதன்மைக் கட்டுரை வெளிவந்தது. “காந்தியைக் கொன்று, அவரை துண்டம் துண்டமாக்கி நாய்களுக்கும் காக்கைகளுக்கும் உணவாகப் போடவேண்டும்”, என்று ஒரு மொட்டைக் கடிதம் மக்களிடையே பரப்பப்பட்டது. காங்கிரஸ் கட்சியும் இந்திய அரசாங்கமும் இஸ்லாமியர்களுக்கு உதவுகிறது என்று அரசாங்கத் தடையாணையை மீறி இந்து மகாசபை கூட்டங்கள் நடத்தி விமர்சித்தது. காந்தி கொல்லப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு சர்தார் வல்லபாய்க்கு நேரு ஒரு கடிதத்தை எழுதுகிறார். “கடந்த சில வாரங்களாக தில்லியின் பல உருது மற்றும் இந்தி செய்தித்தாள்கள் விஷம் தோய்ந்த எழுத்துகளை எழுதி வருகின்றன. குறிப்பாக காந்தி உண்ணாவிரதம் இருந்தபோது அவற்றை கவனிக்க முடிந்தது; அவற்றில் சில இந்து மகாசபையின் அதிகாரப்பூர்வ இதழ்கள். அவற்றை நம்மால் தடுக்க முடியுமா என்று தெரியாது, ஆனால் நாம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு இது போன்ற பத்திரிகைகள்தான் முழுக் காரணமாக விளங்குகின்றன என்பது உண்மை. இந்து மகாசபையும் ஆர்.எஸ்.எஸ்-உம் போகிற போக்கைப் பார்க்கும்போது, அவர்களிடம் நடுநிலை காட்டுவது கடினமாகிக் கொண்டே வருகிறது.”, என்கிறார். காந்தி கொல்லப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் நேரு மீண்டும் ஒரு கடிதத்தை எழுதுகிறார். “ஐக்கிய மாகாண அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி மிகவும் கவலை தரும் செய்தியொன்றை அனுப்பியிருக்கிறார். பாரத்பூரில் ஆர்.எஸ்.எஸ். ஆட்களுக்குத் துப்பாக்கிப் பயிற்சி அளிக்கப்பட்டதாக அவர்களுக்குத் தகவல் வந்திருக்கிறதாம். அந்த ஆயுதப் பயிற்சியைப் பெறுவதற்காகவே பலர் ஐக்கிய மாகாணத்திற்குச் சென்று, துப்பாக்கியுடன் திரும்புகிறார்களாம். ஐக்கிய மாகாண அரசாங்கம் இதுகுறித்துத் தன் கவலையை நம்மிடம் தெரியப்படுத்துகிறது”, என்கிறார். இதுதான் இந்தியாவின் அப்போதைய நிலைமையாக இருந்திருக்கிறது.
சியாம பிரசாத் முகர்ஜிக்கு காந்தி கொல்லப்படுவதற்கு முன் ஒரு கடிதத்தையும், காந்தி கொல்லப்பட்ட பின் ஒரு கடிதத்தையும் நேரு எழுதுகிறார். இந்து மதவாத அமைப்புகளோடு உறவு பாராட்டுபவர்களும் காங்கிரசுக்குள் இருந்தார்கள் என்பதை உணர்த்தும் மிக முக்கியத்துவம் வாய்ந்த கடிதங்கள் அவை. ‘எவ்வளவு விரைவில் காந்தி சாகிறாரோ, அதுவே நாட்டிற்கு நல்லது’ என்று இந்து மகாசபை அனைத்து மேடைகளிலும் பேசி வந்த பின்னணியில், நேரு எழுதுகிறார், “இந்து மகாசபையின் நடவடிக்கைகளால் நான் மிகுந்த துயரத்தில் இருக்கிறேன். அது அரசாங்கத்திற்கும் காங்கிரசுக்கும் எதிராக மட்டும் செயல்படுவதோடு நிற்காமல், வெறுப்பையும் வன்முறையையும் தொடர்ந்து தூண்டியபடி இருக்கிறது. மிகவும் ஆபாசத்தோடும் அநாகரிகத்தோடும் விஷ வார்த்தைகளால் காந்தியைத் தாக்குவதைத்தான் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ‘காந்தியே செத்துப்போ’ என்று கத்துகிறார்கள். ‘நமது குறிக்கோள் நேருவையும், சர்தார் படேலையும், மௌலானா ஆசாத்தையும் தூக்கில் தொங்க விடுவதே’ என்று இந்து மகாசபையின் ஒரு முக்கியத் தலைவர் கருத்து தெரிவித்திருக்கிறார். பொதுவாக அடுத்தவரின் அரசியலில் நாம் தலையிடக்கூடாது, நமக்கு அது விருப்பமில்லாமல் இருந்தாலும்; ஆனால் அதற்கு ஒரு எல்லை இருக்கிறது, அதனால்தான் இக்கடிதத்தை உங்களுக்கு நான் எழுதுகிறேன். நீங்கள் இந்து மகாசபையோடு நெருங்கிய தொடர்பை வைத்திருக்கிறீர்கள். இந்து மகாசபையின் இப்போக்குக்கு உங்களின் நிலைப்பாடு என்ன என்று அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையிலும் பொதுவெளியிலும் எங்களைக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இதில் எங்களுக்கு இருக்கும் சங்கடமான நிலை உங்களுக்கும் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது என்றாலும், இப்பிரச்னையை எப்படி சமாளிப்பது என்று நீங்களே ஒரு யோசனையை எங்களுக்கு சொல்லுங்களேன்”, என்று கேட்கிறார். தன்னைக் கொல்ல நினைக்கும் அமைப்போடு உறவு வைத்திருக்கும் ஒருவரிடமும் உரையாடவே நினைத்தார் நேரு.
காந்தி கொல்லப்பட்ட பிறகு நேரு இரண்டாவது கடிதத்தை எழுதுகிறார், “சில நாட்கள் முன்பு எழுதிய என் கடிதத்தைப் படித்து, நிகழ்வுகள் செல்லும் போக்கு தங்களுக்கும் வருத்தமளித்து வருவதாகத் தெரிவித்திருந்தீர்கள். தற்போது ஒரு பெரும் துயர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது; இச்சம்பவத்தை மக்கள் இந்து மகாசபையோடு இணைத்துப் பார்க்கிறார்கள். காந்தி கொல்லப்பட்டதற்கு சில இடங்களில் கொண்டாட்டங்கள் கூட நடைபெற்றிருக்கின்றன. அரசியலில் இனி மதவாத இயக்கங்கள் பங்குபெறவே கூடாது என்ற முடிவிற்கு நான் வந்துவிட்டேன்; அவர்களை நாம் எந்த விதத்திலும் ஊக்குவிக்கவே கூடாது. குறிப்பாக உங்களைப் போன்ற ஒரு மத்திய அமைச்சர் இந்து மகாசபையோடு நெருக்கம் பாராட்டுவது உங்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள அனைவருக்கும் பெரும் தலைகுனிவாக இருக்கிறது. அது நம் பொதுக் கொள்கைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக நம் அரசாங்கத்திற்கே எதிரானதும் கூட. உங்களுக்கு நான் அறிவுரை சொல்வதென்பது எனக்கே கடினமான விஷயம்தான், இருந்தாலும் சொல்கிறேன்; இந்து மகாசபை போன்ற மதவாத இயக்கங்களோடு தொடர்பை முறித்துக்கொள்ளுங்கள், அவற்றிற்கு எதிராக வெளிப்படையாகவே உங்கள் குரலை உயர்த்த வேண்டிய நேரம் வந்திருக்கிறது. அவ்வாறு நீங்கள் செய்யும் எந்தக் காரியத்திற்கும் காங்கிரஸ் கட்சியும் இந்திய நாடும் உங்களை மனமார வாழ்த்தும்”, என்று பெரும் மனச்சுமையோடு கடிதத்தை முடிக்கிறார். நேருவின் 1947-48 இப்படித்தான் இருந்தது.
நேரு பல்வேறு பின்னணியிலிருந்து வந்தவர்களோடு இயங்கினார்; பல்வேறு கருத்துகளைக் கொண்டவர்களோடு உரையாடினார். மாநில முதல்வர்களுக்கு மாங்கு மாங்கென்று கடிதங்களாக எழுதித் தள்ளினார்; அவர்களோடு எப்பொழுதும் தொடர்பில் இருந்தார். பல்வேறு தனிப்பெரும் கலாசாரங்களின் கூட்டுத் தொகுப்பாகவே இறுதிவரை இருப்போம் வாருங்கள் என்று அரவணைத்தபடி இருந்தார். நேரு தவறே செய்யாதவர் அல்ல; ஆனால் அத்தவறுகளை விட, நேரு செய்த சாதனைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை; அவை உலகத்திற்கானவை. ‘நேரு தன் தவறுகளைவிட உயர்வானவர்’, என்பார் பிரதாப் பானு மேத்தா. இன்று போலி மதச்சார்பின்மைக்கு எதிராகப் பேச வேண்டிய தேவை இருக்கும் அதே சமயத்தில், இந்துத்துவம்தான் செக்யூலர் என்றும், போகிற போக்கில் மற்றவர்களை ‘சிக்யூலர்’ என்று கடப்பதும் நேருவிய மதச்சார்பின்மையின் பயன்களை அனுபவித்தபடியே அக்கருத்தாக்கத்தை நிராகரிக்கும் செயலாகும். கணிக்க இயலாத நிலையற்றதொரு சமூகத்தில் வருங்கால சந்ததியினரைத் தள்ளிவிட நாமும் துணைபோனவர்களாக ஆகிவிடக்கூடாது. இன்று வளர்ந்து வரும் அடிப்படைவாதத்திற்கு எதிராக நேருவிடம் நிரம்பப் பதில்கள் இருக்கின்றன; அவரை நாம் துணைகொள்ள வேண்டும். இன்று நேருவின் நினைவு நாள்.
(26/05/17 அன்று ‘தி இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான ‘நேருவை நாம் ஏன் துணைகொள்ள வேண்டும்?’ கட்டுரையின் முழு வடிவம் இது.)
References:
Selected Works of Jawaharlal Nehru II Vol 5
A Brief History of India - Judith E. Walsh
Army and Nation: The Military and Indian Democracy Since Independence - Steven Wilkinson
The Guru of Hate - Ramachandra Guha (The Hindu)
Comments
Post a Comment