Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

கடிதம் - காந்தியின் முன் இருந்த காரணிகள்

Vignesh K.R.
5th May, 2017

இந்துத்வா குறித்த ஆசையின் கட்டுரையை வாசித்தேன். மதநல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய ஒரு தார்மீகக் கடமை தனக்கிருப்பதாக காந்தி எண்ணியதன் விளைவுதான் அவர் இந்து மத அமைப்புக்குள்ளேயே நீடித்து இருந்து சாதியை எதிர்க்க நினைத்தது எனத் தோன்றுகிறது. எதையும் விலக்கவோ புறக்கணிக்கவோ தயங்காதவராகவே காந்தி இருந்திருக்கிறார்; ஆனால் இந்து என்ற தன்மையிலிருந்து விலகினால் தன்னை ஒரு இந்துவின் பிரதிநிதியாக முன்நிறுத்திக் கொள்ள முடியாது. 1940-களில் சாதிக்கு எதிரான மனநிலையைக் கொண்டுவிட்ட அவர், அமைப்பிற்குள்ளேயே நீடித்து செயல்பட மேற்சொன்னதும் ஒரு சிறு காரணியாக இருந்திருக்கலாமென நினைக்கத் தோன்றுகிறது. நீ என்ன சொல்கிறாய்?


------------------------------------------------------------------------------------------------------------------------


Vishnu Varatharajan
5th May, 2017

ஆம். முன்பொரு விவாதத்தில் இது விவாதப் பொருளாக வந்தது. அரசியலதிகாரத்தை வன்முறையின் மூலமாகப் பெற முயன்றால் ஆதிக்க சாதியினர் எளிதாக அதை அடக்கி விடுவார்கள் என்பதில் அம்பேத்கர் தெளிவாக இருந்தார். அதே நேரத்தில் காந்தி ஏன் இந்த மதத்தைப் பிடித்து இப்படித் தொங்கிக்கொண்டிருக்கிறார் என்பதுதான் அம்பேத்கரின் வருத்தமாக இருந்திருக்கிறது. எரவாடா சிறையில் “எங்கள் தலைவராக ஆகுங்கள் காந்தி”, என்றார் அம்பேத்கர். ஆனால் காந்திக்கு அனைவரையும் இணைத்துக்கொண்டு இயங்கும் தேவை இருந்தது. ஏனென்றால் காங்கிரஸில் இருந்த பார்ப்பனர், பனியா உறுப்பினர்களைப் பகைத்துக்கொண்டால் காங்கிரஸ் நடத்தும் சுதந்திரப் போராட்டம் தொய்வடையும். அவர்களில் நிறைய பணக்காரர்கள் இருந்தார்கள், எனவே காங்கிரசுக்கு வரும் நிதியும் குறையும். மேலும் மதப்பிளவு நிகழ்ந்தால் “தலித்துகள் இல்லையென்றால் என் மலத்தை அள்ளுவது யார், என் அப்பனின் பிணத்தை எரிப்பது யார்” என்ற சாதிப்புத்தி துருத்திக்கொள்ள உடனடியாக வன்முறை வெடிக்கும். இந்தியப் பிரிவினையின்போது அந்தக் கலவரமான சூழலிலும் தலித்துகள் பெரிதாக பாதிக்கப்படவில்லை என்று ஆவணப்படுத்துகிறார் ஊர்வசி புட்டாலியா. எல்லாவற்றிற்கும் மேலாக வன்முறையைக் காரணம் காட்டி ஆங்கிலேய அரசாங்கம் மேலும் ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடும், ஆனால் இம்முறை அதை எதிர்கொள்ள இங்கு ஒற்றுமை இருக்காது.

இவையெல்லாம் காந்தியின் முன் இருந்த காரணிகள். இவற்றையெல்லாம் விட்டுவிட்டு தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியாகத் தன்னை அறிவித்துக்கொள்ள வேண்டாம் என்று காந்தி முடிவு செய்தார். இறுதிவரை இருக்கிற அமைப்புகளுக்கு உட்பட்டு தாழ்த்தப்பட்டவர்களின் நண்பராக இருந்தார்.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி