Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

கடிதம் - இடைநிலை சாதிகளின் ஆதிக்கமும் திராவிட இயக்கமும்

Anonymous
29th May, 2017

விஷ்ணு, நேற்று Quora வலைதளத்தில் திராவிட இயக்கம் பற்றி ஒரு பதிவு படித்தேன். அதில் பரம்பரை பரம்பரையாக நிலம் வைத்திருந்தவர்களான நாயக்கர்,செட்டிகள், ரெட்டிகள் தங்களுக்குக் கீழே ஏழைகளாக வேலை பார்த்த பிராமணர்கள் ஆங்கிலேய படிப்பால் தனக்கு சரிசமமாக வந்தது பிடிக்காமல், அவர்களை எதிர்க்கத் துவங்கப்பட்டது தான் திராவிடர் இயக்கம் - என்று ஒரு கருத்து இருந்தது. இப்போது தமிழகத்தில் நிலவும் OBC domination மற்றும் நடுநிலை சாதிகள் செய்யும் casteism இவற்றை பார்க்கும் போது இக்கருத்து சரி என்றே தோன்றுகிறது. நீ என்ன நினைக்கிறாய்? இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த செயற்கையான பிராமணர்-பிராமணரல்லாதோர் பிரிவை வைத்துக்கொண்டிருக்கப் போகிறோம்?


---------------------------------------------------------------------------------------------


Vishnu Varatharajan
29th May, 2017

திராவிட இயக்கத்தில் ஆரியர்-திராவிடர் என்ற இனம் சார்ந்த, அறிவியல் பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படாத கருத்தாக்கம் வலுப்பெறத் துவங்கியது பெரியாரோடுதான். அதற்கு முன்பு பிராமணர்-பிராமணரல்லாதோர் பிரிவு இனம் சார்ந்த ஒன்றல்ல. காலனிய அரசாங்கத்தில் கிளார்க்கு வேலைகளைப் பார்க்கத்தான் இந்தியர்களுக்கு ஆங்கிலக் கல்வியைப் பரிந்துரைத்தார் மெக்காலே. அதை பிராமணர்கள் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். அறிவு என்பதைப் புத்தகக் கல்வியால்தான் முதன்மையாகப் பெற முடியும் என்ற முறையைக் கொண்டு வந்தது பிராமணர்களுக்கு இன்னும் அனுகூலமாய் இருக்கிறது, என்ற வாதத்தை மனித உரிமை செயல்பாட்டாளர் கண்டல்ல பாலகோபால் முன்வைக்கிறார். அரசாங்கப் பணிகளில் பிராமணர்களே பெரும்பான்மையாக இருந்தார்கள். காலனிய ஆட்சிக்காலத்தில் நிலம் வைத்திருந்தவர்கள் செழிப்புடன் இல்லை (அவர்களே இப்படியென்றால் தாழ்த்தப்பட்டோர் நிலை இன்னும் மோசம்). ஒரு நூற்றாண்டு காலம் தொடர்ந்த அம்முறையால் இடைநிலை சாதிகளின் சமூகக் குறியீடுகள் பாதிக்கப்பட்டன. இதன் பின்னணியில் இந்தியாவில் பிராமணர்களுக்கே அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும் நிலை இருக்கிறது என்று தென்னிந்திய நலவுரிமை சங்கத்தின் டி.எம்.நாயர், தியாகராய ரெட்டி, நடேச முதலியார் போன்றவர்கள் குரல் எழுப்பினர். சிறிது சிறிதாக ஆங்கிலேய அரசாங்கம் அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில், சுதேசி இயக்கத்தின்மூலம் பெயர் பெற்ற திலகரின் பின்னால் சித்பவன் பிராமணர்கள் அணி திரண்டார்கள். தெற்கே ஹோம் ரூல் இயக்கத்தின் போது அன்னி பெசன்ட் பின்னே பிராமணர்கள் அரசியல் அதிகாரம் பெற ஒன்று திரண்டார்கள். அந்த அரசியல் அதிகாரத்தை பிராமணரல்லாதோரும் பெற வேண்டும் என்ற நோக்கில்தான் ஜஸ்டிஸ் கட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்றது. இதற்குப் பின்னால் பிராமண வெறுப்பு conspiracy theory-களை உருவாக்குவது எல்லாம் ‘தமிழனுக்கு எதிராக செயல்படுகிறார்கள்’ என்று முழங்கும் சீமான் போன்றவர்களின் வகையறாவில்தான் சேர்த்தி.

இங்கு பிராமணரல்லாதோர் ஒரு இயக்கமாக அணிதிரள்வதற்கு முன்பே தலித் இயக்கம் துளிர் விடத் துவங்கிவிட்டது. அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன் போன்றவர்களின் பணிகளை திராவிட இயக்கத்திற்கு முன்னோடிப் பணிகள் என்றே சொல்லலாம். எனவே பிராமணர்கள் மட்டும்தான் சாதி பார்த்தார்கள், இடைநிலை சாதி மக்கள் ஒழுக்க சீலர்கள் என்றெல்லாம் இல்லை. ஆனாலும் இடைநிலை சாதிகள் நிகழ்த்தும் சாதியம், 'பார்ப்பனீயம்' என்றுதான் அழைக்கப்படுகிறது. பார்ப்பனீயம் குறித்து அம்பேத்கரின் 'Castes in India: Their Mechanism, Genesis and Development' என்ற கொலம்பியா பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வுக்கட்டுரை விரிவாக விளக்குகிறது. பார்ப்பனன் என்னும் ஜாதியைச் சேர்ந்த அனைவரும் தாழ்த்தப்பட்டோர் மீது நிகழ்த்துவதற்குப் பெயர்தான் பார்ப்பனீயம் என்று இன்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, 'நவபார்ப்பனீயம்' என்ற சொல் சில அறிவுஜீவிகளால் எதிர்க்கப்படுகிறது. ‘இஸ்லாம், கிருத்துவம் அல்லாதவர்கள் இந்துக்கள்’ என்று ஆங்கிலேயர்கள் அளித்த எதிர்மறை அடையாளம் இன்று நிலைபெற்றுவிட்டதால், அது பிராமண எதிர்ப்பு கோஷமாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. மாறாக, சைவம், வைணவம், காணாபத்யம் போல் ஸ்மார்த்தர்களைக் கொண்ட நிறுவனமயமான கருத்தாக்கமே பார்ப்பனீயம், அவற்றை எல்லாம் இந்துமதம் என்று ஒன்றாக்கிவிட்டார்கள் என்பது தொ.பரமசிவன் போன்ற சமூகவியல் அறிஞர்கள் முன்வைக்கும் வாதம் (1. இதுகுறித்த காந்தி-பெரியார் விவாதம் சுவையான ஒன்று, 2. இது புரியாமல் முற்போக்காக சிந்திக்கும் பிராமணர்கள் கூட இன்று பிராமணீயம் என்றதும் அது தங்களின் சாதியைக் குறிக்கிறதோ, இவர்கள் இப்படித்தான் என்று பொதுப்புத்தியைக் கட்டமைக்கிறார்களோ என்று பதட்டம் அடைகிறார்கள். பார்ப்பன வெறுப்பு அதீதமாய் இருக்கிறது என்ற அவர்களின் பாதுகாப்பின்மை உணர்வு அந்தப் பதட்டத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம்). இடஒதுக்கீடு போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை ஜஸ்டிஸ் கட்சி அறிமுகம் செய்தது(தலித்துகளுக்கு ஏன் இடஒதுக்கீடு இல்லை என்று எம்.சி.ராஜா குரல் எழுப்பினார்). பிறகு பெரியாரும் பார்ப்பனீயத்திற்கு எதிராக நெடும் போராட்டத்தை நடத்தினார். என்ன, ஒரே ஒரு பிரச்னை. பார்ப்பனீயத்தை எதிர்த்ததோடு நில்லாமல் ஆரிய-திராவிட இனவாதத்தை எழுப்பி பார்ப்பன வெறுப்புக்கு வழிகோலினார். அதை நாம் இன்று விமர்சிக்கும் வேளையில், அதைத் தாண்டி சமூக முன்னேற்றத்தில் பெரியாரின் பங்களிப்பு மகத்தானது என்பதையும், தமிழகத்திற்கு இன்று அதிகமாகத் தேவைப்படும் தலைவராக பெரியாரே இருக்கிறார் என்பதையும் இணைத்தே பார்க்க வேண்டும்.

திராவிட இயக்கத்தைப் பெரியாருக்கு முன், பெரியாருக்குப் பின் என்று இரண்டாக வகுக்கலாம். பெரியாருக்கு முன் பிராமணரல்லாதோர் என்ற பிரிவு சமூகக் குறியீடுகளில் முன்னேற வேண்டும் என்றும் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்றும் இயங்கியது (“ஆண்ட பெருமைடா! பழைய பெருமையை மீட்க வேண்டும்டா” போன்ற எந்த கோஷமும், கருத்தும் எழும்பியதாக சான்றுகள் இல்லை. பெரியாரின் போதும் இல்லை). பெரியார் வந்தபிறகு திராவிட இயக்கம் சாதி மறுப்பை ஒரு கொள்கையாக ஏற்றுக் கொண்டது, மேலும் தாழ்த்தப்பட்டோரையும் இணைத்ததாக அது இருந்தது. அதே காலகட்டத்தில் பூனா ஒப்பந்தத்தின் மூலமும் 1930-களில் காந்தியின் செயல்பாடுகள் மூலமும் தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியாகக் காங்கிரஸும் வரிசையில் நின்றுகொண்டது(காங்கிரஸ் ஆட்சியில் மந்திரியாக எம்.சி.ராஜா இருந்தார்). ஆனால் திமுக மூலம் தேர்தல் அரசியலில் காலடி எடுத்து வைத்த திராவிட இயக்கம் பெரியாரின் சாதி மறுப்புக் கொள்கையை அதே வீச்சில் பின்பற்றவில்லை. அதிகாரமும் ஓட்டரசியலும் கடந்த ஐம்பதாண்டுகால தமிழ்நாட்டில் இடைநிலை சாதிகளை வலுப்பெற வைத்திருக்கின்றன (இதன் பின்னணியில்தான் 1990-களில் அம்பேத்கர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின்போது தமிழகத்தில் தலித் மறுமலர்ச்சி இயக்கம் வலுவாகத் தோன்றியது). எனவே இன்றைய இடைநிலை சாதிகளின் ஆதிக்கத்தை திராவிட இயக்கத்தினுடைய தேர்தல் அரசியலின் விளைவாகத்தான் பார்க்கவேண்டுமே தவிர, இதில் பெரியாரையும் மொத்த திராவிட இயக்கத்தையும் காரணமாக்கி எளிமைப்படுத்துவது மேம்போக்கானது. பிராமண வெறுப்பிற்குப் பெரியாரை விமர்சிக்கிறோம் என்ற பெயரில் திராவிட இயக்கத்தின் தோற்றத்திற்கே சாதி ரீதியான பிராமண காழ்ப்பு தியரியை உருவாக்குவது எல்லாம் குறுகிய சிந்தனையே.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி