Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

கடிதம் - நேருவை துணைகொள்ளல்

Anonymous
16th May, 2017

//நேருவின் நிர்வாகத் தவறுகளை விட நேருவின் சாதனைகள் இந்திய ஜனநாயகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை// [நேருவைத் துணைகொள்ளல்]. நிர்வாகத் தவறு என்பது சரியல்ல. 2017ல் நாம் வசதியாக உட்கார்ந்துகொண்டு பேசலாம். அன்றைக்கு இருந்த நிலைமையை கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். முன்மாதிரியாக நேரு எதை வைத்து அரசாண்டார்? தேசத்துக்கு எது நல்லது என உகந்த வழியே நடந்தார். அதை மீறி கண்டிப்பாக சில தவறுகள் இருக்கத்தான் செய்யும்.


-------------------------------------------------------------


Vishnu Varatharajan
16th May, 2017

ஒரு வரலாற்று மாணவனாக இன்றுவரை என்னை நேருவியன் என்றே அழைத்துக்கொள்ள விரும்புகிறேன். இந்தியாவில் எனக்கு மிகவும் பிடித்த (ஒப்பிட முடியாது என்றாலும் மனதிற்குள் காந்தியை விட ஒரு படி மேலாகவே) தலைவர் நேருதான். எனவே உங்கள் வார்த்தைகள் மனதிற்கு இதமாகவே இருக்கிறது. ஆனால் நேரு மீதான அவதூறுகளுக்கு மாற்றாகத் தவறுகளற்ற நேருவை முன்வைக்க விரும்பவில்லை. நேருவை whitewash செய்வதன் மூலம் அவரிடமிருந்து மக்களை விலகவே வைப்போம் என்று நினைக்கிறேன். இந்தியா போன்ற ஒரு பன்முகத்தன்மை கொண்ட தேசத்தை எவ்வாறு ஆள்வது என்று அறிய நேருவுக்கு முன்மாதிரியாக எதுவும் இல்லை; உலகிலிருந்து ஆறுதலான நம்பிக்கையான போக்குகளும் எதுவும் இல்லை. வளர்ச்சியைப் பார்ப்போம் என்றால் நீ அமெரிக்கா கட்சியா சோவியத் கட்சியா என்று புவியரசியல் வேறு வம்புக்கு இழுத்தது. மற்றொருபுறம் உள்நாட்டில் அரசியல் இணைப்பைப் பார்க்க வேண்டியிருந்தது. உணவுப் பற்றாக்குறையைத் தீர்க்க வேண்டியிருந்தது. நேரு செய்தது அளப்பரிய சாதனைதான். 33% ராணுவத்தைப் பெற்ற பாகிஸ்தான் அதனை மொத்தமாக காஷ்மீரில் இறக்கியபோது நமக்கு ஹைதராபாத், வடகிழக்கெல்லை ஆகியவற்றையும் கவனிக்க வேண்டியிருந்தது, மேலும் இந்தியாவுக்கு வந்த அகதிகளின் எண்ணிக்கை அதிகம், ஒரு போருக்கு இந்தியா தயாராகாத சூழல்; அதன் பின்னணியில் ஐநாவிடம் நேரு சென்றதைக் கூட நாம் நியாயப்படுத்தலாம் (தனிமையில் நண்பர்களோடு அதை செய்வேன்). ஆனால் வரலாறு கொஞ்சம் குரூரமாகவே இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ‘என்ன செய்வது, இதைத்தான் செய்ய முடிந்தது, இவற்றை செய்யாமல் விட்டிருந்தால் நிலைமை இன்னும் மோசமாகியிருந்திருக்கும்’ என்ற வாதம் ஒரு நேருவின் விசிறியாக எனக்குக் குளிர்ச்சியைத் தருகிறது. ஆனால், அந்த சவாலான காலகட்டத்தில் இழப்புகள் தவிர்க்க முடியாததே என்றாலும், இழப்புகளை முடிந்தவரை குறைக்க நேரு உழைத்தார் என்றாலும், அதை ஜனநாயக ரீதியில் எல்லோரையும் கூட வைத்துக்கொண்டே வேறு சாதித்தார் என்றாலும், ஏற்பட்ட இழப்புகளுக்கு எப்படியும் ஒரு தலைவர் பொறுப்பேற்கத்தான் வேண்டும், அதுதான் நீதியும் கூட; எல்லோரும் ஏற்றுக்கொள்ளும், எல்லோரும் மன்னித்துவிடும் ஒரு தலைவராக இருக்கவே முடியாது என்பதை உணர்ந்த ஒருவரால்தான் ஒரு statesman-ஆக இருக்க முடியும். தன்னை நியாயப்படுத்த நேருவே விரும்ப மாட்டார் என்று நினைக்கிறேன்.

மற்றபடி நேருவுக்கு பதில் பட்டேல் வந்திருக்கணும், நேரு பொருளாதாரத்தை அழித்துவிட்டார், நேரு குடும்பம் நாட்டைக் கெடுத்துவிட்டது என்பது போல் யாராவது கிளம்பினால் நேரு சார்பாக இறங்கி விவாதிக்க வேண்டியதுதான். காஷ்மீர் பிரச்னையில் நேரு தவறிழைத்துவிட்டார் என்றால் நான் எதுவும் பேசமாட்டேன். இன்றைய காஷ்மீர் பிரச்னைக்கே நேருதான் காரணம் என்றால் அப்பொழுது விவாதத்தில் இறங்குவேன்.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி